இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கேள்விக்குறியாக மாறியிருந்த, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, புதிய அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது.
இது பலரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க வைத்திருக்கிறது.
ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுற்றுச் சூழலைக் கருத்தில் கொள்ளாத- இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்வோம் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
அது அப்போது சீனாவுக்கு அதிர்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாக அமைந்திருந்தது.
அதற்குப் பின்னர், கடந்த ஆறு, ஏழு வாரங்களாக சீனாவின் திட்டங்கள் குறிப்பாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடருமா என்ற கேள்வி நீடித்து வந்தது.
1.4 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் வகையில், கடந்த செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை, கைவிடுவதென்பது சீனாவைப் பொறுத்தவரையில் பொருளாதார ரீதியிலும், மூலோபாய ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்பட்டது.
எனினும், ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது, இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்பட்ட இறுக்கமான போக்கு சற்றுத் தளர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
தேர்தலுக்குப் பின்னர், கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய அரசின் நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாகத் தளரத் தொடங்கியது.
இறுதியில் கடந்த வியாழக்கிழைமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திட்டத்துக்கு பச்சைக்கொடி காண்பித்ததன் மூலம், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட அரசாங்கம் என்ற கருதுநிலை முற்றாகவே அகன்று போகும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்த போது, எந்தெந்தக் காரணங்களைக் கூறி, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தவறான முறையில் அளிக்கப்பட்ட ஒப்புதல் என்று ஐ.தே.க. தரப்பு கூறியதோ, அவையெல்லாம் சரியாக அளிக்கப்பட்ட ஒப்புதல் தான் என்று இப்போதைய அரசாங்கம் கூறுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவும் சரி அவரது அரசாங்கமும் சரி, இந்த விவகாரத்தில் ஒரேயடியாக குத்துக்கரணம் அடித்துள்ளது என்பதே உண்மையான நிலை.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுப்பது சுற்றாடலுக்கு ஆபத்து என்று முன்னர் கூறிய ஐ.தே.க, ஆட்சிக்கு வந்த பின்னர், எந்த ஆபத்தும் இல்லை என்று சாத்திய ஆய்வு கூறுவதாகச் சொல்கிறது.
அதுபோலவே, சீனாவுடன் இந்த திட்டம் தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட உடன்பாடும், முற்றிலும் சரியான வழிமுறைகளின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன, எந்த தவறும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது, இந்த திட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு எந்த ஊழலையும் செய்யவில்லை என்ற அர்த்தத்தையும் கொடுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாத உடன்பாடுகளை இரத்துச் செய்வோம் என்று, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், கபீர் காசிமும் தெரிவித்திருந்தார்.
இப்போதைய அரசாங்கம் இந்த திட்டத்துக்கு அளித்துள்ள ஒப்புதல், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செய்து கொண்ட உடன்பாட்டில் எந்த தவறான அணுகுமுறைகளுக்கும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை என்பதையே சுட்டி நிற்கிறது.
ஆக, சுற்றாடல் காரணி மற்றும் உடன்பாட்டின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை இரத்துச் செய்ய முடியாத நிலைக்கு புதிய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இரத்துச் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து, சீனா எதிர்ப் பிரசாரம் மற்றும் தனக்கு ஆதரவு திரட்டும் பிற நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகவே ஈடுபட்டு வந்தது.
சீன அரசுத்துறை நிறுவனமான சீன துறைமுக பொறியியல் நிறுவனத்தின், துணை நிறுவனமான, பல்தேசிய சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம், ஊடகங்களில் முழுப்பக்க விளம்பரங்களின் மூலம் உள்ளூரில் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.
அடுத்த பத்து ஆண்டுகளில் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகளையும், 13 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீட்டையும் தமது நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட முழுப்பக்க விளம்பரங்களில் கூட, சீன நிறுவத்தின் தலைவரான ஜியாங் ஹோலியாங் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமன்றி, சீன செய்தி நிறுவனமான சின்ஹூவாவும், இந்த திட்டம் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தது.
இந்த திட்டத்துக்கு ஆதரவான குரல்களை முன்னிலைப்படுத்தி சின்ஹூவா செய்திகளை வெளியிட்டு வந்தது.
இது இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட மறைமுக அழுத்தம் என்றே கூறலாம்.
இந்த திட்டத்தின் அவசியத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இராஜதந்திர ரீதியாகவும், இதனைத் தொடர்வதற்கு அனுமதிக்கும்படி சீன அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கவும் தயங்கவில்லை.
இதுகுறித்துப் பேச சீன ஜனாதிபதி தனது சிறப்புத் தூதுவராக, லியூ ஜியான்சாவோவையும் கொழும்புக்கு அனுப்பியிருந்தார்.
எனினும், அவர் கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து விட்டது அமைச்சரவை.
இந்த முடிவு, சீனாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி என்றே கருதப்படுகிறது.
இந்த திட்டம் கைநழுவிப் போயிருந்தால், வெறும் பொருளாதார இழப்புகள் மட்டும் சீனாவுக்கு ஏற்பட்டிருக்காது.
