ஈரான் அணுகுண்டைத் தயாரிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரமாக நடக்கும் வேளையிலே வட கொரியா அணுகுண்டுகளைத் தயாரித்ததுடன் அவற்றை வட அமெரிக்காவரை எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் தயாரித்து வருகின்றது என்கின்றது தென் கொரியா.
2016ஆம் ஆண்டு ஒக்டோபரிலும், 2009ஆம் ஆண்டு மேயிலும், 2013ஆ-ம் ஆண்டு பெப்ரவரியிலும் வட கொரியா நிலத்துக்குக் கீழ் அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனையை மேற்கொண்டது. தற்போது வட கொரியாவிடம் பத்துக்கு மேற்பட்ட அணுகுண்டுகள் இருப்பதாக நம்பப்படுகின்றது.
அமெரிக்காவைத் தாக்க முடியுமா?
வட-கொரியா மற்ற நாடுகள் செய்யாத ஒன்றைச் செய்ய முயல்கின்றது அல்லது செய்து முடித்துவிட்டது.
அணுகுண்டுகளை சிறியளவாக அது உருவாக்கியுள்ளது, அத்துடன் தொலைதூரம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் உருவாக்கியுள்ளது.
வட கொரியாவின் அணுகுண்டுகள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகளை பற்றியும் ஐக்கிய அமெரிக்காவின் படைத்துறை உயரதிகாரிகளும் தென் கொரியப் படைத்துறையின் உயரதிகாரிகளும் பகிரங்கமாக முரண்பட்டுக் கொண்டனர்.
வட கொரியாவால் ஐக்கிய அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல்களை தனது ஏவுகணைகள் மூலம் செய்ய முடியும் என தென் கொரிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
அமெரிக்க அதிகாரிகள் அதை மறுக்கின்றனர். தென் கொரியாவைக் கைப்பற்றி அதை வட கொரியாவுடன் இணைக்கும் கனவு வட கொரிய ஆட்சியாளர்களுக்கு இருந்து வருகின்றது.
இதனால் தென் கொரியா வட கொரியாவின் படைவலுப் பெருக்கத்தையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது. வட கொரியாவின் கே.என்–-08 ஏவுகணைகள் 5,600மைல்கள் தொலைவிற்கு மட்டுமே பாய முடியும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்தாகும். இவற்றால் அமெரிக்காவின் மேற்குக் கரையை மட்டும் தாக்க முடியும்.
வட கொரிய -– ஈரானியக் கூட்டு
ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய குறுந்தூர ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து கப்பல்களை நோக்கி ஏவக் கூடியவை (ground-to-ship ballistic missile). இவை அதி உயர் வேகத்தில் பாய்வதால் இவற்றை இடைமறிக்க முடியாது.
வட கொரியா உருவாக்கும் ஏவுகணைகள் இரு நூறு முதல் முந்நூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை. இந்த ஏவுகணை உருவாக்கும் திட்டத்தில் வட கொரியாவுடன் ஈரானும் இணைந்துள்ளது.
ஏற்கனவே அணுகுண்டு உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது. வடகொரியா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது உண்மையானால் இது தென் கொரியாவிற்குப் பெரும் சவாலாக அமையும்.
வீணாகிப் போன வட கொரிய விண்வெளி முயற்சி
இதுவரை ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, உக்ரெய்ன். பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஈரான், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விண்வெளிக்கு ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளன.
ஈராக், பிரேசில், வட கொரியா ஆகிய நாடுகள் தோல்வியடைந்துள்ளன. ஏவுகணைத் தொழில்நுட்பம் முதலில் சீனாவில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. 1429இல் பிரெஞ்சுப் படையினர் ஏவுகணைகளைப் பயன்படுத்தினர்.
1782இல் இந்தியா மீது படை எடுத்த பிரித்தானியத் துருப்புக்கள் மீது முனையில் இரும்புக் குண்டுகளைக் கொண்ட ஏவுகணைகள் வீசப்பட்டன.
பின்னர் பிரித்தானியர் அவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். முதலாம் உலகப் போரில் பிரித்தானியப் படைகள் ballistic missiles என்னும் ஏவுகணைகளை ஜேர்மனிய விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்தின.
தொடர்ந்து ஜேர்மனியரும் ஏவுகணைகளை உருவாக்கினர். 1926இல் திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா உருவாக்கியது.
தொடர்ந்து சோவியத் ஒன்றியம் பெரிய ஏவுகணைகளை உருவாக்கியது. அது அவர்களுக்கு விண்வெளிக்கு செய்மதியை முதலில் செலுத்தும் தொழில்நுட்பத்தைக் கொடுத்தது.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையாகும். 1988இலிருந்து வட கொரியாவின் நான்கு ஏவுகணைப் பரிசோதனைகள் படு தோல்வியில் முடிவடைந்துள்ளன.
சிலர் இவை பரிசோதனைகள் அல்ல பிராந்திய ஆதிக்க ஆர்வக் கோளாறே என்றும் சொல்லப்பட்டது.
அமெரிக்காவிற்கு ஈரான் வேறு வட கொரியா வேறு?
வட கொரியாவின் அணுகுண்டு உற்பத்தியிலும் பார்க்க ஈரானின் அணுகுண்டு உற்பத்தியில் ஐக்கிய அமெரிக்கா அதிக அக்கறை காட்டியமைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
முதலாவது வளைகுடா நாடுகளிலிருந்து நடக்கும் உலக எரிபொருள் விநியோகம் சீராக நடக்க வேண்டும்.
