ஹைதராபாத்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் பெற்றோர்களின் வாழ்த்துக்களோடு திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது அமெரிக்கா கலாச்சாரத்தில் புதியது அல்ல என்றாலும், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்தான் இந்த திருமணம் நடந்தது. ஆச்சரியப்படும் வகையில் அந்த இளைஞர்கள் திருமணத்தை அவர்களது பெற்றோர்களே முன்னின்று நடத்தி வைத்துள்ளனர். .
காதல் மணம் புரிந்த அந்த இந்திய வம்சாவளி இளைஞர்கள் பெயர் சந்தீப்– கார்த்திக், இதில் சந்திப் திருவனந்தபுரத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர். கார்த்திக் அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.
பேஸ்புக்கில் இருவரும் அறிமுகமாகி, நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழகினார்கள். திருமணம் செய்யவும் முடிவு செய்தனர்.
தங்களது எண்ணத்தை இருவரும் பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரின் பெற்றோரும் இவர்களது திருமணத்துக்குப் பச்சை கொடி காட்டினார்கள்.
இதையடுத்து கலிபோர்னியாவில் இவர்களது திருமண ஏற்பாடு கோலாகலமாக நடந்துள்ளது. திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
கேரள முறைப்படி அக்னி வளர்த்து அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து சந்தீப்–கார்த்திக் திருமணம் , ஆண் பெண் திருமணம் போலவே தடபுடலாக நடந்தது. வேத விற்பன்னர் மந்திரம் ஓத சந்தீப் கழுத்தில் கார்த்திக் தாலி கட்டினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேங்காய் சேர்த்த கேரள உணவும் சுவைபட பரிமாறப்பட்டது. சந்தீப்– கார்த்திக் திருமண காட்சிகள் இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.
இதற்கு இந்தியாவில் ஒருதரப்பினர் கடுமையான கண்டனத்தை எழுப்பி உள்ளனர்.