அரசாங்கத்தைத் தாம் பொறுப்பேற்றதன் பின்னர், இரகசிய முகாம்கள் எவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது மீள்குடியேற்றம் மற்றும் மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, மக்களிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்ற தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினர் தமது முகாம்கள் என தெரிவிப்பவை அனைத்தும் தற்காலிக முகாம்கள் என்பதைத் தாம் உறுதியாகத் தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தைத் தாம் பொறுப்பேற்றதன் பின்னர், இரகசிய முகாம்கள் எவையும் இல்லை. அதற்கு முன்னரான சில காலப்பகுதியிலும் இரகசிய முகாம்கள் காணப்படவில்லை. அதற்கு முற்பட்ட காலப்பகுதி தொடர்பில் தம்மால் கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply