நமது நாட்டில் அரசியலில் ஏற்பட்ட பாரிய மாற்றத்துடன், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் பல சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் குறுஞ்செய்திகளாக 22வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு என்ற ஒரு செய்தியும் வந்து சேர்ந்தது.
வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி சொகுசு தொடர்மாடியில் சம்பவம் நேர்ந்தது. பாடசாலை விடுமுறை நாட்களைக் கழிக்க பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
பாடசாலை விடுமுறை எனினும் பெற்றாருக்கு விடுமுறை இல்லாவிட்டால், வீட்டுக்கு அண்மித்த இடத்தை, அல்லது உறவினர்களின் வீட்டை தெரிவு செய்து கொள்வார்கள்.
இவ்வாறு தாம் தெரிவு செய்யும் இடத்தில் தமது பிள்ளைகளின் மரணம் இருப்பதாக அறிந்து கொண்டால், கோடி செல்வம் கிடைத்தாலும் எந்தப் பெற்றோராவது அப்படியான இடத்தை தெரிவு செய்வார்களா?
வத்தளை மாபோலை, குணதிலக்க மாவத்தையில் இருக்கும் வர்த்தகர் முகம்மது நெளசாத் தனது மனைவி பிள்ளைகளுடன் கடந்த வார விடுமுறை நாட்களைக் கழிக்க தனது மைத்துனரின் (மனைவியின் சகோதரன்) வீட்டை தெரிவு செய்கிறார்.
கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெவ்லொக் சிட்டி சொகுசு தொடர்மாடி குடியிருப்பில்தான் மைத்துனரின் வீடு அமைந்திருந்தது.
வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு இரண்டு தொகுதிகளைக் கொண்டது. இதில் 22 மாடிகள் வானை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டு கம்பீர தோற்றத்தில் இரண்டு தொகுதிகளும் காட்சி தந்து கொண்டிருந்தன.
இதில் “எலிபேன்க்டவர்” என்ற தொகுதியில் 11வது மாடியில் தான் நெளசாத் என்பவரின் மைத்துனர் வசித்தார்.
முகம்மது நெளசாத் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடனுமாக உறவினர் வீட்டில் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க என அழைத்து வந்தார். நெளசாத் வியாபார நிமித்தம் வெளியில் சென்று விடுவார்.
அன்று சனிக்கிழமை (24ம் திகதி) பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வழமை போல் விளையாடுவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த தொடர்மாடிக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக்கு சென்றுள்ளார். அங்கு பிள்ளைகள் ஒருவரை அடுத்து மற்றொருவராக சைக்கிள் ஓட்டி உல்லாசமாக பொழுதைப் போக்கினர்.
இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த வேளை நான்கு வயதையுடைய பாத்திமா சப்னாவுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.
தாயாரிடம் குடிக்க தண்ணீர் கேட்கவே சப்னாவின் மூத்த சகோதரியான சமிலா (8 வயது) அம்மாவின் கட்டளைக்கு பணிந்து தண்ணீர் எடுத்து வர சென்றார். சப்னாவும் கூடவே சென்றுள்ளார்.
இரண்டு சகோதரிக்கும் 11வது மாடியிலுள்ள வீட்டுக்கு லிப்ட்டில் (மின்னுயர்த்தி) மூலமாக செல்கின்றனர். 11வது மாடிக்கு வந்ததும் சமிலா வெளியே வரும் போது தங்கைக்கு பொத்தானைக் காட்டி இதை அழுத்திப் பிடித்துக் கொள்ளும், நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு உடன் வந்து விடுகிறேன்.
அப்போது இதிலே திரும்ப சென்று விடலாம்” என்று கூறினார். இதன் பின் நடைபெற்றது என்ன? பொலிசார் திணறுகின்றனர். இவ்வாறு நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
“நான்கு வயது சப்னா அறிந்தோ அறியாமலோ பொத்தானை கைவிட்டிருக்கலாம், “லிப்டின்” கதவுகள் தானாகவே மூடிக்கொள்ள அது இறுதி மாடியான 22வது மாடிக்கு போனதும், கதவு திறந்து கொண்டிருக்கலாம்”
லிப்ட்டின் கதவுகள் மூடப்பட்டதும், அந்த சிறு இடத்தில் சிறுமி தன்னந்தனியே அடைபட்டு அந்த கதவுகள் மீண்டும் திறந்து கொள்ளவே, அது எத்தனையாவது மாடி என்பதைப் பாராமல் சிறுமி சப்னா வெளியெ ஓடி தனது சகோதரியை தேடி இருக்கலாம்.
