ஒரு பெண்ணை, கடத்தி,  கற்பழித்து கல்யாணம்  முடிக்க கூடிய  வசதி  உள்ள  ஒரு  நாடு  உலகத்தில்  இருக்கிறதென்றால் அது இந்தியா தான்.

திருமணம் முடிந்து ஆசிபெற சென்ற இடத்தில் ஏமாற்றி கற்பழித்த மடாதிபதியுடன் புதுப்பெண்ணுக்கு மறுமணம் நடந்தது. கணவர் கைவிட்டதால், கிராம மக்களே மடாதிபதியை தேடி பிடித்து புதுப்பெண்ணுக்கு தாலி கட்ட வைத்தனர்.

புதுப்பெண்

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 26). இவருக்கும் சாமளாபுரா அருகே உள்ள ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 11–ந் தேதி திருமணம் நடந்தது.

கடந்த 31–ந் தேதி சங்கரம்மா தனது கணவர் ஈரண்ணாவுடன் கிராமத்தில் உள்ள மடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மடாதிபதி அனுமந்தப்பாவிடம் புதுமணத் தம்பதியினர் ஆசி பெற்றனர்.

அப்போது அனுமந்தப்பா, சங்கரம்மாவின் அழகில் மயங்கி, அவரை அனுபவிக்க எண்ணினார். அதற்காக ஒரு திட்டத்தையும் அவர் தீட்டினார்.

அதன்படி ஈரண்ணாவிடம் பூஜை செய்தால் கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் நன்றாக வாழலாம் என்று கூறி பூஜை பொருட்கள் வாங்கி வரும்படி கூறி கடைக்கு அனுப்பிவைத்தார். இதனால் ஈரண்ணா கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு மடத்திற்கு வந்தார்.

திடீர் மாயம்

ஆனால் அங்கு மடாதிபதி அனுமந்தப்பாவும், சங்கரம்மாவும் இல்லை. இதனால் ஈரண்ணா தனது மனைவி வீட்டிற்கு சென்றிருக்கலாம் என கருதி வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அங்கும் சங்கரம்மா இல்லாததால் அதிர்ச்சி அடைந்த ஈரண்ணா, பல இடங்களில் தேடி பார்த்தார். இருப்பினும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மடாதிபதியின் நயவஞ்சகத்தை அறியாத ஈரண்ணா சம்பவம் நடந்த 3 நாளுக்கு பிறகு மடாதிபதி அனுமந்தப்பாவை சந்தித்து, தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது அனுமந்தப்பா, எனது தெய்வீக சக்தி மூலம் உனது மனைவி எங்கே இருக்கிறார் என்பதை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தருவதாக கூறி பூஜை செய்துள்ளார்.

பூஜை நடக்கும் போதே, சாமாளாபுராவில் உள்ள மலை மல்லேஸ்வரா கோவிலில் சங்கரம்மா இருப்பதாக அனுமந்தப்பா கூறியுள்ளார்.

இதையடுத்து ஈரண்ணா கோவிலுக்கு சென்று, அங்கு தனியாக இருந்த சங்கரம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

கடத்தி கற்பழிப்பு

பின்னர் 3 நாட்களாக எங்கே சென்றாய் என்று சங்கரம்மாவிடம் ஈரண்ணா கேட்டுள்ளார். அப்போது, தன்னை மடாதிபதி அனுமந்தப்பா வசியம் செய்து பல்லாரியில் உள்ள மரியம்மன கிராமத்திற்கு அழைத்து சென்று ஒரு வீட்டில் சிறை வைத்து 3 நாட்களாக கற்பழித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஈரண்ணா, இனி உன்னுடன் வாழமாட்டேன் என்று கூறி சங்கரம்மாவை வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதற்கிடையே மடாதிபதி அனுமந்தப்பாவும் மடத்தில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார்.

இதனால் செய்வது அறியாது தவித்த சங்கரம்மா, சம்பவம் குறித்து கொப்பல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

அந்த புகாரில், மடாதிபதி அனுமந்தப்பா என்னை கற்பழித்துவிட்டார். இதனால் எனது கணவர் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்து, வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டார். எனவே, அனுமந்தப்பாவை கண்டுபிடித்து என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மடாதிபதிக்கு வலைவீச்சு

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு, கொப்பல் புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து கொப்பல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மடாதிபதி அனுமந்தப்பாவை தேடி வந்தனர். ஆனால் போலீசார், அனுமந்தப்பாவை பிடிக்க தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கரம்மாவின் உறவினர்களும், கிராம மக்களும் மடாதிபதி அனுமந்தப்பா எப்படியும் மடத்திற்கு வருவார் என கருதி, மடத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22–ந் தேதி இரவு அனுமந்தப்பா தனது மடத்திற்கு வந்துள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் 100–க்கும் மேற்பட்டோர் உடனே மடத்திற்கு விரைந்து சென்றனர்.

மறுமணம்

இதைப்பார்த்த அனுமந்தப்பா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் அவரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

உடனே சிறிது நேரத்திலேயே அனுமந்தப்பாவையும், சங்கரம்மாவையும் மலை மல்லேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமி சன்னிதியில் மடாதிபதியுடன் சங்கரம்மாவுக்கு கிராம மக்கள் மறுமணம் செய்து வைத்தனர்.

‘பெண்ணின் வாழ்க்கை கெட்டுப்போய்விடக் கூடாது‘ என்பதால் சங்கரம்மாவை திருமணம் செய்தேன் மடாதிபதி பேட்டி

இதுகுறித்து மடாதிபதி அனுமந்தப்பா திருமணம் நடந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் சங்கரம்மாவை வசியம் செய்து கற்பழிக்கவில்லை.

அதற்கு மேல் அதுபற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டுப்போய்விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் சங்கரம்மாவை திருமணம் செய்ய சம்மதித்தேன்.

அதன்படி அவருக்கு தாலியும் கட்டியுள்ளேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவியாக நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவோம்“ என்றார்.

அதேபோல் சங்கரம்மா நிருபர்களிடம் கூறுகையில், மடாதிபதி அனுமந்தப்பா என்னை பல்லாரிக்கு கடத்தி சென்று கற்பழித்து விட்டார்.

இதுபற்றி அறிந்ததும் எனது கணவர் என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். மேலும் அனுமந்தப்பாவும் மாயமாகிவிட்டார்.

இதனால் அனுமந்தப்பாவை கண்டுபிடித்து, அவருடன் எனக்கு திருமணம் நடத்தி வைக்க கோரியும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தேன். இந்த சம்பவத்தால் நான் மிகவும் மனம் உடைந்து போய் இருந்தேன்.

எனது உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து, எனக்கும், அனுமந்தப்பாவுக்கும் மறுமணம் செய்து வைத்துள்ளனர்.

அவர்களுக்கு எனது நன்றி. நான் அனுமந்தப்பாவுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவேன்“ என்றார்.

Share.
Leave A Reply