அது கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை. புத்தளம் நகரில் உள்ள கணினி வகுப்புக்கு சென்றாள் திலுக்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புத்தளம் – கல்லடி, போதிராஜபுரவை சேர்ந்த திலுக்சிக்கு 17 வயது தான் ஆகின்றது.
அன்று காலை பல்வேறு கனவுகளுடன் கணினி வகுப்புக்கு சென்ற திலுக்சிக்கு தான் காமுகர்களின் கோரப் பசிக்கு ஆளாகப் போகின்றோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
காலையில் கணினி வகுப்புக்கு சென்ற திலுக்சி, வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு வரத் தயாரான போதுதான் அந்த இடத்துக்கு சமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மோட்டார் சைக்கிளில் வருகின்றான்.
சமனை திலுக்சிக்கு ஏற்கனவே தெரியும். ஏனெனில் அவன் திலுக்சியின் காதலன் என நம்பப்படுபவன். சமனும் வட்டசாட்டமான உருவத்தைக் கொண்டவன்.
திலுக்சி வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்ல தயாரானதை கண்ட அவன் தனது மோட்டார் சைக்கிளில் வருமாறும் வீட்டுக்கு செல்ல முடியும் எனவும் திலுக்சியிடம் கூறியுள்ளான்.
தெரிந்தவர்தானே என்ற நம்பிக்கையில் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறிய திலுக்சி, வீட்டுக்கு கூட்டிச் செல்லப்படவில்லை. புத்தளம் களப்பு பிரதேசத்தில் உள்ள ஒரு பாழடைந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள்.
அங்கு வைத்துதான் திலுக்சியின் எதிர்காலமே கருகிப்போனது.
இந் நிலையில் தனது மகள் காலையில் வகுப்புக்கு சென்று இன்னும் வீடுதிரும்பவில்லையே என்ற ஏக்கத்துடன் மாலையாகும் போது திலுக்சியின் தந்தை தேடலை ஆரம்பிக்கலானார்.
அப்போது கணினி வகுப்புப் பக்கம் சென்ற அவர் தனது மகள் தொடர்பில் விசாரித்துள்ளார்.
‘ அங்கிள் திலுக்சி வகுப்பு முடிந்ததுமே சமன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்கள் களப்பு பகுதியை நோக்கி செல்வதை கண்டோம் ‘ என திலுக்சியின் தந்தைக்கு தெரிந்தவர்கள் பலர் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து களப்புப் பகுதிக்கு சென்ற திலுக்சியின் தந்தை தனது மகள் மயக்கமடைந்த நிலையில் களப்பு பகுதியில் தனிமையில் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கத் தக்க அடையாளங்களுடன் வீழ்ந்துகிடப்பதை அவதானித்துள்ளார்.
உடனடியாக மகளை மீட்டு புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற திலுக்சியின் தந்தை சமனுக்கு எதிராக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சமனை நேற்று மாலை வரை கைது செய்ய முடியவில்லை.
அவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவனைத் தேடி முழு அளவிளான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் சமன் தான் திலுக்சியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டான் என்ற தந்தையின் முறைப்பாட்டுக்கு மேலதிகமாக இது ஒரு சமூக அல்லது கூட்டு பாலியல் பலாத்காரம் என்பதை புத்தளம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி போட்டுடைத்தார்.
திலுக்சியை பரிசோதனை செய்த புத்தளம் பிரதான சட்ட வைத்திய அதிகாரி, அவளது உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் மற்றும் அவதானிக்கத்தக்க சில தடயங்களை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பிலான அனுமானத்துக்கு வந்து அது தொடர்பில் சிகிச்சைப் பெற்றுவந்த திலுக்சியிடம் பக்குவமாக விபரம் பெறலானார்.
இதன் போதுதான் இந்த கூட்டு பலாத்காரம் தொடர்பிலான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
மூவர் திலுக்சியை சுமார் 10 தடவைகளுக்கும் மேல் வன்புணர்ந்துள்ளமை சட்ட வைத்திய அதிகாரியினூடாக வெளிப்படுத்தப்பட்டு அது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந் நிலையில் சமனுக்கு எதிராக மட்டும் கொடுக்கப்பட்டிருந்த முறைப்பாட்டில் சந்தேக நபர்களின் பட்டியல் நீண்டது. பொலிஸார் திலுக்சியிடம் விசேட வாக்கு மூலம் ஒன்றை சிறுவர் மகளிர் பிரிவினூடாக பெற்றுக்கொண்டனர்.
