இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமையை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு விமர்சித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தின் 57-ம் படையணிக்கு தளபதியாக இருந்த ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டமை ‘நீதிக்கு கிடைத்த அடி’ என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மோசமான மனித உரிமை துஷ்பிரயோகங்களுடன் இலங்கை இராணுவத்தின் 57-ம் படையணி தொடர்புபட்டிருந்ததாகவும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் ஜகத் டயஸின் படிநிலை உயர்வு, போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் புதிய பதவி இம்மாதம் 7-ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருந்தாலும் கடந்த 15-ம் திகதியே வெளிப்படுத்தப்பட்டது.
‘இலங்கையின் புதிய அரசாங்கம் போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கான நேர்மையான பொறுப்புக்கூறல் தொடர்பில் உறுதியளித்திருந்தது. ஆனால் துஷ்பிரயோகம் செய்த படையணியின் தளபதியை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளமை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைந்ததற்கு சமம்’ என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.
இறுதிக் கட்டப் போரின்போது 57-வது படையணி நிலைகொண்டிருந்த இடங்களில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள் குறித்து தாம் ஏற்கனவே அறிக்கையிட்டிருப்பதையும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு நினைவூட்டியுள்ளது.
57-ம் படையணியின் முன்னாள் தளபதி ஜகத் டயஸ், போருக்குப் பின்னர் ஜெர்மனிக்கான இலங்கை தூதரகத்தின் தலைமையதிகாரியாக பணியாற்றினார்.
2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவருக்கு வீசா மறுத்திருந்ததாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகின்றது.
இதனிடையே, இது தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக்க, குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றம் இழைத்தவராக கருதமுடியாது என்று பதிலளித்தார்.
‘இராணுவத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு தகுதியானவர்களாக இருந்த ஜெனரல்கள் 5,6 பேர் மீது இப்படியான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்தே ஆகவேண்டியுள்ளது’ என்றார் ஷிரால் லக்திலக்க.