சில்சார்: மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கலந்து பேசினார்.

அப்போது அவர், ”மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் இல்லை. அவற்றை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம், எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம்” என பேசினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அசாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற அமைப்பின் சார்பில், வகுப்பு மோதல்களை தூண்டும் வகையில் சுப்பிரமணியசாமியின் பேச்சு அமைந்துள்ளது.

எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அசாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அசாம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமிக்கு கடந்த 19ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை சுப்பிரமணியசாமியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து, சுப்பிரமணிசாமிக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, சுப்பிரமணியசாமியை கைது செய்து 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply