இனத்துரோகி. கிட்டத்தட்ட 1984ஆம் ஆண்டு முதல் எமக்கு பரிச்சயப்பட்ட விடயமல்லவா? அன்று சம்பந்தப்பட்டவர்கள் ‘இனத்துரோகி’ என எழுதப்பட்டு விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டு சுடப்பட்டு இறந்தனர்.

இது அவ்வளவு பரவலாக நடைபெற்றபடியால் இதற்கு ‘lamp posting’ என்றே ஓர் ஆங்கிலச் சொல்லை ஆங்கிலப் பத்திரிகைகள் உருவாக்கி விட்டன.

தமிழ் சமூகத்தில் இருக்கக்கூடிய சகலவித அபிப்பிராயங்களையும் உள்வாங்கி அவற்றின் பொது உடன்பாட்டின் வழியே போக இயலாமையையே இந்த இனத்துரோகி போக்கு எடுத்துக் காட்டிற்று.

“நீ எங்களுடன் இல்லாவிட்டால் எதிரியுடன்…” என்று அன்று புஷ் சகல நாடுகளுக்கும் விட்ட அச்சுறுத்தல் போல. எதனையும் விவாதித்துத் தீர்க்க இயலாத் தன்மையினால், தமது பக்க நியாயத்துடன் மக்கள் மத்தியில் போய் அதனை விளக்கி அவர்களையும் தம் பக்கம் இழுக்கும் பொறுமையோ அர்ப்பணிப்போ இல்லாமையால், ஓடிப்போய் ‘துரோகி’ பட்டத்தைச் சூட்டுவதே எமது அரசியலின் முத்திரையாகிற்று.

அது எங்கு எம்மைக் கொண்டு போயிற்று என்பதை சற்று நினைவு கூரவே வேண்டும். அளவற்ற சகோதர இனப்படுகொலைகள், ஒருவித வேற்று அபிப்பிராயத்திற்கும் இடம்கொடாத விடுதலைப் போராட்ட அணி, கடைசியில் அதன் முற்றான அழிவு.

ஏன்? வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டதற்கும் இந்த “எங்களுடன் இல்லாவிட்டால் நீ அவர்களுடன்” சித்ததாந்தம் காரணமாயிற்று.

40 வருடங்கள் ஆகியும் இன்றும் அதைத்தான் செய்கின்றோம் எனில், வடக்குத் தமிழ் மக்கள் அரசியலிலிருந்து இதுவரை என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குள் ஒற்றுமையாக இயங்க முடியவில்லையென்பது பல வருடகாலமாக எமக்கெல்லோருக்கும் தெரியும். அதற்குள் தமிழரசுக் கட்சியின் கை ஓங்கியிருந்ததும் எமக்குத் தெரியும்.

இக்கட்சிகளுக்குள் ஒருவித ஜனநாயக நடைமுறைகளும் இருக்கவில்லை என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். இதெல்லாம் தெரிந்திருந்தும் தேர்தலுக்குத் தேர்தல் அவர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தோம். ஆனால், கேள்விகளைக் கேட்கவில்லை.

கட்சிக் கட்டமைப்புக்களை ஏற்றமுறையில் கட்டினார்களா? வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தெரிவு செய்தனர்? மக்கள் மத்தியில் என்ன வேலைத்திட்டத்தினை வைத்திருக்கின்றனர்? என ஒன்றையும் கேட்கவில்லை.

கேட்டால் பதில் வரவில்லையெனில் மாற்றுக் கட்சிகளை உருவாக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. யாராவது இக்கட்சிக்குப் போட்டியாக சுயாதீனமாகக் களமிறங்கினால் அவர்கள் யார்?

என்ன கொள்கையின் அடிப்படையில் இறங்குகிறார்கள்? என ஆராயாது ஒரேயடியாகத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம்.

இப்போது திடீரெனத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ‘இனத்துரோகி’ எனப் பச்சை குத்தி யாழ். மாவட்டம் முழுவதும் அவர்களது படங்களைத் தூக்கிலிடுவதும் தீக்கிரையாக்குவதையும் செய்தால் எமது அரசியலின் சின்னத்தனங்களை என்ன சொல்ல.

