யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை – புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவுக்கு இடம்பெற்ற கொடுமை இலங்கையின் முழு பெண்களுக்கும் இடம்பெற்ற கொடூரத்துக்கு சமமானது. இது ஒரு மிலேச்சத்தனமான செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இன்று, நாளைக்குள் அவசரமாக நிறைவுறுத்த முடியாது.
இது ஒரு பரந்த விசாரணை வித்தியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறையில் வைத்து விஷேட வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா நீதிமன்றில் தெரிவித்தார்.
வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேலதிக விசாரணை அறிக்கையை சமர்பித்து அவர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிலையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் பாதிக்கப்பட்ட தரப்பினர் (வித்தியா குடும்பத்தினர் ) சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வீ.தவராசாவின் வாதத்துக்கு அமைய 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அறியப்படும் மகாலிங்கம் சசிகுமார் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றுக்கு புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.
மாணவி வித்தியா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களும் நேற்று முதன் முதலாக ஒன்றாக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது ஊர்காவற்றுறைப் பிரதேசத்தின் பாதுகாப்பு என்றும் இல்லா அளவு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்ததுடன் மன்றுக்கு வெளியே நீர் பீய்ச்சியடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு மேலதிகமாக அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் வரவழக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விஷேட அதிரடிப்படையினரின் பவல் வாகனத்தில் சுமார் 10 அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு வழங்க மேலதிகமாக 6 ஜீப் வண்டிகளில் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு வழங்க என்.சி.1845 என்ற இலக்கத்தை உடைய யாழ்.சிறைச்சாலைக்கு சொந்தமான விஷேட பஸ் வண்டி ஊடாக சந்தேக நபர்கள் காலை 7.00 மணியளவில் ஊர்காவற்றுரை நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் இல்லை
வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகவில்லை.
அத்துடன் வித்தியாவின் தாயாரும் அவரது அண்ணனும் மன்றுக்கு சமூகமளித்திருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற ரீதியில் அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வீ.தவராசா தலைமையில் சட்டத்தரணிகளான ரீ.ஜனகன்,எஸ்.விஜேலக்ஷ்மி, கார்திகா மற்றும் அம்பிகா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
முறைப்பாட்டாளர் தரப்பில் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
பிரதிவாதி கூட்டில் சந்தேக நபர்கள்
இந் நிலையில் வழமையான நீதிமன்ற நடவ்டிக்கைகளின் பின்னர் முதல் விசாரணையாக இந்த வழக்கு நீதிவான் லெனின் குமாரினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான பூபால சிங்கம் இந்திர குமார், பூபாலசிங்கம் ஜெயகுமார், பூபாலசிங்கம் தவக்குமார், சஷேந்திரன், சந்திரஹாசன், கிரிஷாந்தன், குகநாதன்,கோகுலன் மற்றும் சசிகுமார் ஆகியோர் அதே ஒழுங்கின் பிரகாரம் பிரதிவாதி கூட்டில் ஏற்றப்பட்டே இந்த விசாரணைகள் இடம்பெற்றது.
மேலதிக விசாரணை அறிக்கை தாக்கல்
இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மாணவி வித்தியா படுகொலை தொடர்பிலான மேலதிக விசாரணை அறிக்கை நீதிவானுக்கு சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையைத் தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா அதில் உள்ள விடயங்களை நீதிவானிடம் தெரிவிக்கையில்;
ஊர்காவற்றுரைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா சிறையில் வைக்கப்பட்டிருந்த போது நாம் அவர்களிடம் விஷேட வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டோம்.
அந்த வாக்கு மூலத்தில் உள்ள விடய்ங்களில் அவர்கள் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றின் உண்மைத் தன்மைத் தொடர்பில் நாம் தற்போதும் அவதானம் செலுத்தி வருகின்றோம்.
அந்த வாக்கு மூலத்தில் சந்தேக நபர் ஒருவர் தான் சம்பவம் இடம்பெறும் போது பிரதேசத்தில் இருக்கவில்லை என மறுக்கின்றார்.
