“பல நாள் அண்ணன் என்னிடம் தவறாக பழகினான். சரி என்று அப்பாவிடம் இதுபற்றி கூற அப்பாவும் என்னிடம் அதே பாணியில் தவறாக பழக ஆரம்பித்தார்” என்று தனக்கு நடந்த அனைத்தையும் தனது தாயிடம் அழுது புலம்பினாள்.
இன்று அவள் வயிற்றில் வளரும் குழந்தை அண்ணனுடைய குழந்தையா? தந்தையுடைய குழந்தையா? என்று தெரியாத நிலையில் திலினியும் ஒரு குழந்தையை சுமக்கின்றாள்.
“அப்பாடா ஒருவாறாக இன்றைய பொழுது கழிந்து விட்டது. மீண்டும் நாளை இதே போராட்டம் எங்கள் வீட்டில் தொடரத்தான் போகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவுகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. ஒரு பக்கம் நகைகள் அனைத்துமே அடகு வைக்கப்பட்டு மீட்க முடியாத நிலையிலுள்ளன.
அடுத்த பக்கம் எங்களுக்கென்று உள்ள இந்த வீடும் முதலாளியிடம் வட்டிக்கு அடகிலுள்ளது. அது எல்லாவற்றையும் விட ஆசையாசையாய் பெற்றெடுத்த என்னுடைய இரு பிள்ளைகளும் பசியாற சாப்பிட்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன.
எனவே எங்கள் குடும்பத்துக்கு ஒரு விடிவு வர வேண்டும் என்றால் நான் இரண்டு வருடத்துக்கு வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே வழி.
இரண்டு வருடங்கள் அங்கு கஷ்டப்பட்டால் இங்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ந்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்”
என்ற தன்னுடைய முடிவினை தன் கணவரிடம் தெரிவித்து வெளிநாட்டு பயணத்துக்காக ஆயத்தமாகினாள் விமலாவதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
கணவன், இரு பிள்ளைகள் என்ற விமலாவதியின் குடும்பத்தில் வறுமை தலை விரித்தாடியது. கணவன் லக்மால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) நாட் கூலி சம்பளத்துக்கு வேலைக்கு சென்று வந்தான்.
அதுவும் ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்கவில்லை. பிள்ளைகள் இருவர்களில் மூத்தவன் நிரோஷ், கல்வி பொதுத்தராதரப் பரீட்சை எழுதிய போதும் உயர்தரத்தை தொடரும் அளவுக்கு பெறுபேறுகள் போதாமை காரணமாக வீட்டிலேயே இருந்துவிட்டான்.
இளையவள் திலினி ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இந்நிலையில் தான் விமலாவதி தனது குடும்பத்தின் நன்மையைக் கருத்திற்கொண்டு ஊரிலுள்ள தரகர் ஒருவரின் மூலம் பல்வேறு கனவுகளை சுமந்தவாறு குவைத் நகரை நோக்கி பயணமானாள்.
அதன்படி அங்குள்ள முதலாளி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிய ஆரம்பித்தாள். அவளின் அதிஷ்டமோ என்னவோ அவள் சென்ற வீட்டின் எஜமானி விமலாவதியை தனது குடும்பத்தில் ஒருவரை போல் பார்த்துக்கொண்டாள்.
எனவே விமலாவதி நேரத்துக்கு இலங்கையிலிருக்கும் தனது குடும்பத்தின் செலவுகளுக்கு பணத்தை அனுப்பியதுடன், அடிக்கடி அவர்களுடன் தொலைபேசியிலும் தொடர்புக் கொண்டாள்.
ஆயினும் சில மாதங்களின் பின் நிலைமை தலைகீழாக மாறியது. இலங்கையில் வசிக்கும் தனது கணவரிடமும் , பிள்ளைகளிடமும் இருந்து எந்த தகவல்களும் வரவில்லை.
அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் பாவனையாளரிடமிருந்து பதிலேதும் கிடைக்கவில்லை என்ற வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் பதில் மட்டுமே கிடைக்கப்பெற்றது. எனவே விமலாவதி கதி கலக்கி போனாள்.
தனது உறவுகளை பிரிந்து சோகங்களை சுகமாய் ஏற்று வந்தவளுக்கு கணவன், பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடுவது மட்டுமே ஒரே ஆறுதலாகவிருந்தது.
அதுவும் இப்போது இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இலங்கையில் வசிக்கும் தனது தங்கையுடன் தொடர்பினை ஏற்படுத்தி “நான் எனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த பலமுறை முயற்சி செய்தேன்.