இரண்டாவது இஸ்ரேலின் பாதுகாப்பு. வட கொரியாவின் படைவலுப் பெருக்கம் அமெரிக்காவிற்கு ஒருவகையில் அதன் புவிசார் கேந்திரோபாயத்திற்கு உதவி செய்தது என்றே சொல்ல வேண்டும்.
வட கொரியாவிடமிருந்து தனது நட்பு நாடுகளான ஜப்பானையும் தென் கொரியாவையும் பாதுகாப்பது என்னும் போர்வையில் அமெரிக்கா சீனாவிற்கு அண்மையாக இந்த இரு நாடுகளிலும் தனது படைத் தளங்களைப் பெருக்கியுள்ளது.
வட, தென் கொரிய முறுகலின் பின்னணி
1910இலிருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடமிருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொண்டன.
கொரியா வட கொரியா, தென் கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன.
இருபது இலட்சம் பேர் பலியாகினர்.
1953இல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது.
தென் கொரியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டு, ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு நாடுகளில் (மற்றது ஜப்பான்) ஒன்றாகத் திகழ்கிறது. இரு கொரியாக்களும் ஒன்றை ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன.
மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்டதூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது.
தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது.
தென் கொரியாவில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும் எல்லையாக வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது.
Military parade in North Korea
வட கொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது எனப்படுகிறது.
இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுகுண்டு தயாரித்தமை உலகை உலுக்கியுள்ளது. வட கொரியாவின் அணுகுண்டு தயாரிப்பைத் தொடர்ந்து அதன் மீது அமெரிக்காவும் தென் கொரியாவும் பொருளாதாரத் தடையை விதித்தன. இது வட கொரியாவை மேலும் ஆத்திரப்படுத்தியது.
வட கொரியாவின் அணுகுண்டுகளையிட்டு சீனாவும் கரிசனை காட்டி வருகின்றது. வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை அதன் படைவலுப் பெருக்கத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
சீனா, ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் 2009ஆம் ஆண்டு வட கொரியாவுடன் அதன் அணுகுண்டுகள் தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தன.
அமெரிக்காவும் ஜப்பானும் வட கொரியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ஆனால் வட கொரியா தனது யூரேனியம் பதப்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது.
1970களில் தென் கொரியா இரகசியமாக அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டது பின்னர் தன்னை ஒரு அணுகுண்டு இல்லாத நாடாகப் பிரகடனப்படுத்தியது.
ஜப்பானால் எந்நேரமும் ஓர் அணுகுண்டைத் தயாரிக்க முடியும். அணுகுண்டு இல்லாத நாடுகளில் உலகத்திலேயே மிகக் குறைந்த கால அவகாசத்தில் அணுகுண்டைத் தயாரிக்கக் கூடிய ஒரு நாடாக ஜப்பான் இருக்கின்றது.
வட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஓர் இரட்டை வேடதாரியாகவே இருக்கின்றது. வடகொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை சீனா சரிவரக் கடைப்பிடிக்காமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு.
வட கொரியாவும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள் ஆனால், வட கொரியா அணுகுண்டுகளை உருவாக்குவதை சீனா விரும்பவில்லை. அது தனது பிராந்தியத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என சீனா கருதுகிறது.
அமெரிக்க -வட கொரிய உறவு
பில் கிளிண்டன் வட கொரியாவுடனான உறவைச் சீர் செய்ய விரும்பினார். ஜோர்ஜ் புஷ் வட கொரியா ஒரு பிசாசு நாடு என்றும் பிசாசுகளுடன் பேசுவதில் பயனில்லை.
அவற்றைத் தோற்கடிப்பதுதான் ஒரே வழி என்றும் கூறினார். பராக் ஒபாமா 2009ஆம் -ஆண்டு தனது பதவியேற்பு உரையில் வட கொரியாவிற்கு தான் நட்புக்கரம் நீட்டுவதாகக் கூறியிருந்தார்.
ஆனால், வட கொரிய பல்தட்டு ஏவுகணைப் பரிசோதனையையும் அணுகுண்டுப் பரிசோதனையையும் செய்தது.
இதனால் வட கொரியா தொடர்பான தனது கொள்கையை ஒபாமா மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்பட்டது. சோனி நிறுவனம் வட கொரிய அதிபரைக் கேலி செய்து தயாரித்த திரைப்படத்தை வட கொரியா இணையவெளி ஊடுருவல் மூலம் பெற்று பகிரங்கப்படுத்தியது ஐக்கிய அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியது.
அத்துடன் இணையவெளி ஊடுருவலிலும் இணைய வெளிப்போரிலும் வடகொரியா வலிமையடைந்திருப்பது அமெரிக்காவை திகைக்க வைத்தது.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியிலிருந்து தென் கொரியாவும் ஐக்கிய அமெரிக்காவும் வட கொரியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பாக செய்த போர் ஒத்திகையின் போது, ஐக்கிய இராச்சியத்திற்கான வட கொரியத் தூதுவர் Hyun Hak-bong, வட கொரியா தேவை ஏற்படின் அணுகுண்டுகள் மூலமும் மரபுப் படைக்கலன் மூலமும் அமெரிக்காமீது தாக்குதல் செய்யும் என்றார்.
வட கொரியாவின் அணுகுண்டு தொடர்பாக அமெரிக்காவின் அணுகுமுறை ஈரானைப் போல் இருக்காது. அது வட கொரியாவின் வறுமையை மையப்படுத்தி அமையுமா?