எனினும் நாம் அதனை உடனடியாக உறுதி செய்ய முடியாது. அது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
வாக்கு மூலத்தை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. சாட்சியங்களின் படி வாக்கு மூலம் ஒத்துப் போக வேண்டும். எனவே தான் வாக்கு மூலத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அதனால் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சந்தேக நபர்கள் ஒன்பது பேரினதும் இரத்த மாதிகளைப் பெற்று அதனை டீ.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இதற்காக யாழ்.சிறைச் சாலை அத்தியட்சருக்கு சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அத்துடன் வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள எச்.என்.பி.தனியார் வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்றம் தொடர்பிலான இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சீ.சீ.ரீ.வி.கமராவின் மாற்றங்கள் செய்யப்படாத மூலப் பிரதி எமக்கு அவசியமாகும்.
இதற்காக அந்த வங்கியின் கிளை முகாமையாளருக்கு மன்று உத்தரவொன்றினைப் பிறப்பிக்க வேண்டும். கடந்த மே 13 முதல் 14 ஆம் திகதி வரையிலான சீ.சீ.ரீ.வி.பதிவுகளே எமக்கு இவ்வாறு வசியமாகும்.
குறித்த திகதியில் சந்தேக நபர் ஒருவர் தான் வெள்ளவத்தையில் இருந்ததாகவும் இந்த வங்கியில் பணம் பெற்றதாகவும் கூருகின்றார். அதனை உறுதி செய்ய எமக்கு அந்த சீ.சீ.ரீ.வி காட்சிகள் அவசியமாகும்.
அத்துடன் வித்தியாவின் சடலம் மீது பிரதேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் சடலத்தில் சில பகுதிகளை மேலதிக ஆய்வுக்காக எடுத்துள்ளனர்.
அதனை எம்மிடம் அவர்கள் கையளிக்க வெண்டும். அந்த பகுதிகளை அரச பகுப்பாய்வாளருக்கு புலனாய்வுப் பிரிவினர் ஊடாக சமர்பித்து அறிக்கை பெற வேண்டும். இதற்கும் உத்தரவொன்றினை மன்று பிறப்பிக்க வேண்டும்.
சிவலோக நாதன் வித்தியாவுக்கு இடம்பெற்ற கொடுமை இலங்கையின் முழு பெண்களுக்கும் இடம்பெற்ற கொடூரத்துக்கு சமமானது.
இது ஒரு மிலேச்சத்தனமான செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இன்று, நாளைக்குள் அவசரமாக நிறைவுறுத்த முடியாது. இது ஒரு பரந்த விசாரணை.
அவர்களது வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு விடயம் குறித்தும் பரந்த விசாரணை அவசியமானது.
இந்த சமப்வத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது எனது பொறுப்பாக கருதுகின்றேன்.
நான் மேலும் பல முக்கியமான சம்பவங்கள் குறித்து விசாரணை செய்துவரும் நிலையில் வித்தியாவின் விவகாரம் குறித்து முழு அளவில் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளேன்.
சந்தேக நபர்களின் தொலைபேசி இலங்கங்கள் தொடர்பிலும் அது தொடர்பிலான பல விடயங்கள் குரித்தும் துறைசார் நிபுணர்கள் ஊடாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் அடுத்த தவணை மன்றில் அறிக்கை சமர்பிக்கலாம் என எதிர்ப்பார்க்கின்றேன்.
கைதாகியுள்ள சந்தேக நபர்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் பிணை வழங்கக் கூடாது. அத்துடன் அவர்களை சமூக மயப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. அந்த நடவ்டிக்கைகள் பாரிய எதிர்வலைகளை உருவாக்கும்.பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
இதன் போதுகுறுக்கிட்ட நீதிவான் லெனின் குமார் பிணைக் குறித்து ஆரயவில்லை என தெளிவுபடுத்தியதுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிய இரத்தமாதிரி பெறல், சட்ட வைத்திய அதிகாரியிடம் உள்ள உடற் கூற்றுக்களை கையளித்தல், வெள்ளவத்தை எச்.என்.பி. தனியார் வங்கியின் தன்னியக்க பணப் பறிமாற்று நிலையத்தின் சீ.சீ.ரீ.வி. காட்சிகளை கையளித்தல், போன்ற விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இந்த புங்குடு தீவி சம்பவம் இன்று பலராலும் அவதானிக்கப்படும் ஒரு சம்பவம். அதனால் இந்த விசாரணையை துரிதப்படுத்தி விரைவாக நிறைவு செய்யவேண்டும்.
