சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் இன்று இரகசிய இடமொன்றில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

14431
கார்ல்டன் சிரிலிய சவிய பவுண்டேசன் என்ற அமைப்பின் வங்கிக் கணக்குத் தொடர்பாக இன்று விசாரணைக்கு வருமாறு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சிராந்தி ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

shiranthi-inquary-2இன்று காலை 9.30 மணியளவில், அவர் கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்கு மூலம் அளிப்பதற்காக சமூகமளிப்பார் என்று நேற்று சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் அனோமா வெலிவிற்ற அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு முன்பாக, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கூடினர்.

shiranthi-inquary-4எனினும், இதனை முன்னரே எதிர்பார்த்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், வேறொரு இடத்துக்கு அழைத்து சிராந்தி ராஜபக்சவிடம் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர்.

முன்னதாக, மகிந்த ராஜபக்சவுடனேயே, சிராந்தி ராஜபக்ச விசாரணைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.

சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு தமது பணியகத்துக்கு வெளியே உள்ள இடம் ஒன்றில் வைத்து வாக்குமூலம் பெற்றதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் விசாரணை நடத்தப்பட்ட இடம் எது என்பதை அவர் வெளியிட மறுத்துள்ளார்.

shiranthi-inquary-3அதேவேளை, சபாநாயகரின் இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டதான ஒரு தகவல் கூறுகிறது.

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு முன்பாக தமது ஆதரவாளர்களைக் கொண்டு போராட்டம் நடத்தி, விசாரணைக்கு முன்னிலையாகாமல் தவிர்க்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு வேறு இடமொன்றுக்கு அழைத்து, சிராந்தியிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, மகிந்தவின் திட்டத்தை பிசுபிசுக்கச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share.
Leave A Reply