இவர்கள் எதற்காக துரோகியாக இனம் காட்டப்படுன்றார்கள் என்றால் அதுவும் நகைப்பிற்கிடமானது. இது எங்கும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

சுதந்திர தின விழாவுக்கு சென்றது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த அறிக்கையினை வெளியிடுவதனைப் பின்போட்டதனை ஏற்றுக் கொண்டது என அவரவர் காரணம் கற்பித்து விளக்குகின்றனர்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்ததற்குப் பின்னர் ஒரு மாற்றமான அரசியற் சூழ்நிலையில், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கை பற்றிப் பார்ப்பதற்கேனும் தயாராக வரும் ஓர் புதிய அரசில் அதன் சுதந்திர தின விழாவில் பங்கேற்பது பற்றி இரு தரப்பு அபிப்பிராயங்கள் நிலவக் கூடுமல்வா? நேசக்கரங்களை நீட்டலாமா இல்லையா என்பது கேள்விக்குரியதே.

இது மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் கீழ் செய்யக்கூடியது போல தெளிவாக போக முடியாது எனத் தீர்மானிக்கக்கூடிய நிலைமையல்ல.

இந்தப் பின்னணியில் சம்பந்தரும் சுமந்திரனும் அதில் பங்கேற்றது இனத்துரேராகமா? அவர்கள் ஒரு அரசியல் யுக்தியாக அதனைக் கையாண்டிருக்கலாம்.

அவர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, இத்தீர்மானத்திற்கு கட்சி மட்டத்தில் இணக்கத்தினைப் பெற வைப்பதற்கு என்ன செய்தார்கள், அதற்குரிய  பொறிமுறைகள் கட்சிக்குள் இருக்கின்றனவா என்கின்ற கேள்விகளையல்லவா நாம் கேட்க வேண்டும்? அதே போலத்தான் ஜெனீவா அறிக்கையின் விடயமும்.

ஏதோ அறிக்கை வெளிவந்தவுடன் போர்க்குற்றற விசாரணை ஆரம்பிக்கப் போவது போலல்லவா துள்ளிக் குதிக்கின்றனர்? அதற்கென ஒரு நீண்ட முறைவழி இருக்கின்றதே ஐயா.

இந்த அறிக்கை இப்போது மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு அங்கத்துவ நாடுகள் “இது புதிய அரசு, அதற்கு சிறிது கால அவகாசம் கொடுப்போம்” என விவாதத்தில் அதனைக் கை தூக்கி விடுவது நிச்சயமாக நடந்திருக்கும்.

இப்பொழுது அறிக்கை வெளியிடுவதைப் பின்போட்டாலும் அதற்கேற்ற முறையில் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக இலங்கை அரசு கற்ற பாடங்கள் சிபாரிசினை செயற்படுத்துவது தொடர்பில் பல முன்னேற்றங்களைக் காட்ட வேண்டும் என அதற்குக் கூறப்பட்டிருக்கின்றது.

அதற்காகத்தானோ என்னவோ இது பிற்போடப்பட்டது தமிழருக்கு சாதகமானது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது தவறென்றாலும்கூட, அதற்காக அவர் துரோகியா? அவர் கொடும்பாவி எரிப்பதுவரை செல்லலாமா? வித்தியாசமான அபிப்பிராயங்களை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையல்லவா இது?

ஒரு நிறுவனம் தனது இலக்குகளை அடைய வேண்டுமானால் அதன் உறுப்பினர்களினதும் பங்கும் பணியாளர்களினதும் பங்கும்  மிக முக்கியமானது என்பதனை எந்தத் தனியார் ஸ்தாபனத்தையோ அல்லது தொண்டரமைப்பினையோ கேட்டாலும் சொல்லுவார்கள்.

இதற்காக இவர்களை ஒரு கூட்டணியாக உருவாக்குதலும், நிறுவனத்தின் நோக்கங்களை விளங்க வைத்தலும் தேவையாகின்றது. முதலில் சகலருக்கும் நிறுவனத்தின் தொலைநோக்குகள் புரிபடவேண்டும்.

அந்நோக்குடன் தொடர்புபட்ட இலக்குகள் புரிய வேண்டும். அதற்கு அடிப்படையான சித்தாந்தமும் மூலோபாயமும் புரிபடவேண்டும்.

இதுவரை எவ்வளவு தூரம் வந்திருக்கின்றோம், இனி எங்கு செல்லப் போகின்றோம் என்னும் மூலோபாயத் திட்டங்கள் போடப்பட வேண்டும்.

இவை கலந்துரையாடப்படும் போக்கில் உறுப்பினர் மத்தியில் இறுக்கமான உறவுகள் கட்டப்பட வேண்டும். அதுகூட ஒரு முறை செய்தால் போதுமானதன்று. வருடாவருடம் செய்யப்பட வேண்டியதொன்று. வருடாவருடம் மூலோபாயத் திட்டங்களள் மீண்டும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் உறுப்பினர்களிலும் பணியாளர்களிலும் முதலீடு செய்தால் மட்டுமே சிறந்து செயற்படும் நிறுவத்தினை உருவாக்க முடியும்.