இந்த சமபவத்தின் தொடரக ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு 9 ஆவது சந்தேக நபர் தொடர்பிலான விடயங்கள் முக்கிய காரணமாகும்.
அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்புக்கு தப்பிச் சென்று மீண்டும் கைதானது எப்படி. அதன் பின்னணி என்ன .இது தான் மக்கள் பதற்றப்பட காரணமாகும்.
ஊர்காவற்றுறை பொலிஸார் இந்த மன்றுக்கு தாக்கல் செய்த முதலாவது பீ அறிக்கையில் இந்த சம்பவத்துடன் ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளது.
எனினும் பின்னர் வெள்ளவத்தையில் வைத்து இந்த ஒன்பதாவது சந்தேக நபர் கைதாகியுள்ளார். அது எப்படி முடியும்.
ஒன்பதாவது சந்தேகநபரான சுவீஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பின்னர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்?
அவரை வெள்ளவத்தை பொலிசார் என்ன குற்றத்திற்காக பின்னர் கைது செய்தனர் போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.
இந்த சந்தேக நபருக்கு எதிராக சாட்சிகள் இல்லாததால் அவரை கைதுச் எய்யவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
அப்படியானால் இந்த 9 ஆவது சந்தேக நபரை விடுவிக்க மறைமுக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா. இது தொடர்பில் விசாரணையொன்று அவசியம் என்றார்.
பொலிஸ் பரிசோதகர் நிஸாந்தவின் குறுக்கீடு
இந்த விசாரணைகளை அவசரமாக முடிக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கை நியாயமானது.
எனினும் நடை முறை சிக்கல்கள் அதில் உள்ளன. எனினும் என்னால் இயன்றளவு சீக்கிரம் இதனை நான் நிறைவு செய்வேன்.
அத்துடன் ஒன்பதாவது சந்தேக நபர் மக்கள் தன் மீது தாக்குதல் நடத்துவர் என்ற பயத்திலேயே கொழும்புக்கு சென்றதாக எம்மிடம் வாக்கு மூலமளித்துள்ளார். எனினும் அந்த விடயம் குறித்து நாம் இன்னும் உறுதி செய்யவில்லை.
எமது விசாரணைகளில் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அல்லது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட பின்னர் தப்பிக்க வைக்கப்பட்டிருந்தால் அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து நபர்களுக்கும் எதிராக சட்டம் நிலை நாட்டப்படும்.
அவ்வாறு உதவியவர்கள் இருப்பின் அவர்கள் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.
விசாரணைக்கு நீதிவான் உத்தரவு
இந்த வாததினையடுத்து முன்னுக்கு பின் முரணான பீ அறிக்கை தகவல்கள் குறித்தும் ஒன்பதாவது சந்தேக நபர் கொழும்புக்கு சென்ற பின்னணி குறித்தும் தனியான விசாரணை ஒன்றை நடத்துமாறும், அதில் எவரேனும் திட்டமிட்டு சந்தேக நபரை தப்பிக்க உதவி இருப்பின் அது தொடர்பில் அவர்களுக்கு எதிராக நடவ்டிக்கை எடுக்குமாறும் நீதிவான் லெனின் குமார் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் மன்றில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வித்தியாவின் தாயார் கண்ணீர் மல்க வழக்கை அவதானித்துக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் சோகத்தின் உச்சத்தை அடைந்த அவர் அருகிலிருந்த பெண்ணொருவரின் தோழில் சாய்ந்தவண்ணம் கண்ணீர் விட்டழுதார்.
பொலிஸ் சார்ஜன்ட் சாட்சியம்
இதனையடுத்து யாழ் தடயவியல் பொலிஸ் பிரிவின் சார்ஜன் றொசான் சில தடயங்களை மன்றில் முன்வைத்து சாட்சியமளித்தார்.
2015.05.14 அன்று ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்புவந்தது.
