நகரி: தெலுங்கு டிவி சீரியல் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் தற்கொலை தொடர்பாக அவரது காதலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு என்பவரின் மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி. இவருக்கும் விஜயநகரம் பார்வதிபுரத்தில் பெயிண்டராக வேலை பார்க்கும் சங்கர் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஹைதராபாத்துக்கு குடிவந்தார். தீப்தி என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.
மேலும் அகவனம், லக்கிலட்சுமி போன்ற டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். சில டி.வி. தொடர்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.
தற்போது ஹைதராபாத் பட்டேல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்-மனைவியாக வசித்து வந்தார். ரமேஷ்குமாரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.
தூக்கு போட்டு தற்கொலை
நேற்று காலை தீப்தி மர்மமான முறையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த காதலன் ரமேஷ்குமார் சடலத்தை இறக்கி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தீப்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
காதலரிடம் விசாரணை
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகமடைந்த போலீசார், தீப்தி காதலன் ரமேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறும்போது, ‘‘நேற்று காலை வீட்டிற்கு வந்தேன். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தேன். தீப்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜன்னல் வழியாக சென்று பிணத்தை இறக்கினேன்” என்றார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐபேடில் ரெகார்ட். தீப்தி தனது தற்கொலையை தனது, ‘ஐ பேடில்’ பதிவு செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.