சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் தியத்தலாவவுக்கு சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீபுக்கு அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, தியத்தலாவ பயிற்சி முகாம் தளபதி பிரிகேடியர் ராஜகுரு ஆகியோர் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை வரவேற்றனர்.
இதையடுத்து நடந்த நிகழ்விலேயே சிறிலங்கா படையினரின் பயிற்சிக்குத் தேவையான எட்டு உயர் ரக குதிரைகளையும், பிரிகேடியர் ராஜகுருவிடம், பாகிஸ்தான் தளபதி கையளித்தார்.
அண்மையில் இந்தக் குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கொழும்புக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கூட்டுப் போர்ப் பயிற்சி குறித்து பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவத் தளபதிகள் ஆலோசனை (படங்கள்)
நான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இன்று காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த போது, பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
இதையடுத்து, இருநாட்டு இராணுவத் தளபதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இதன் போது, இரு நாட்டு நிலவரங்கள் மற்றும் இராணுவங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கும் தற்போதைய திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிறப்புப் படையினருக்கான இருதரப்பு பயிற்சி ஒத்திகைகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
சிறிலங்கா படையினருக்கான பயிற்சி வசதிகளை அதிகரிப்பது குறித்து, வரும் ஓகஸ்ட் மாதம் நடக்கவுள்ள இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களில் கலந்துரையாடலாம் என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.