10ம் வட்டாரம் ஆலயடி சந்தி புங்குடுதீவு என்ற முகவரியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பரிசோதனைகளைச் செய்யுமாறும் எமக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சுமார் 8.30 மணியளவிலேயே எமக்கு அந்தத் தகவல் கிடைத்தது நானும் எனது மேலும் இரு உத்தியோகத்தர்களும் 61-7526 என்ற ஜீப் வண்டியில் ஸ்தலத்திற்குச் சென்றோம்.
அங்கு சென்ற நான் 9.30 முதல் 11.55 வரை சடலம் இருந்த இடத்தினில் பரிசோதனை செய்தேன் நான் அங்கு செல்லும்போது மழையுடன் கூடிய காலநிலை அங்கு காணப்பட்டது. குற்றம் இடம்பெற்ற இடத்தில் ஊர்காவற்றுறை தலைமைப் பொலிஸ் பரிசோதகரும் இருந்தார்.
18 வயதுடைய வித்தியா என்னும் பாடசலை மாணவியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக அவரே அப்போது அவ்விடத்தில் வைத்து என்னிடம் கூறினார்.
சடலமானது நான் செல்லும்போது கறுப்புநிலை பொலித்தீன் பையினால் மூடப்பட்டிருந்தது. அங்கு யாழ் சட்ட வைத்திய அதிகாரியும் பிரசன்னமாகியிருந்தார்.
நானும் என்னுடன் வந்த உத்தியோகத்தர்களும் சம்பவ இடத்தை முற்றாகப் பரிசோதித்தோம். சம்பவம் இடம்பெற்ற இடமானது புங்குடுதீவு ஆலையடி சந்தியிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் குமாரசாமிப் பிள்ளையார் கோவிலுக்கு திரும்பும் சந்தியில் இடது புறத்தில் காடுகளால் சூழப்பட்ட இடம் காணப்பட்டது.
பாதையின் இரு புறத்திலும் 150 மீற்றர் வரை பற்றைக்காடுகள் அடர்ந்து பாழடைந்திருந்தன. பாதையிலிருந்து 7 மீற்றர் தூரத்திலியே குற்றப்பிரதேசம் இருந்தது.
எனினும் பாதையில் இருந்து பார்த்தால் காடுகள் வளர்ந்திருந்தமையால் அந்த இடம் தெரியாது. நான் ஒற்றையடிப் பாதை ஊடாக குற்றம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றேன் அந்த இடத்தில் பனைமரங்கள் காணப்பட்டன. அலரிமரங்களும் இருந்தன.
அந்த இடம் இருள் சூழ்ந்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே சடலம் நிர்வாணமாக காணப்பட்டது. (இதன்போது குறுக்கிட்ட நீதிவான் சடலம் காணப்பட்ட விதத்தை குறிப்பிடுவதைத் தவிர்த்து தடயத்தை சேகரித்ததை மட்டும் கூறுமாறு தெரிவித்தார்)
கையுறை ஒன்றுடன் நான் சட்ட வைத்திய அதிகாரியுடன் இணைந்து சடலத்தை பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன் அதன்போது அந்தப் பெண்ணின் இடது புற மார்பில் பெண் ஒருவரின் அல்லாத உரோமங்கள் இரண்டு இருந்தன அவ் இரண்டு உரோமங்களையும் வெவ்வேறாக இட்டு 135/2015 என பதிவு செய்து சாட்சியமாக மன்றிடம் சமர்ப்பிக்கிறேன்.
இவற்றை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். என்றார்.
பொலிஸ் கான்ஸ்ரபிள் துசார சாட்சியம்
இதனையடுத்து யாழ் தடயவியல் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான 28 வயதுடைய துசார என்பவர் சாட்சியமளித்தார்.
இந்தக் குற்றம் தொடர்பில் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதன்படி குற்றம் இடம்பெற்ற இடத்தை சோதனை செய்யும் பணி ஊர்காவற்றுறை தலைமைப் பொலிஸ் நிலையம் ஊடாக எமக்கு வழங்கப்பட்டது.
அதன்படி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் வீரசூரியவின் ஆலோசனையின்படி குலேந்திரன் ஜனனி றொசான் ஆகிய எனது சக உத்தியோகத்தர்களுடன் 61-7526 என்ற ஜீப் வண்டியில் குற்றம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றோம். றொசானே வண்டியைச் செலுத்தினார்.
