லக்னோ : ‘காதலர் தினத்தன்று பொது இடங்களில் காதலர்களை கண்டால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். மறுத்தால் பெற்றோருக்கு தெரியப்படுத்துவோம்‘ என இந்து அமைப்பு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதியை ‘வேலன்டைன்ஸ் டே‘ ஆக உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த தினத்தில், காதலை சொல்வது, காதலிக்கு ரோஜா, பரிசுகளை கொடுத்து அசத்துவது போன்றவற்றில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
இது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து காதலர்களுக்கு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
காதலர் தினம் கொண்டாடும் மேற்கத்திய கலாச்சாரம் நமது கலாச்சாரத்துக்கு ஒத்து வராது. எனவே, காதலர் தினத்தன்று ஷாப்பிங் மால், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் காதலர்களை கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வோம்.
இதற்கான நாட்டின் முக்கிய நகரங்களில் பல பகுதியிலும் எங்கள் குழுவினர் செல்ல உள்ளனர். திருமணம் செய்ய மறுத்தால் காதலர்களின் பெற்றோருக்கு விஷயத்தை தெரியப்படுத்துவோம்.
வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு மாற வேண்டும். காதலுக்கு அவர்கள் இந்த தியாகத்தை செய்ய வேண்டும். இந்த போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத காதலர்கள், பெற்றோர்களிடம் கூறினால் தங்களுக்கு ஒருவேலை மிச்சம் என கிண்டலாகவும் கமெண்ட்களை கூறி வருகிறார்கள்.