பல அமைச்சர்கள் பல அதிகாரிகள் என பலராலும் பல வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த அரசிடமும் நாம் ஏமாற தயாராக இல்லை.
இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் மறுநாள் எமது குடியிருப்பு மீது குண்டு வீசி துரத்தப்பட்டோம்.
இன்று வரை நாம் தொடர்ச்சியாக பலவற்றை இழந்த வண்ணமுள்ளோம். இனியும் நாம் அதற்கு தயாராக இல்லை என்று சம்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமி நாதனின் அறிவிப்பை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து அவர்களின் கருத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
ஆயினும் இந்த நூறு நாட்களுக்குள் நாம் எமது சொந்த இடமான சம்பூருக்குச் செல்ல வேண்டும். இது தொடர்பாக கடந்த ஒன்பது வருடங்களாக நாம் படுமோசமாக கடந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளோம். இதனால் உணவு உட்பட சகலவற்றையும் இழந்த ஜடங்களாக நாம் அலைகின்றோம் என்றும் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில் வடகிழக்கின் இறுதி யுத்தம் முதலில் எம்மீதே திணிக்கப்பட்டது. இதில் அகப்பட்டு உடுத்த உடுப்போடு துரத்தப்பட்ட நாம் இன்று பல இழப்புக்களுக்கு மத்தியில் எமது விருப்பத்திற்கு மாறாக எமது காணிகளையும் இழந்து நிற்கிறோம்.
அயல் கிராமங்களின் மீளக்குடியேறியோர் வைத்த தென்னை காய்கிறது எமது வாழ்விடங்களில் இருந்த தென்னை உள்ளிட்ட பயிரினங்கள் வீடுகள் என சகலவையும் புல்டோஸர் போட்டு அழிக்கப்பட்டுள்ளன.
பூர்வீக விவசாயிகளான எமது மூதாதையர்கள் மூலம் 72 இற்கும் அதிகமான குளங்களையும் பல ஆயிரம் வயல் நிலங்களையும் கொண்டு தொழில் செய்தார்கள். இன்று வெறும் உலர் உணவு கூட இல்லாமல் பரிதவிக்கின்றோம்.
திருகோணமலையில் 200 மீற்றருக்கு ஒரு படை முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில் பல கல்விமான்களை உருவாக்கிய எமது பாடசாலையில் கடற்படை முகாம் அமைத்துள்ளது. பல அரச காணி இருக்கையில் எமது பாடசாலைதான் அவர்களுக்கு தேவைப்பட்டுள்ளது.
இவ்வாறு எந்த அனுமதியும் இன்றி சுமார் 217 ஏக்கர் காணிகளை அவர்கள் வைத்துள்ளனர். அவை அனைத்தும் மக்களின் வாழ்விடங்கள் முதலீட்டு சபைக்கென 818 ஏக்கரை எமது விருப்பத்திற்கு மாறாக சுவீகரித்துள்ளனர். இதில் 218 குடும்பங்களின் பூர்வீக காணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
அனல் மின் நிலையத்திற்கென 505 ஏக்கரும் மின்சார சபைக்கென 40 ஏக்கரும் எடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் 2 அடி ஆழத்தில் சுத்தமான நீரைக் கொண்ட வாழ்விடங்கள். இவற்றையெல்லாம் விட்டு விட்டு தண்ணீர் இல்லாத மலைக்காடுகளில் வெறும் 20 பேர்ச் காணி வழங்கி தள்ளிவிட மனிதாபிமானமற்ற வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏக்கர் கணக்கில் வயல் வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களை செய்து வாழ்ந்த நாம் 20 பேர்ச்சில் என்ன செய்வது? கால்நடை வளர்ப்பு மீன் பிடி என்பனவற்றையும் எங்கு சென்று செய்வது?
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட இழந்தவை சகலதையும் பெற்று விட்டார். நாம் இழந்தவற்றை இந்த100 நாள் திட்டத்தில் அரசு செய்ய வேண்டும்.
இல்லையேல் இனியும் எம்மால் பொறுமை காத்து முகாம்களில் முடங்க முடியாது. பாதுகாப்புக்காகவோ தொழில் திட்டத்திற்கோ எடுப்பதற்கு அயல் பகுதிகளில் பல அரச காணிகள் உள்ளன.
நாம் எமது மூதாதையர்கள் பண்படுத்தி எமக்காக விட்டுச் சென்ற வாழ்வாதாரமான இக்காணிகளாக வைத்திருப்பது மிகவும் அநியாயமான செயலாகும்.
எனவே புதிய அரசும் அமைச்சரும் மீண்டுமொரு முறை எம்மை ஏமாற்றக் கூடாது. எம்மால் இழக்க இனி எதுவும் இல்லை. மேலும் ஏமாறத்தென்புமில்லை. எமது சொந்த மண்ணில் நாம் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் விபரித்தனர்.
புதிய அரசின் நடவடிக்கை தொடர்பாக விபரித்த போதே இக்கருத்துக்களைத் தெரிவித்தனர். இவர்கள் நான்கு முகாம்களில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
………………….……………………………………
கூட்டமைப்பினராகிய “நாங்கள் சொல்லித்தான்.. வட,கிழக்கு தமிழ் மக்கள் மைதிரிக்கு வாக்களித்ததாக சொல்லித்திரியும் மாவையார் சம்பூர் மக்களின் வாழ்வுரிமைக்காக அவர்களுடன் சேர்ந்து தெருவில் இறங்கி போராடுவாரா?
சம்பூரில் அனல் மின் நிலையம் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முடிவானது இந்தியாவின் ஒரு ஆக்கிரமிப்பு செயலாகும். கூட்டமைப்பினர்கள் இந்தியாவின் கைகூலிகளாகவே செயல்படுபவர்கள். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டார்கள்.
இவற்றை உடனடியாக அகற்றி உரிய நிலங்களை சொந்தமான மக்களுக்கு வழங்க வேண்டும். வடக்கில் தேவைக்கு அதிகமாக இருக்கும் இராணுவத்தினரையும் இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டுமென ஜே.வி.பினர் குரல் கொடுக்கின்றார்கள். அதேநேரம் ஜே.வி.பியினர் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்கள்.
தமிழ் மக்கள் ஜே.வி.பியினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும். தமிழ் தலைமைகளை நம்பினால் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.