அங்கு சென்றபோது சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய வரையப்பட்ட வரைபடம் ஒன்று அப்போது விசாரணைகளை செய்துவந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹிரானினால் எமக்கு வழங்கப்பட்டது அந்தப் படத்திற்கு அமைவாக நாம் சோதனைகளை ஆரம்பித்தோம்.
நாம் அவ்வாறு பரிசோதனைகளை ஆரம்பிக்கும்போது குற்றம் இடம்பெற்று 5 நாட்கள் கடந்திருந்தன.
நாம் பரிசோதனைகளை ஆரம்பிக்கும்போது சீரற்ற காலநிலையே காணப்பட்டது. குற்றம் இடம்பெற்ற இடத்தில் ஒரு பாழடைந்த கட்டடமும் இருந்தது அந்தக் கட்டடத்திற்கு கூரை இருக்கவில்லை.
அந்த இடத்திலும் நாம் பரிசோதனைகளை நடத்தினோம் செங்கல்லால் கட்டப்பட்டிருந்த அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் பூவரசம் மரங்கள் இரண்டு இருந்தன.
அந்தப் பகுதியிலும் நாம் சோதனை செய்தோம். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற வரைபடத்தின்படியே இந்த சோதனைகள் இடம்பெற்றன.
பாழடைந்த வீட்டின் அத்திபாரப் பகுதியில் உரோமங்கள் சிலதை நாம் அவதானித்தோம் அதனை இலக்கம் 1 என நான் அடையாளப்படுத்தினேன் இலக்கம் 1 இலிருந்து இடப்பக்கமாக மேலும பல ரோமங்கள் இருந்தன அதனை இலக்கம் 2 என அடையாளமிட்டேன்.
தொடர்ந்து சோனை செய்யபின் இலக்கம் 2க்கு இடப்புறத்தில் மேலும் உரோமங்களை நான் அவதானித்தேன் அதனை இலக்கம் 3 என அடையாளமிட்டோம்.
இலக்கம் 3 இலிருந்து இடது புறததிலிருந்த செங்கற்றகாளல் எழுப்பப்பட்டிருந்த சுவரில் சிலந்தி வலைகள் இருக்க அதனருகே மேலும் ஒரு உரோமம் இருந்தது.
அதனை இலக்கம் 4 என அடையாளமிட்டோம். அந்த தடயங்களை வெவ்வேறாக அடையாளப்படுத்தி இன்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இந்தத் தடையங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி சந்தேகநபர்களினுடைய இரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு விசாரணை செய்ய முடியும் என யோசனை செய்கிறேன் என்றார்.
இதனையடுத்து வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவினரை வினவினார்.
சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களது வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பிலும் தற்போது விசாரிப்பதாக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசந்த டி சில்வா நீதிவானிடம் தெரிவித்தார்.
இந்தப் பதிலையடுத்து சந்தேக நபர்கள் ஏதேனும் கூறவிரும்புகின்றனரா என நீதிவான் கேட்டபொழுது,
அவர்களில் ஒருவர் தனக்கும் இந்த மிலேச்சத்தனமான செயலுக்குமிடையே எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சம்பவ தினம் தான் கொழும்பில் இருந்தாகவும் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், அது தொடர்பில் தற்போது புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நடத்தி வரும் நிலையில் அவ்வாறு கொழும்பில் இருந்ததற்கான சாட்சியங்கள் இருப்பின் அதனை இவ்வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படும்போது அங்கு முன்வைக்க முடியும் எனவும் சந்தேக நபர்கள் அடுத்து வரும் தவணைகளில் சட்டத்தரணிகளை வைத்து தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் யூன் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் லெனின் குமார் அன்றைய தினம் வித்தியாவின் மரண விசாரணைகள் இடம்பெறும் எனவும் அதில் அவரது தாயாரும் சகோதரரும் சாட்சியமளிக்க சமூகமளிக்கும்படியும் குறிப்பிட்டார்.
வழக்கு நிறைவுற்றதன் பின்னர் சந்தேக நபர்கள் மன்றில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.