இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் சர்வதேச விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிக்காது எந்த சந்தர்ப்பத்திலும் நழுவ விடப்பட மாட்டாதென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் அரசியல் விவகார பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மன் உறுதி அளித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட “இனப்படுகொலை”  தீர்மானத்தின் பிரதி ஒன்று ஜெப்ரி பெல்ட்மனிடம் கையளிக்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் அரசியல் விவகார பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து உரையாடினர்.

அதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன்,

´ஐ.நா பொதுச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டதன் பிரகாரம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டு யாழின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தனர்.

அவர் அந்த சந்திப்பின் போது பல விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அந்தவகையில், வடமாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தினை கொண்டு வந்ததன் அர்த்தம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

´இனப்படுகொலை தீர்மானம் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஆவணம், எமக்கு சார்பாக இருக்கும் ஒரு அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்ற மாட்டோம் என்று வெளிப்படையாக கூறும் போது, அப்படியான நிலைமையில் எமது உண்மையான நிலை என்ன?

எமக்கு நடந்த காரியங்கள் என்னென்ன, சரித்திர ரீதியாக என்னென்ன நடந்தது என உலகிற்கு எடுத்துக் காட்ட முடியாத நிலையில் இருக்கும் போது, இப்படியான ஒரு விடயத்தினை அரசாங்கம் கூறியது எமக்கு மனவருத்தத்தினை தந்தது என்பதனை காரணம் காட்டி, வேறு பல காரணங்களையும் காட்டி, எமக்கு இந்த நேரத்தில் இங்குள்ள பிரச்சினைகள் எமது மனநிலையில் பதிந்துள்ள பிரச்சினைகளை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் இருப்பதனால், அதனை வெளிக்காட்டி இருக்கின்றோம்.

வருங்காலத்தில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு சுமூகமான உறவை வளர்க்க வேண்டுமாயின், தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் நடைபெற்றிருக்கின்ற அவலங்கள் சம்பந்தமாக சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் இனப்படுகொலை என்ற ஆவணம், தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினையினை எடுத்துக்கொண்டு வருவதாக இருப்பதாக அதனை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர,

இன ரீதியான ஆவணமாக எடுத்துக் கொள்ள கூடாதென்றும், உண்மைகளை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே இரு இனங்களுக்கும் இடையில் சுமூகமான உறவினை மேம்படுத்த முடியும்´ என்று கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

´வருங்காலத்தில் எவ்வாறான அரசியல் உறவுகளை மத்திய அரசுடன் வைத்துகொள்ள போகின்றீர்கள் என கேட்டார்கள். தற்போதைய அரசாங்கம் எங்களினால் கொண்டு வரப்பட்ட ஒரு அரசாங்கம், நாமும் சேர்ந்து வாக்களித்த அரசாங்கம். எனவே, இந்த அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் சுமூகமான உறவு ஏற்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு என்பதனை ஆணித்தனமாக எடுத்துக் கூறினோம்.´ என்றார்.

ஐ.நா விசாரணை தொடர்பிலும், அறிக்கை பிற்போடப்பட்டமை பற்றியும் நீங்கள் கேள்வி எழுப்பினீர்களா என முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டனர்.

அதற்கு முதலமைச்சர், ´ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பில் நாம் வினவிய போது, இந்த ஒரு முறை தான் பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் செயலாளர் கூறியுள்ளார். அத்துடன், இந்த அரசாங்கத்திற்கு சற்று காலம் அனுமதித்தால் என்ன என பல நாடுகளிடையே கருத்து நிலவியதன் காரணமாக அறிக்கை சமர்ப்பிப்பது  பிற்போடப்பட்டதென்றும்…,

முன்னாள் ஜனாதிபதி போன்று அல்லாமல் மக்களிடையே சுமூகமான நல்லுறவை பேண வேண்டுமென்ற  எண்ணத்துடன் இருக்கும் ஒரு ஜனாதிபதிக்கும், அவரது அரசாங்கத்திற்கும் சற்று காலம் கொடுப்பதில் பிழை இல்லை என்ற அர்த்தத்தின் அடிப்படையிலும், ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதெனவும் ஐ.நா பிரதிநிதி கூறினார்´ என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இனப்படுகொலை தீர்மானத்தின் ஆவணம் கையளித்துள்ளீர்களா என மீண்டும் ஊடகவியலளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

´போர்க்குற்ற ஆணவங்களுடன் எனது சில ஆவணங்களும் இனப்படுகொலை தீர்மானத்தின் ஆவணமும் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஐ.நா அறிக்கை எந்த சந்தர்ப்பத்திலும் நழுவ விடமாட்டீர்களா என கேள்வி எழுப்பியதற்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வின் போது, அறிக்கை சமர்ப்பிக்கப்படும், எந்த சந்தர்ப்பத்திலும், விசாரணைகள் நழுவ விடப்படாட்டாது என உத்தரவாதம் அளித்துள்ளார்´ என்று வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.

Share.
Leave A Reply