ஒரு சோப்பு விற்பதற்கே இவ்வளவு ஆயத்தங்கள் தேவையென்றால் இந்நாட்டின் தமிழ் மக்களின் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் கட்சி தனக்குள் எவ்வளவு ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்? இப்படிச் செய்திருந்தால் கூட்டமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கைக்குமான விளக்கம் மக்கள் மத்தியில் இருந்திருக்கும்.

கட்சி உறுப்பினர்களுக்குள்  ஒற்றுமை பேணப்பட்டிருந்திருக்கும். இப்பொழுது நடப்பது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அங்கத்தவரும் ஒவ்வொரு கோணத்தில் செயற்படுவது நடந்திருக்காது.

ஒரு சில சக்திகள் துரோகிப் பட்டம் கட்டுவதற்கு ஏனையோர் துணை போயிருக்க மாட்டார்கள். மொத்தத்தில் எங்கள் சமூகத்தில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம் பெற வழியிருந்திருக்கும்.

இதைவிட்டு இன்றோ சதித்திட்ட அரசியலே நடைபெறுவதைப் பார்க்கலாம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டமைப்பின் சில அங்கத்துவக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. அவை வீட்டுச் சின்னத்தில் போட்டியிடாவிட்டால் முகவரி தெரியாமல் போய்விடும் என்பதே இப்போதைய அரசியல் நிலைமையின் யதார்த்தமாகும்.

புதிய அரசின் கீழ் ஈ.பி.டி.பி., பிள்ளையான் கட்சி போன்ற எதிர்க்கட்சிகளும் பெரிதாக தேர்தலில் சாதிக்க வழியில்லை. கூட்டமைப்பிற்குப் பெரும் போட்டிகளும் கிடையாது.

இந்த நிலைமையில்தான் இத்தேர்தலில் கூட்டமைப்பினைக் கலைக்கும் கருத்து தோற்றம் பெறுகின்றது. கூட்டமைப்பின் ஒவ்வொரு அங்கத்துவக் கட்சியும் தனித்தனியாகப் போட்டி போட்டுப் பாருங்களேன், அதற்குள் வெற்றி பெறும் கட்சிகள் பின்பு நாடாளுமன்றத்தில் கூட்டாக இயங்கலாம் என்கின்ற கதை வெளிவிடப்படுகின்றது.

எப்படியிருந்தாலும், மஹிந்த ராஜபக்‌ஷ அகன்றிருக்கும் சூழலில் இத்தேர்தல் பெரும்பாலும் Home and Home match தானே. இதன் மூலம் வீட்டுச் சின்னம் என்னும் சேலைத்தலைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் காலாவதியான கட்சிகளையும் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

எப்படிப் பார்த்தாலும் தமிழரசுக் கட்சிக்கு நட்டமில்லை. இந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செய்திகள் பலருடைய வயிற்றில் புளியைக் கரைத்ததில் ஆச்சரியம் ஏது? இக்கதைக்கு காரணகர்த்தாவாக அடையாளப்படுத்தப்படும் சுமந்திரன் கொடும்பாவியாக எரியத் தொடங்கி விட்டார்.

இல்லாவிடில், காணாமற் போனோர் பற்றிய கவன ஈர்ப்புப் போராட்டத்தில் சுமந்திரனுடைய கொடும்பாவி சம்பந்தமில்லாமல் எரியுமா?

சிலர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் தக்க வைப்பதற்காக இந்தத் துரோகி விளையாட்டினை ஆரம்பித்து வைத்திருக்கின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இதற்கு எதிராகப் பெருங் கண்டனக் குரல் எழுப்பப்பட வேண்டும். முன்பு இப்படியெல்லாம் நடக்கும்போது நாம் வாளாவிருந்ததினாலேயே எங்கள் அரசியல் இவ்வளவு அழிவுகளைக் கண்டது.

சிறு பிள்ளைத்தனமான துரோகி அரசியலை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் நிராகரிக்கப்படவேண்டும். அதை வைத்துக்கொண்டு அவர்கள் எங்கள் இளைஞர்களைத் திசை திருப்ப முயற்சி செய்தால் அது தடை செய்யப்படவேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர்களும் தாம் இதுவரைகாலமும் செய்து வந்த அரசியலினை மீள் பரிசீலனை செய்வதற்கு முன்வரவேண்டும்.

-சாந்தி சச்சிதானந்தம்

Share.
Leave A Reply