கோர்னல் பெரேரா யார்?
ஒரே வரியில்… ஹில்டன் ஹோட்டலை கட்டியவன் நான்தான்.
உங்களுடைய ஹில்டனுக்கு என்ன நடந்தது?
நான் என்னுடைய சொந்தப் பணத்தில் ஹில்டன் ஹோட்டலை உருவாக்கினேன். பலருக்கும் இந்த ஹோட்டல்மீது ஒரு கண். என்னிடமிருந்து இந்த ஹோட்டலை பஷில் ராஜபக் ஷ பறித்தெடுத்தார்.
அப்போது பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தது. அதை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பித்து ஒரே நாளில் அதை நிறைவேற்றி என்னிடம் இருந்து பறித்துக்கொண்டார்.
இதற்கு முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸும் உடந்தை. இதை சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை. நீதிமன்றம் சென்றேன். அங்கேயும் எனக்கான நீதி மறுக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன் மீண்டும் ஹில்டனை நான் பெற்றுக்கொள்வதற்கு.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு பகிரங்கமாகவே உங்களுடைய ஆதரவை வழங்கினீர்களே ஏன்–?
அரசு மாறவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எனக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அதுதான் தேவையாக இருந்தது. அது இப்போது நடந்துவிட்டது.
சரி இந்த மாற்றத்தினால் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னமாதிரியான நன்மையை இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியும்?
சில காலங்களாக நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக பழகி வருகிறேன். வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் மற்றும் இலங்கை நாட்டை பொறுத்தவரையில் அவரின் சிந்தனைகளையும் திட்டங்களையும் நன்கு அறிவேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட இந்த விடயத்தில் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார். தேர்தல் பிரசார காலங்களிலேயே அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதை நான் நன்கு அறிவேன்.
அதனடிப்படையில் பார்த்தால் ஜனாதிபதியும் பிரதமரும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வை வெகு சீக்கிரத்தில் எடுப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை முதலில் செய்துவிட்டே அபிவிருத்திப் பாதையில் செல்ல வேண்டும் என்பதில் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
அரசியலில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் நோக்கம் இருக்கிறதா. பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏதும் உண்டா?
இல்லை. நிச்சயமாக இல்லை. தேர்தலில் நிற்கவேண்டும் என்றோ, பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றோ எந்த ஆசையும் எனக்கு இல்லை. அப்படி இருந்திருந்தால் இப்போதல்ல அப்போதே நான் அரசியலில் இறங்கியிருப்பேன்.
ஏன் அரசியலிற்கு வந்துதான் சேவையாற்ற வேண்டும் என்று இல்லையே. நான் இதுவரையில் அமுல்படுத்தியுள்ள பல திட்டங்கள் நானாகவே செய்தவை. எந்த அரசியல் நோக்கமும் அதில் இருக்கவில்லை.
உதாரணத்திற்கு இலங்கையில் சூப்பர் மார்க்கெட் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவனே நான்தான். சுகததாச உள்ளக அரங்கம் கட்டப்படுவதற்கு என்னுடைய பங்களிப்பு இருக்கிறது.
இலங்கை பால் சபையை மில்கோ என்று பெயர்மாற்றி அதை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியது நான் அதில் தலைவராக இருக்கும்போதுதான். இத்தனையையும் செய்தேன். ஆனால் நான் அரசியல்வாதி இல்லையே?
வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கான விசேட செயற்றிட்டமொன்று இருப்பதாக அறிவித்திருந்தீர்களே?
ஆம்… அவர்களுக்கான தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதுதான் அது.
எப்படி?
தொழிலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதுதான் நாட்டுத் தலைவர்களின் கடமை. நான் அறிந்தவரை சர்வதேச அளவில் தற்போதைய பற்றாக்குறை என்னவென்றால் மருத்துவ தாதிகள்.
அதை நாம் வடக்கு, கிழக்கில் உருவாக்க வேண்டும். அப்போது வெளிநாடுகளில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள முடியும். அத்தோடு இலங்கையை வைத்திய சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.
வைத்திய சுற்றுலாத்தலமாகவா எப்படி?
சர்வதேச தரங்களிற்கமைய மருத்துவ சுற்றுலாவுக்கு ஏற்றவாறு வடக்கு கிழக்கு மாகாணங்கள் புவியியல் ரீதியில் அமைந்துள்ளன.
சிங்கப்பூர், மும்பை, சென்னை, பாங்கொக் மற்றும் துபாயில் அமைந்துள்ளது போல் இலங்கையிலும் சர்வதேச மருத்துவமனை ஒன்றை உருவாக்கவேண்டும்.
இதை நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கம் முன்வரவேண்டும். அதனூடாக இலங்கையை சிறந்த மருத்துவ சுற்றுலா தலமாக அமைத்துக்கொள்ள முடியும்.
அத்தோடு வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து சிறந்த மருத்துவ உத்தியோகத்தர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகள் அர்ப்பணிப்போடும் விடாமுயற்சியோடும் பணியாற்றக்கூடியவர்கள்.
இவர்களை மருத்துவத்தின் பின்னரான பராமரிப்பு சேவைகளிற்காக உருவாக்கிக்கொள்ள முடியும். சர்வதேச மருத்துவமனையொன்றின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவது மருத்துவத்திற்கு பின்னரான பராமரிப்பே. இதை நாம் சரிவர கையாண்டால் சர்வதேச தரத்திலான மருத்துவ சுற்றுலாத் தலமாக நம் நாட்டை உருவாக்க முடியும்.
நாம் தற்போது பார்த்தோமானால் சிங்கப்பூர், மும்பை மற்றும் சென்னை போன்ற சர்வதேச மருத்துவமனைகளில் பணிபுரிவது தமிழர்கள்தான்.
இப்படியிருக்க சர்வதேச தரத்திலான மருத்துவ சேவையை நாம் இங்கு ஆரம்பித்தால், உலக நாடுகளிலிருந்தும் இவர்கள் வேலைக்காக அழைக்கப்படுவார்கள்.
அது நமக்கு சாதகமாகத்தான் அமையும். இல்லை இன்னும் இருக்கிறது. சர்வதேச ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவ வேண்டும். இதன் கிளையொன்று திருகோணமலையில் நிறுவப்பட வேண்டும்.
கல்வி அறிவினை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை இதன்மூலம் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
போர்ட் சிட்டி பற்றி ஒரு தொழிலதிபரான உங்களுடைய கருத்து என்ன-?
கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ போர்ட் சிட்டியை ஆரம்பித்துவிட்டது. ஆனால் நான் அறிந்த வரையில் சுற்றுச் சூழலுக்கும் மீன்பிடித்துறைக்கும் பாதிப்புகள் வரக்கூடும்.
கடல்பரப்பில் 100 ஏக்கர் கொடுக்கப்படும்போது நிலப்பரப்பின் அடிப்படையில் நஷ்டம் நமக்குத்தான். அதுமட்டுமன்றி அவர்கள் கப்பலிலோ அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களிலோ விசா இல்லாமலே வந்து செல்வார்கள். அப்படி வரும்போது யாரால் தடுக்க முடியும்.