1982ம் ஆண்டு இரண்டு பாரிய தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது.
ஒனறு தோல்வியில் முடிந்தது. பொன்னாலைப் பாலக குண்டு மட்டும் வெடித்திருந்தால் அதுவே முதலாவது பெரிய நிலக்கண்னி வெடி தாக்குதலாக அமைந்திருக்கும்.
அத்தாக்குதல் தோல்வியானது பெரியளவிலான தாக்குதல் ஒன்றை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தை புலிகளிடம் ஏற்படுத்தியிருந்தது.
அப்போது பிரபாகரன் இந்தியாவில் இருந்தார். இங்கே மாத்தையா பொறுப்பாக விளங்கினார். தாக்குதல் நடவடிக்கை பொறுப்பு மாத்தையாவின் விருப்பத்தோடு சாள்ஸ் அன்ரனி என்ற சீலனிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தான் இலக்கு. ஏற்கனவே ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தை உமா- சந்தரம் குழுவினர் தாக்கியிருந்தனர்.
அதனால்.. தாமும் ஒரு பெலிஸ் நிலையத்தை தாக்கி வெற்றி பெறவேண்டும் என்று புலிகள் நினைத்திருந்தனர்.
ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின்னர் வடக்கிலிருந்த பல பொலிஸ் நிலையங்கள் மூடப்பட்டன. ஏனைய பொலிஸ் நிலையப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
அவ்வாறு பலப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் நிலையங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முக்கியமானது.
சாவகச்சேரி தாக்குதல்
1982 ஆக்டோபர் 22 ஆம் திகதி அதிகாலையில் மினிபஸ் ஒன்று புலிகளால் கடத்தப்பட்டது. மினி பஸ்சில் தாக்குதல் பிரிவினர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் நோக்கி சென்றனர்.
அதிகாலை நேரம் என்பதால் பொலிசார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் விபரீதத்தை உணரும் முன்பாகவே மினி பஸ்சிலிருந்து குதித்த போராளிகளது துப்பாக்கிகள் முழங்கின.
துப்பாக்கி வேட்டுக்களை கேட்ட பொலிசார் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு எழுந்து தப்பி ஓடினார்கள்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மாடிவீட்டிலிருந்தது. மேல் மாடியிலிருந்து குதித்த ஒரு பொலிஸ் அதிகாரியின் கால் முறிந்தது.
கை குண்டுகளை வீசி ஆயதக்களஞ்சிய அறையை தகர்த்த புலிகள் அங்கிருந்த ஆயதங்களை கைப்பற்றிக் கொண்டனர்.
ஆயுதங்களை கைப்பற்றிக்கொண்டு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற நினைத்த நேரத்தில் கதவொன்றின் பின்னால் மறைந்து நின்ற பொலிஸ்காரர் சீலனை குறிபார்த்தார்.
சீலன் உஷார் அடைவதற்கிடையில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த சீலனையும் தூக்கிக்கொண்டு கைப்பற்றிய ஆயுதங்களொடு தப்பிச் சென்றனர் புலிகள்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் பங்கு கொண்டவர்களில் சீலன், மாத்தையா, சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இரகசிய சிகிச்சை
ரஜினி திரணகம
தீவிர தேடுதல் வேட்டை ஆரம்பமானது. காயப்பட்ட சீலனை காப்பாற்றுவதே பெரும்பாடாக இருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாக இருந்தவர்கள் நித்தியானந்தன், நிர்மலா தம்பதியினர். அவர்கள் வீட்டில் சீலன் தங்க வைக்கப்பட்டார்.
நிர்மலாவின் சகோதரி ரஜினி சீலனுக்கு சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றினார். இந்த ரஜினி தான் பின்னர் யாழ். மருத்துவபீட விரிவுரையாளராக இருந்தவர்.
திரணகம என்னும் சிங்களவரை காதலித்து மணமுடித்தவர்.
முறிந்த பனை எனும் ஆவணத்தை வெளியிட்டவர்களில் ஒருவராக இருந்த ரஜினி திரணகம புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புக்களது ஜனநாயக மற்றும் மனிதவுரிமை மீறல்களை அம்பலப்படுத்தினார்.
இவரது கொலைக்கு புலிகள் காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் தகல்கள் “ரஜினி திரணகம” கொலைக்கு புலிகள் காரணமல்ல என்று தெரிவிக்கின்றன. (இது பற்றி பின்னர் விளக்குகின்றேன்.)
சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலின் பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில் புலிகளது முக்கிய உறுப்பினரான சங்கர் மாட்டிக்கொண்டார்.
கமாண்டோக்களது முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லும் போது அவர் படுகாயமடைந்தார்.
சங்கரை படகில் தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்றனர் புலிகள். மதுரையில் உள்ள தனியார் வைத்திய சாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சங்கர் அங்கு பலியானார்.
மதுரையில் உள்ள சுடுகாட்டில் சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பொன்னம்மான், பேபி சுப்பிரம்மணியம் (இளங்குமரன்) கிட்டு ஆகியோரோடு இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முக்கியமான ஒருவர் தமிழ் நாட்டு அரசியல்வாதியான நெடுமாறன்.
புலிகள் இயக்கத்தில் முதல் பலியான சங்கர் நினைவு கூரப்பட்டு வருகிறார்.
27.11.82 அன்று தான் சங்கர் உயிர் துறந்தார். அந்த நாளில்தான் புலிகளது மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.தே.கட்சி உறுப்பினர் தம்பாபிள்ளை என்பவர் மீதான நடவடிக்கைக்கும் சங்கர் பொறுப்பாக இருந்தார்.
பொன்னாலை பாலத்தில் தாக்குதல் முயற்சி, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் என்பவை சங்கா பங்குகொண்ட முக்கியமான நடவடிக்கைகளாகும்.
சத்தியநாதன் என்னும் சங்கர் பிறந்தது 19.06.61 தியாக மரணம் 27.11.1982.
பருத்தி துறையில் குறி
புலிகள் உட்பட விடுதலை இயக்கங்களின் முக்கியஸ்தர்கள் பலர் யாழ்பாணம் வடமராட்சியை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டிருந்தது.
பருத்தித்துறையில் இருந்த பொலிஸ்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா அட்டூழியங்களுக்கு பெயர் பொற்றவர்.
1983 பெப்ரவரி 18 ஆம் திகதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் விஜயவர்த்தனா. காத்திருந்த புலிகள் தாக்கினார்கள்.
இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனாவும் ஜீப் சாரதி ராஜபக்ஸவும் சுட்டுக்கொல்லப்பட்டனா. இதே காலகட்டத்தில் புலிகளுக்கும் கூட்டணிக்கும் முரண்பாடுகள் தீவிரமாக வளரத்தொடங்கின.
பிரபாகரன் தனது கட்டுப்பாட்டை விட்டு மீறி செல்லத்தொடங்கி விட்டதை அமிரும் உணர்ந்தார்.
தமிழர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தனியான படையை உருவாக்கவேண்டும் என்று சொன்னவர் அமிர்.
அதே அமுதர் “ஒரு சில ஆயுதங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்றெல்லாம் பேசத்தொடங்கினார்.
சலுகைகளுக்காக கையேந்த மாட்டோம் என்று சொன்னவர்கள் கூட்டணியினர்.
1977 பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய “கோட்டாக்களை” கூட்டணியினர் பெற்றுக்கொண்டனர்.
சமாதான நீதவான் (ஜே.பி) பதவிகளை தமது ஆதரவாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தார்கள். அரசாங்கத்தை கண்டிப்பது போல மேடையில் பேசினாலும் ஜே.ஆர் ஜெயவர்தானாவுடன் நெருக்கமாகவே இருந்தனர்.
வடபிராந்திய சபைக்கு தமது ஆதரவாளர்களை நியமித்தனர்.
யாழ்.கூட்டறவு சங்கத்தின் தலைவராக ஆலாலசுந்திரம் பதவி பெற்றார்.
1977 பொது தேர்தலுக்கு முன்னர் துரோகிகள் வசை பாடல்களில் வெளுத்து வாங்கியவர் ஆலால சுந்திரம்.
யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா யாழ் கூட்டறவு சங்கத்தில் ஊழல் செய்கிறார் என்று ஆதாரங்களை அடுக்குவார் ஆலால்.
துரையப்பாவுக்கு ஆலால சுந்திரம் வழங்கிய பட்டம் “கூப்பன் கள்ளன்” .
அதே ஆலால சுந்தரம் யாழ் – கூட்டறவுச் சங்கத்தில் தலைவரான பின்னர் ஊழல் மலிந்து மோசடிகள் பரவின.
மனோகரன் என்னும் ஒருவர் யாழ் கூட்டறவுச் சங்க ஊழலை எதிர்த்து சாகும்வரை உண்ணவிரதமிருந்தார்.
