வட மாகாண சபையின் கணக்கு வழக்குகளைத் திரித்து மோசடிசெய்து C.V.Vigneswaranவெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார் வட மாகாண முதலமைச்சரும் நிதி அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன்.
2014 ஆண்டில் செய்து முடித்திருக்கவேண்டிய வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 690 மில்லியன் ரூபா நிதி இன்னமும் செலவழிக்கப்படாதுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டிற்கான கணக்குகளைத் திரித்து வெறும் 16 மில்லியன் ரூபா மட்டுமே இன்னமும் செலவழிக்கப்படாதுள்ளதாக பொது மக்களை ஏமாற்றுவதற்காகக் கணக்குகளை வெளியிட்டதாகவே முதலமைச்சர்மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளி நடைபெற்ற வடமாகாணசபைக் கூட்டத்தில் இது தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது முதலமைச்சர் இதற்குப் பதிலளிக்க மறுத்து அவமானத்திற்குள்ளாகியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் செலவழிக்கப்படுவதற்கென மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி வட மாகாணசபையால் செலவிடப்படாமல் திரும்பவும் திறைசேரிக்கு அனுப்பப்படவிருக்கும் அவலம் பகிரங்கமாகி பலத்த கண்டனங்களுக்குள்ளாகிவந்திருந்த நிலையிலேயே இந்த மோசடி இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், செலவழிக்கப்படாதிருந்த 2014 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட இந் நிதியை 2015 ஆண்டில் செலவிடுவதற்கு திறைசேரியின் சுற்றறிக்கை 238 ன் பிரகாரம் திறைசேரியின் விசேட அனுமதியை வடமாகாண சபை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,
ஆனால் பெரும்பாலும் இவ்வாறான அனுமதிகள் வழங்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லாத பின்னணியிலேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளாக உணரப்படுகிறது.
இம் மோசடிபற்றித் தெரியவருவதாவது, 31.12.2014 அன்று வட மாகாண சபையின் அமைச்சரவையை அவசரமாகக் கூட்டியிருந்த முதலமைச்சர் வட மாகாண சபை செலவழிக்கத்தவறியிருந்த 690,704,473 ரூபாவை 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம்வரை செலவழிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றிருந்திருக்கிறார்.
ஆனாலும் இவ்வாறு இந் நிதியை 2015 ம் ஆண்டில் செலவழிப்பதற்கு திறைசேரியின் விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற விடயம் அமைச்சர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் பின்னர் இந்த உண்மை நிலையை மறைத்து 2014 ம் ஆண்டில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்களுக்குச் செலவழிக்கப்படாதுள்ள தொகை வெறும் 16,520,000 ரூபா மட்டுமே எனக் கணக்குகளைத் திரித்து பொதுமக்கள் பார்வைக்கு முதலமைச்சரால் கணக்குக் காட்டப்பட்டுள்ள விடயமே தற்போது பகிரங்கமாகியுள்ளது.
அம்பலமாகியுள்ள இவ் விடயம் தென்னிலங்கையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.