சண்டிகர்: பஞ்சாபில் உள்ள வியாபாரி ஒருவர் காதலர் தினத்தை முன்னிட்டு தனது அன்பு மனைவிக்கு வித்தியாசமான காதல் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
நமது மாநிலங்களில் காரின் விலையே ரூ.5 லட்சம் தான். ஆனால் அந்த வியாபாரியோ காருக்கான பேன்சி நம்பரை பல லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
பஞ்சாபில் உள்ள சண்டிகர் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ் கோயல். இவருக்கு வயது 50. பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். காதலர் தினத்தை முன்னிட்டு தனது அன்பு மனைவிக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு கார் ஒன்றை கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி வாங்கினார்.
மனைவிக்கு பிடித்தமான பேன்சி நம்பர் 0001 க்காக வட்டார வாகன போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் எண்ணை ஏலத்தில் விடுவது வழக்கம். இதற்காக 8 பேர் போட்டியிட்டனர். இதனையடுத்து ஏலத்தில் ரூ. 8.75 லட்சம் செலவழித்து இவர் அந்த எண்ணை வாங்கிக் கொண்டார்.
இதற்கு அடுத்தபடியாக அந்த அலுவலகத்தில் 0002 என்ற எண்ணை ரூ.3 லட்சம் ஏலத்தில் அவதார் சிங் என்பவர் பெற்றுக் கொண்டார்.
சண்டிகரில் பேன்சி நம்பர்கள் விற்பனை மூலமாக வட்டார வாகன போக்குவரத்து அலுவலகத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.