அகிம்சைவாதியான ஆலால சுந்தரமோ அல்லது கூட்டணி தலைமையோ அதனை கண்டுகொள்ளவில்லை. ஈழமாணவர் பொதுமன்றம் கூட்டறவுச் சங்க ஊழலை புள்ளிவிபரங்களோடு அம்பலபடுத்தியது.
ஆலாலசுந்தரம் ஒரு சட்டத்தரணி. ஊழலை மறைக்க உபாயம் தேடினார்.
யாழ் – கூட்டறவுச் சங்க கணக்குகள் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்த கட்டிடம் ஆலாலசுந்தரத்தின் ஏற்பாட்டால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
ஊழலுக்கு இருந்த ஆதாரங்களை “தீ” க்கு தின்னக்கொடுத்துவிட்டு நிம்மதியயாக இருந்தார் ஆலால்.
எச்சரிக்கை
கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கதிரவேற்பிள்ளை மரணமானதால் வெற்றிடம் ஏற்பட்டது. ஆலால சுந்தரத்தின் கொள்கை உறுதியை மெச்சிய (?) கூட்டணி தலைமை அவருக்கே அந்த பதவியை வழங்கி கௌரவித்தது.
22.02. 83 அன்று யாழ் கல்வியங்காடு சந்தைக்கு எதிரில் உள்ள அலாலின் வீட்டுக் கதவு தட்டபட்டது. ஆலால சுந்தரத்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டனர் கதவை தட்டிய இளைஞர்கள்.
ஆலால் வந்தார் இளைஞர்கள் அவர் காலில் சுட்டனர்.
மறுநாள் பிரசுரம் ஒன்று வெளிவந்தது. அது புலிகளால் வெளியிடப்பட்டிருந்தது. ஆலால சுந்தரத்தின் ஊழல் நடவடிக்கைகள் அந்த பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருந்தன.
சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆலால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். காலில் சுட்டது ஒரு எச்சரிக்கை மட்டும்தான் என்று பிரசுரம் கூறியது.
உண்ணாவிரதங்களுக்கு அசைந்து கொடுக்காமல் இருந்த யாழ்-கூட்டறவு சங்க நிர்வாகிகள் ஆலாலுக்கு வெடி விழந்தவுடன் தாமும் விழுந்தடித்து பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கூட்டணி தலைமை கதி கலங்கி போனது. தம்மை சுடத் துணியார்கள் இளைஞர்கள் என்று கூட்டணி நினைத்தது பொய்த்துப் போனது.
கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக புலிகளையும், தம்மை சுடக்கூடியவர்கள் என்று கருதப்பட்ட குழுக்களையும் புகழத் தொடங்கினர்.
யோகேசின் உபதேசம்
இந்த இடத்தில் ஒரு சம்பவம் கூறுகிறேன். ஈழமாணவர் பொதுமன்ற (G.U.E.S) மாணவர்கள் அன்றைய யாழ் தொகுதி பா.உ யோகேஸ்வரனைச் சந்திக்க சென்றார்கள்.
யாழ் நகர் வர்த்தகர்களிடம் நிதி சேகரிக்க சிபாரிசுக் கடிதம் கேட்டார்கள். யோகேஸ்வரன் உடனே சம்மதிக்கவில்லை. மாணவர்களோடு விவதித்தார்.
யோகேஸ்வரன் மாணவர்களை பார்த்து சொன்னது இது: “நீங்கள் தம்பியோடு அல்லது கே.எம் குறுாப்போடு போய் சேரலாம்தானே??”
கே.எம் குறுாப் என்பது குட்டிமணி குழுவினரை குறிக்கும் வார்த்தை.
கோபமடைந்த மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் பணிந்த யோகேஸ்வரன் கடிதம் கொடுத்தார்.
பலமிருந்தால் அந்த பலத்தால் தமக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால் அந்த பலமுள்ளவர்களை பாராட்டுவது. அவ்வாறு பாராட்டிக்கொண்டே தமது காரியத்தை சாதிப்பது என்பதுதான் கூட்டணி தலைவா்கள் பலரது தந்திரமாக இருந்தது.
அமிர் மட்டும் இந்த விடயத்தில் சற்று மாறுபாடா இருந்தார்.
புலிகள் தனது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன் புலிகளை பகிரங்கமாகவே விமர்சித்தார் அமிர்.
கவச வண்டி மீத தாக்குதல்
வடக்கே இராணுவத்தினர் கவச வண்டிகள் சகிதம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினர். கவச வண்டிகளை பார்த்த மக்கள் பீதியடைவார்கள்.
வெல்ல முடியாது என்ற பிரமையால் போராட்டத்தில் நம்பிக்கை தளரும். நம்பிக்கை தளர்ந்தால் தீவிரவாத இளைஞர்களுக்கு கொடுக்கும் ஆதரவும் குறையும் என்று படையினர் எதிர்பார்த்தனர்.
1983 மார்ச் 4ம் திகதி பரந்தனுக்கு அருகேயுள்ள உமையாள் புரத்தில் கவச வண்டிகள் சகிதம் இராணுவத்தினர் ரோந்து வந்துகொண்டிருந்தனர்.
திடீர் தாக்குதலை மேற்கொண்டனர் கொரிலாக்கள். இராணுவத்தினரும் பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
சுமார் ஒரு மணிநேநரம் நடைபெற்ற மோதலில் ஐந்து இராணுவத்தினர் காயடடைந்தனர். இராணுவ கவச வண்டியும் சேதமடைந்தது.
புலிகள் தரப்பில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு மாநாடு
வடபகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஜே.ஆர்.ஜெயவர்தனா கவலையடைந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரையும் சேர்த்துக்கொண்டு தீவிரவாதிகளை தனிமைப்படுத்தலாம் என்று திட்டமிட்டார்.
“பாதுகாப்பு மாநாடு” ஒன்றை யாழ்பாணத்தில் கூட்டுமாறு யாழ் அரச அதிபர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
“பாதுகாப்பு மாநாடு” என்று அழைக்கப்பட்ட போதும் தீவிரவாத இளைஞர்களது நடவடிக்கைகளை வேரோடு களையும் ஆலோசனை நடத்துவதே நோக்கம்.
மாநாட்டுக்கு யாழ் மாவட்ட அமைச்சர் விஜயகோன் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அமுர்தலிங்கமும், கூட்டணி பா.உ க்கள் சிலரும் மாநாட்டில் கலந்துகொள்ள மனப்பூர்வமாக சம்மதித்தனர்.
இயக்கங்கள் கொதிப்பு
இயக்கங்கள் கூட்டணியின் துரோகம் என்று கொதித்தன.
புலிகள் ஒரு திட்டம் வகுத்தனர். கூட்டணியை தனது கையில் வைத்திருந்தால் நோக்கத்தை நிறைவேற்றலாம் என்று ஜே.ஆர் போட்ட கணக்கை தப்புக் கணக்காக வேண்டும் அதுதான் புலிகளது நோக்கம்.
1983ம் ஆண்டு ஏப்பிரல் 2ம் திகதி அன்றுதான் யாழ் அரச செயலகக் கட்டிடத்தில் “பாதுகாப்பு மாநாடு” ஆரம்பமாக இருந்தது.
“பாதுகாப்பு மாநாடு” அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் அங்கு செல்வதற்கு இடையில் புலிகள் விரைந்து சென்றனர். மாநாடு ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களே இருந்தன.
திடீரென பலத்த குண்டுச் சத்தம். மாநாடு நடக்கவிருந்த கட்டிடம் உடைந்து வீழ்ந்தது. யாழ் அரச செயலகம் ஸ்தம்பித்ததது.
ஆனாலும் மாநாடு பிறிதோர் இடத்தில் நடைபெற்றது. மாநாடு நடக்கவிருந்த கட்டிடத்தை சேதமாக்கி புலிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் அமுதரும், கூட்டணியினரும் “பாதுகாப்பு மாநாட்டில்” கலந்து கொள்ள தவறவில்லை.
“அரச பயங்கரவாதிகளும், அரசியல் சந்தர்ப்பவாதிகளும் கலந்துகொள்ளும் மாநாட்டில் புரச்சிகர ஆயுதபோராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. அதனை உணர்த்தவே மாநாட்டு கட்டிடம் தாக்கப்பட்டது என்று புலிகள் கூறினார்கள்.”
அரசின் அறிவிப்பு
1983இல் கூட்டணியின் உதவியோடு ஜே.ஆர் அரசு மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை புலிகளை ஆத்திரமூட்டியது. 1983 மே மாதம் 18ம் திகதி வடக்கில் உள்ளுராட்சி தேர்தல்கள் நடத்தப்போவதாக அரசு அறிவித்தது.
தொடரும்..
தொடர்புடைய தொடர் கட்டுரை