இலங்கையில் நிலவிய யுத்தம், மோசமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைமைகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச்சென்ற இலங்கையர்களில் பலர் பெரும் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குடும்பங்களுடன் சென்ற பலர் குறித்த தகவல்கள் இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில்  குடியேறும் கனவுடன் சென்று பணத்தையும் தொலைத்து நிம்மதியையும் இழந்த குடும்பஸ்தர் ஒருவர் நாடு திரும்பியிருக்கின்றார்.

வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் லிங்கராஜா என்ற 4 பிள்ளைகளின் தந்தையே ஆஸ்திரேலிய கனவு கலைந்த நிலையில் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருக்கின்றார்.

ஆனால், ஆஸ்திரேலியா செல்வதற்காகப் பெற்றிருந்த பெரும் கடனில் இன்னும் பத்து லட்சம் ரூபா பணம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அந்தக் கடனைக் கட்டுவதற்கு வழியின்றி தவிப்பதாக அவர் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படாமல் தீவு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த அவர், புகலிடத்துக்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் அதற்காக பிறருடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கின்றார்.

பதினேழு நாட்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அரசுக்கு தாங்கள் அழுத்தம் கொடுக்கலாமே தவிர, நேரடியாக எதனையும் செய்ய முடியாது என்று ஐநா அதிகாரிகளும் மனித உரிமை அதிகாரிகளும் கூறிவிட்டதாக லிங்கராஜா கூறுகின்றார்.

எரிக்கும் வெயில். தொற்றுநோய்கள், சீரான உணவு இல்லை, எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை என்ற நிலைமையில் ஆஸ்திரேலிய கனவு கலைந்து, குடும்பத்தின் பிரிவால் வாடிய லிங்கராஜா, மனைவி பிள்ளைகளுடன் இறந்தாலும் பரவாயில்லை, நாட்டுக்குத் திரும்பிச்செல்வோம் என்ற முடிவோடு ஐஓஎம் என்ற சர்வதேச நிறுவனத்தின் உதவியோடு நாடு திரும்பியிருக்கின்றார்.

ஊரில் அவருக்கு அதிகமாக இருப்பது கடன் சுமை மட்டுமே. அதைத்தவிர மனைவியும் குழந்தைகளுமே தனது சொத்துக்கள் என்று கண்கலங்கி கூறுகின்றார் லிங்கராஜா.

கடன் சுமையினால் கலங்கிப் போயிருக்கும் லிங்கராஜா, கடல்தொழில் செய்வதற்கான முதலீட்டுப் பணமாக 8 லட்சம் ரூபா இருந்தால் தொழில்செய்து கடன்களைக் கட்டி சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று கூறுகின்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு   சென்று   பிழைக்கலாம்  என்பதை  வடகிழக்கு தமிழர்கள்  இனிமேல்  நம்பவேண்டாம.  அங்கு செல்லும்  குடியேற்றவாசிகளுக்கு   எந்தவித உரிமையும் கிடையாது.

வீணாக  ஏஜென்சிகளுக்கு காசுகளை கட்டி ஏமாறவேண்டாம.

Share.
Leave A Reply