அதற்கும் அப்பால், இந்தியப் பெருங்கடல் தீவில் கால் வைக்கும் தமது திட்டத்தின் எதிர்காலம், இலங்கை மீதான பிடிமானம் என்ற மூலோபாய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களிலும் சீனாவுக்கு தோல்வி ஏற்பட்டிருக்கும்.
அது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவியேற்ற பின்னர் எதிர்கொண்ட முதலாவது பெரும் பின்னடைவாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.
கடந்த மாதம் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், தமது முன்னைய நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, சீனா விடயத்தில் கீழ் இறங்கிச் செல்ல நேரிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வந்ததை, கடந்த ஒரு மாத காலத்தில் வெளியான அமைச்சர்களின் கருத்துகளில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
எதற்காக சீனா விடயத்தில் அரசாங்கம் இறங்கிப் போக முடிவு செய்தது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஒருவேளை, இலங்கையில் தனது திட்டங்களை முற்றாக நிறுத்தப் போவதாக சீனா மிரட்டியிருக்கலாம்.
தனது கடன்களை குறுகிய காலஅவகாசத்துக்குள் தீர்க்குமாறும் எச்சரித்திருக்கலாம்.
தன்னுடன் செய்து கொண்ட உடன்பாட்டை முறித்தால், சர்வதேச அளவில் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியிருக்கலாம்.
சர்வதேச அரங்கில் இலங்கையை காப்பாற்ற முன்வரமாட்டோம் என்று எச்சரித்திருக்கலாம்.
இப்படிப் பல வழிகளில் சீனா தனது கைவரிசையைக் காட்டியிருக்கக் கூடும்.
எவ்வாறாயினும், சீனா விடயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்டது தான்.
ஏனென்றால், அந்தளவுக்கு சீனாவிடம் இலங்கை கடன்பட்டிருக்கிறது.
அதைவிட இலங்கைக்குள் சீனாவின் தலையீடு தவிர்க்க முடியாதளவுக்கு வேரூன்றியிருக்கிறது.
ஒரேயடியாக இதனை நீக்க முடியாது. படிப்பாயாகத் தான் செய்ய வேண்டும்.
எவ்வாறாயினும், சுற்றாடல் மற்றும், உடன்பாட்டு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தான் இந்த திட்டத்தை தொடர அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
எனினும், பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல் விவகாரத்தில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை.
அதாவது இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை, சீனாவுக்கு அறுதியாகவே எழுதிக் கொடுக்கும் வகையில் இந்த உடன்பாடு அமைந்துள்ளது.
மொத்தம் 233 ஹெக்ரெயர் பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகரில், 88 ஹெக்ரெயரை 99 வருட குத்தகைக்கும், 20 ஹெக்ரெயரை அறுதியாகவும் என மொத்தம் 108 ஹெக்ரெயர் நிலத்தை சீனாவை தன் கைக்குள் வைத்துக் கொள்ளப் போகிறது.
இது இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி, இந்தியாவின் பாதுகாப்புக்கும் கூட சவாலான விடயம்.
அதுவும், இந்த நிறுவனம் ஒன்றும் தனியார் நிறுவனம் அல்ல. சீன அரசுத்துறை நிறுவனம்.
இன்னொரு நாட்டு அரசாங்க நிறுவனத்துக்கு, இலங்கையின் ஒரு பகுதி நிலத்தை எழுதிக் கொடுப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கருதுகிறது.
99 வருட குத்தகைக்கு கொடுக்கலாம், ஆனால், அறுதியாக கொடுக்க முடியாது என்பதில் அரசாங்கம் பிடிவாதமாகவே இருக்கும்.
அதேவேளை, இந்த திட்டம் இந்தியாவுக்கு ஆபத்தானது என்று இந்திய அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த போதும், அதிகாரபூர்வமாக இந்தியா எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை புதிய அரசாங்கம் தொடர அனுமதித்த பின்னர் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது கேள்விக்குரிய விடயம்.
அடுத்தவாரம், இந்தியா செல்லும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறப்படலாம்.
அதேவேளை, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும், முன்னைய அரசாங்கம் செய்து கொண்டு உடன்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் புதிய அரசாங்கம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கையினதும், இந்தியாவினதுர்ம் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, அந்த உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்யும் முயற்சிகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம், கொழும்பு வந்து சென்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
இது சீனாவுடன் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பயணம் மட்டுமன்றி, சீனாவின் திட்டங்களின் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை நடத்துவதற்குமேயானதாகும்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்ததாத வகையில், கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாடு திருத்தியமைக்கப்படலாம்.
அதற்கு ஏற்கனவே சீனா ஒப்புதல் அளித்ததன் பேரில் கூட சில வேளைகளில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருக்கக் கூடும்.
அதேவேளை, இந்தக் கட்டத்தில் இந்த திட்டத்தை நிறுத்துவது சீனாவுடனான நீண்டகால உறவை பாதிக்கக் கூடும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்து, சீனா விடயத்தில் புதிய அரசாங்கம் கொண்டுள்ள அச்சத்தையம் பிரதிபலிக்கிறது.
எவ்வாறாயினும், இந்த திட்டத்தை தொடர்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது சீனாவுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகவே கருத வேண்டும்.