ஆனால், தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் எனக்கு அழைப்பை ஏற்படுத்தவில்லை. ஆகவே நீ எங்கள் ஊருக்கு சென்று வீட்டின் நிலைமையை பார்த்து எனக்கு தெரிவிப்பாயா? “என்று விமாலவதி தன் தங்கையிடம் கெஞ்சி மன்றாடினாள்.
அதன்படி விமலாவதியின் தங்கை அக்காவின் வீட்டுக்கு சென்ற போது அவளின் கணவரை வாசலிலேயே சந்திக்கின்றாள்.
குடிவெறியில், நாற்றமான சாராயப் போத்தலை கையில் ஏந்தியவாறு வருகின்றான்.
எனவே அவனிடம் கதைக்க விரும்பாமல் நேராக வீட்டுக்குள் சென்று பிள்ளைகளை பார்ப்போம் என்று வீட்டுக்குள் செல்ல முயற்சித்தவளை விமலாவதியின் கணவர் வழிமறுத்து “எங்கு செல்கின்றாய் இங்கு எவளும் வர தேவையில்லை. என்று” வாயிலிருந்து வெளிவந்த எல்லா கெட்ட வார்த்தைகளாலும் தீட்டித்தீர்த்தான்.
எனவே அவன் எதையோ மறைக்க தான் வீட்டுக்குள் போகவிடாமல் தடுக்கின்றான் என்பதை புரிந்துக்கொண்ட அவள் அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் சென்று விசாரிக்கின்றாள்.
அப்போது தான் ஊரார் தெரிவித்த தகவல்களின் படி விமலாவதியின் மகள் திலினி 6 மாதங்களாக வெளியில் வரவில்லை. தந்தையும், மகனும் சேர்ந்து பிள்ளையை ஏதோ செய்து விட்டார்கள் என்பது தெரியவந்தது.
அதன்பின் அவள் நடந்த அனைத்தையும் முழுமையாக தனது அக்கா விமலாவதியிடம் கூறாமல். “நீ உடனடியாக இலங்கைக்கு வா வீட்டில் ஏதோ அசாம்பவிதம் நடந்துள்ளது போல் தெரிகின்றது” என்று தெரிவித்தாள்.
அதன்படி விமலாவதி தனது குவைட் எஜமானியிடம் நான் உடனடியாக இலங்கைக்கு போக வேண்டும் என அனுமதி கேட்டாள்.
அவளும் தனது சொந்த பணத்தில் விமலாவதிக்கு விமான பயண சீட்டினையும் எடுத்துக் கொடுத்து, கையோடு சம்பள பணத்துக்கு மேலதிகமாகவும் சிறிது பணத்தையும் கொடுத்து அனுப்பினாள்.
எனவே மீண்டும் குவைட்டிலிருந்து தனது வீட்டுக்குச் சென்ற போது வீட்டில் ஆங்காங்கே சிகரட் துண்டுகளும், பழைய சாராயப் போத்தல்களும் கிடந்தன.
தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தவளுக்கு வீட்டின் அடுப்பங்கரையில் தான் உயிர் கொடுத்து உருவாக்கிய ஆசை மகள், இன்னுமொரு உயிரை சுமந்தவளாய் வயிற்றில் குழந்தையோடு இருந்தாள். விமலாவதி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
தனது ஆசை மகளை கட்டியணைத்து “இது என்னம்மா கோலம். இதற்காகவா இத்தனை நாள் கஷ்டப்பட்டேன். உனது இந்த நிலைமைக்கு காரணம் யார்? என்று கேட்டாள்.
அதற்கு அவளோ “பல நாள் அண்ணன் என்னிடம் தவறாக பழகினான். சரி என்று அப்பாவிடம் இதுபற்றி கூற அப்பாவும் என்னிடம் அதே பாணியில் தவறாக பழக ஆரம்பித்தார்” என்று தனக்கு நடந்த அனைத்தையும் தனது தாயிடம் அழுது புலம்பினாள்.
இன்று அவள் வயிற்றில் வளரும் குழந்தை அண்ணனுடைய குழந்தையா? தந்தையுடைய குழந்தையா? என்று தெரியாத நிலையில் திலினியும் ஒரு குழந்தையை சுமக்கின்றாள்.
இந்த நிலையில் தந்தையும், சகோதரனும் சிறை வாசம் அனுபவித்து வருகின்றார்கள். எனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பல பெண்களின் குடும்ப வாழ்க்கையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணமே உள்ளன.
இந்நிலையில் சில சம்பவங்கள் வெளிவந்த நிலையில் பல சம்பவங்கள் நான்கு சுவர்களுக்குள்ளேயே புதைக்கப்பட்டு விடுகின்றன என்பதே உண்மை.