நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கம்போடியாவின் பொல்போட் மற்றும் ஈராக் , குர்திஷ் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை என்பனவும் போர்க்குற்றங்கள்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை படையினர் போர்க்குற்றங்களை  செய்யவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில் துப்பாக்கி முனையில் ஆயிரக்கணக்கான மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை விடுதலை போராட்ட இயக்கமாக கருத முடியாது.

பணயமாக வைத்திருந்த மக்களை படையினர் மீட்டதுடன் அங்கு போர்க்குற்றங்கள் நடக்கவில்லை எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி கிழக்கில் சரணடைந்த 600 பொலிஸார் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசதரப்பு  கூறிவரும் நிலையில், அந்த கால கட்டத்தில் கருணா விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தார்.

2004 ஆம் ஆண்டு கருணா அந்த அமைப்பில் இருந்து விலகினார்.

எனினும் 1990 ஆம் ஆண்டில் கிழக்கில் பொலிஸார் கொலை செய்யப்பட்டமைக்கு தான் பொறுப்பல்ல என கருணா குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply