பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள், செக்ஸ் அடிமைச் சந்தைகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு விற்கப்படும் கொடுமை நடப்பதாக ஐ.நா. அதிகாரி ஜெய்னப் பங்குரா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ்.அமைப்பினர், ஈராக் மற்றும் சிரியாவில் அந்நாடுகளின் அரசுப் படைகளுடன் தீவிரமாகச் சண்டையிட்டு வருகின்றனர்.
பல பகுதிகளைக் கைப்பற்றியும் தங்களின் ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றனர். தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி வருகின்றனர்.
மேலும் பாலியல் தொழில் சந்தையில் செக்ஸ் அடிமைகளாகவும் விற்று வருகிறார்கள். தகவல் அறிந்த ஐ.நா. அதிகாரியான ஜெய்னப் பங்குரா, கடந்த ஏப்ரல் மாதம் ஈராக் மற்றும் சிரியாவுக்கு உண்மை நிலையை கண்டறிய சென்றார்.
அவர் அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சீரழியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் இது தொடர்பாக அவர் கூறுகையில், ” ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நான் நேரடியாகப் பேசினேன்.
இது பெண்களின் உடலை சந்தைகளில் வைத்து அவர்கள் நடத்தும் போர் போன்று உள்ளது. தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றும்போதெல்லாம் அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்கிறார்கள்.
அவர்களின் வசம் எத்தனை சிறுமிகள், பெண்கள் உள்ளனர் என்று சரியான தகவல் தெரியவில்லை.
அவர்களின் கட்டுப்பாடு நிறைந்த பகுதிகளில் உள்ள பிரத்யேக செக்ஸ் அடிமை சந்தைகளில், சிறுமிகளை சில நூறு டாலர்கள் அல்லது ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு தீவிரவாதிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
கடத்த்தப்படும் பெண்கள், சிறுமிகளை வெளிநாட்டில் இருந்து வரும் போராளிகளுக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும் தீவிரவாதிகள் கூறுகின்றனர்.
கடத்தப்படும் ஈராக் மற்றும் சிரியா நாட்டின் பெண்களையும், சிறுமிகளைகளையும் ஒரு அறையில் அடைத்து நிர்வாணமாக்கி குளிக்க வைக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களை ஆண்கள் முன்பு விற்பனைக்காக நிறுத்துகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பெண்களை டாலர்கள் அல்லது சிகரெட்டுகள் கொடுத்து தேர்வு செய்கிறார்கள்.
மேலும் வெளிநாட்டு இளைஞர்கள், ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தால் இளம்பெண்கள் மற்றும் கன்னித்தன்மை இழக்காத சிறுமிகளைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று கூறி விளம்பரம் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த மனித உரிமை மீறல் நிகழ்வுகளுக்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.