சுற்றிப் பார்க்கும் போது வெளியில் சென்ற தனது சகோதரியைக் காணாததால் எப்படியும் கண்டுபிடிக்க எடுத்த முயற்சி இறுதியில் இத்துயரத்திற்கு வித்திட்டிருக்கலாம்.
சுற்றிவர உயர்ந்த மதில்கள் இருக்க ஓர் இடத்தில் நன்கு வெளிச்சம் தெரியும் சிறிய மதில் காணப்படவே எப்படியும் எட்டி சகோதரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த சிறிய மதிலை எட்டியது அவளுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்திருக்கலாம்.
சப்னா லிப்ட்டில் மேல் நோக்கி சென்றதும் சீ.சீ.ரீ.வி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் ஏனையவை எதுவும் பதிவு செய்யப்படாமை தான் திணறலுக்கு காரணமாக இருக்கலாம்.
தண்ணீருடன் லிப்டுக்கு அருகில் வந்த சமிலா லிப்ட் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். சகோதரியைக் காணவில்லை. மேலே சென்றாளா? கீழே சென்றாளா? கீழே சென்று தாயாரிடம் விபரிக்கவே பதறிக் கொண்டு தேட ஆரம்பித்தனர்.
எங்கு தேடியும் பலனளிக்காத நிலையில் விளையாடிக் கொண்டிருந்த பூங்காவின் வெளிப்பகுதியில் சப்னா இரத்தம் பீறிட்ட நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.
தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சப்னா தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாள். நள்ளிரவில் மரணமான சப்னாவின் உடல் கொழும்பு தெற்கு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது.
மரண விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் இந்த மாடி வீட்டுத் தொகுதி சரியான பாதுகாப்பை பேணி நிர்மாணிக்கப்படவில்லை என்றும், சகல மாடிகளிலும் வெளி மதில்கள் மேலும் 1 1/2 அடியளவில் உயர்த்தப்பட வேண்டும் எனவும் கட்டடட பொறுப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
சப்னாவின் மரணம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சகோதரி சாட்சியம்
ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சப்னாவுக்கு தாகம் ஏற்படவே தண்ணீர் பெற்றுக் கொடுக்க சப்னாவை அழைத்துச் சென்ற அவளின் சகோதரி சமிலா (7) மரண விசாரணையின் போது,
“இறந்து கிடப்பது எனது சகோதரி (தங்கை) எனக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். நாம் விடுமுறை கழிக்க கொழும்பு மாமாவின் வீட்டுக்கு வந்தோம். விளையாடச் சென்றோம். அதுவும் தங்கையின் வேண்டுதலுக்கிணங்கவே விளையாடச் சென்றோம்.
தங்கைக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அம்மாவின் பணிப்பிற்கமைய தண்ணீர் எடுத்து வர செல்லும் போது தங்கையும் என்னுடன் வந்தார்.
லிப்ட்டில் சென்றோம். 11வது மாடிக்கு சென்றோம். அங்கு நான் இறங்கிக் கொண்டு, லிப்ட்டை ஹோல்ட் பண்ணிக் கொள்ளுமாறு கூறி தண்ணீர் எடுத்துவர சென்றேன்.
தண்ணீர் எடுத்துவரும் போது லிப்ட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. தங்கையைக் காணாததால் நான் பயந்து போனேன். கீழே போகும் போது இடையில் அம்மாவிடம் கூறினேன்.
கீழே போய் பாதுகாப்பில் இருந்த சிக்கியுருட்டி அங்கலிடம் சொன்னேன். அவர்களும் தேடினார்கள். இறுதியில் தங்கை இரத்த வெள்ளத்தில் விழுந்து இருப்பதைக் கண்டேன். உடனே அம்பியுலன்ஸ் வண்டியில் தங்கையை எடுத்துச் சென்றார்கள்.” என்று நா தழுதழுக்கச் சொன்னார்.
கொழும்பு தெற்கு அரச பெரியாஸ்பத்திரியின் திடீர் மரண விசாரணை அதிகாரி உபாலி பெரேரா ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீர பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
மாடி வீட்டின் உயரத்திலிருந்து விழுந்ததில் மண்டையோட்டில் ஏற்பட்ட பாரிய காயத்தினாலும், உட்காயத்தினாலும் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
சப்னாவின் தாயாரான பாத்திமா சபீக்கா நெளசாட் சாட்சியமளித்தார்.