இரண்டு வயதுப் பெண் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி-ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணறொன்றில் இன்று மாலை 4.00 மணியளவில் வீழ்ந்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புணானை, ரிதிதென்ன பாடசாலை வீதியைச் சேர்ந்த முகம்மது ஹக்கிம் என்பவர் தனது குடும்பத்துடன் ஓட்டமாவடியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டில் இன்று மாலை நடைபெற்ற திருமண வைபவத்திற்கு வந்த சமயமே இச்சோகச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
திருமண வீட்டில் பிள்ளைகளுடன் தனது பிள்ளையும் விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு பெற்றோர் இருந்துள்ளனர்.
இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பிள்ளையைக் காணாததால் வீட்டுச் சூழலில் தேடிப்பார்த்து விட்டு, வீட்டுக் கிணற்றில் பார்த்த போது, பிள்ளை வீழ்ந்து கிடப்பது தெரிய வரவும், பிள்ளையை உடன் மீட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, பிள்ளை ஏற்கனவே மரணமடைந்துள்ளதை வைத்தியசாலை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.
அப்ரிதா (வயது – 02) என்ற பெண் குழந்தையே மரணமடைந்ததாக பிள்ளையின் தந்தை ஹக்கீம் தெரிவித்தார்.
குழந்தையின் சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக வாழைச்சேனைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் தந்தையை கொன்றுவிட்டு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த மகன்!