
பிரான்ஸில் வசிக்கும் இலங்கையரான பிரபல எழுத்தாளர் ஷோபா சக்தி எனும் அன்தனிதாசன் ஜேசுதாசன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரான்ஸை சேர்ந்த ஜக்ஸ் அவ்டியர்ட் இப் படத்தை இயக்கியுள்ளார்.
தமிழகத்தை தளமாகக் கொண்ட நடிகை கைலேஸ்வரி ஸ்ரீநிவாசன் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததுடன், குளோடின் வினாசித்தம்பி, பிரெஞ்சு நடிகர் வின்சன்ட் ரொட்டியர்ஸ், கொங்கோவில் பிறந்த மார்க் ஸின்கா உட்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

உலகின் பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட 19 திரைப்படங்கள் இவ்விழாவின் முக்கிய விருதுகளுக்கு போட்டியிட்டன.
இவ்விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற விருது வழங்கல் வைபவத்தில் சிறந்த படத்துக்கான மதிப்பு மிக்க “பாம் டி”ஓர்” (கோல்டன் பாம்) விருது தீபன் படத்துக்கு வழங்கப்பட்டது.
ஷோபா சக்தி, கைலேஸ்வரி சகிதம் மேடையேறிய படத்தின் இயக்குநர் ஜக்ஸ் அவ்டியர்ட் இவ்விருதை பெற் றுக்கொண்டார்.
“தீபன்” திரைப்படமானது இலங்கையின் முன்னாள் தமிழ் போராளி ஒருவரும் பெண்ணொருவரும் ஒரு சிறுமியும் இலங்கையிலிருந்து சென்று பிரான்ஸில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முயற்சிப்பதை அடிப்படையாக் கொண்டதாகும்.
இதில் தீபன் பாத்திரத்தில் நடித்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஷோபா சக்தி (அன்தனிதாசன் ஜேசுதான்) முன்னாள் போராளியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் “தீபன்” படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டிருந்தன.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 21 ஆம் திகதி காண்பிக்கப்பட்ட இப்படம் பிரான்ஸில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திரையிடப்படவுள்ளது.
இம்முறை, கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி ஓர் விருதுக்கு அடுத்ததாக இரண்டாவது மதிப்பு மிக்க விருதான “குரோன் ப்றீ” விருதை லஸ்லோ நேம்ஸ் இயக்கிய சன் ஒவ் சோல் படம் வென்றது. யோர்கோஸ் லன்திமோஸ் இயக்கிய “த லொப்ஸ்டர்” எனும் படத்துக்கு ஜூரிகள் விருது வழங்கப்பட்டது.
தாய்வானைச் சேர்ந்த ஹோஹ் சியாவோ சியென், அவர் இயக்கிய தி அசாசின் படத்திற்காக சிறந்த இயக் குநர் விருதை வென்றார்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை குரோனிக் படத்திற்காக மைக்கல் பிராங்கோ வென்றார். தி மெஷர் ஒவ் மா படத்தில் நடித்த பிரெஞ்சு நடிகர் வின்சன் லிண்டன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
“கரோல்” படத்தில் நடித்த அமெரிக்க நடிகை ரூனி மரா, மோன் ரோய் எனும் படத்தில் நடித்த பிரெஞ்சு நடிகை இமானுவெலா பேர்கொட் ஆகியோருக்கு பகிர்ந்த ளிக்கப்பட்டது.