‘ ஆம், நான் சமனுடன் களப்பு பகுதிக்கு சென்றேன். அங்கு இருவரும் ஒன்றாக இருந்தோம். அப்போது இருவர் அங்கு வந்தனர்.
அவர்கள் நானும் சமனும் ஒன்றாக இருந்த காட்சியை படமாக்கியுள்ளதாகவும் அதனை இணையத்தில் கசியவிடப் போவதாகவும் எம்மை மிரட்டினர்.
அப்போது சமன் என்னை தனிமையில் விட்டுவிட்டு தனது வேலை முடிந்தது என தப்பி ஓடிவிட்டான். நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.
அப்போது அந்த இருவரும் மாறி மாறி என்னை 10 தடவைகளுக்கும் மேல் வன்புணர்ந்தார்கள். பின்னர் என்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
நான் எதுவுமே செய்ய முடியாத நிலையில் சக்தியற்றவளாக வீழ்ந்து கிடந்த போது தான் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.’ என தனக்கு நேர்ந்ததை பொலிஸாரிடம் விபரித்தாள் திலுக்சி.
இந்த வாக்குமூலத்தையடுத்து உஷாரடைந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்தனர்.
சப்ராஸ், ஹஸீம் மற்றும் அனீஸ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்களையே இவ்வாறு பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ஹஸீமின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து அவன் படமாக்கியதாக கூறப்படும் வீடியோவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தெளிவற்றதாக இருக்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது பொலிஸாரின் கைகளில் உள்ளன.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவன் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
ஹஸீம், அனீஸ் ஆகிய இரு சந்தேக நபர்களும் தொடர்ந்தும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அவ்விருவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் சமனை தேடிபொலிஸ் வேட்டையும் தொடர்கின்றது. (சம்பவம் பொலிஸ் தகவல்களின் படி எழுதப்பட்டது )
யாழ்.புங்குடுதீவு பிரதேசத்தில் 17 வயதான மாணவி வித்தியா கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் வித்தியா போன்ற யுவதிகளை காக்கும் விதமாகவும் நாடளாவிய ரீதியில் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும் என்றுமில்லாத வகையில் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக வித்தியாவின் கொடூர கொலைக்கு பின்னரும் கூட புத்தளம் திலுக்சி வரை எத்தனையோ யுவதிகள் சிறுமிகள் இவ்வாறு கெடூரத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
வவுனியா, புத்தளம், அனுராதபுரம், குருணாகல், மாத்தறை, கண்டி, ஹம்பாந்தோட்டை என மாவட்ட ரீதியில் அதன் பட்டியல் நீண்டுள்ளது.
இந்த பாலியல் சார்ந்த குற்றங்களைத் தடுக்க சமூக மட்டத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டுவரும் நிலையில் சட்ட ரீதியிலான பாதுகாப்பு தன்மை குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர், சட்டத்தரணி ருவன் குணசேகர கேசரியுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றார்.
சட்டத்தைப் பொறுத்தவரை சிறுவர் குற்றங்கள் தொடர்பில் இரு ஏற்பாடுகள் உள்ளன.
ஒன்று துஷ்பிரயோகம். மற்றையது சிறுவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள்.
சிறுவர் துஷ்பிரயோகம் என்ற சொல் பரந்ததாக இருந்தாலும் இது சிறுவர்கள் மீதான பாரிய குற்றங்களை குறித்துக்காட்டுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் எனும் போது தண்டனை சட்டக் கோவையின் கீழ் 12 பிரதான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக 16 வயதுக்கு கீழ்ப்பட்ட அனைவரும் சிறுவராக கருதப்படும் நிலையில் பிரதான 12 குற்றங்கள் தொடர்பில் சில உதாரணங்களை குறித்துக் காட்டலாம்.
சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக பிரயோஜனங்களைப் பெறல், பிள்ளைகளை விற்பனை செய்தல், யாசகம் எடுக்க செய்தல் போன்றன அவற்றில் அடங்கும்.
இந்த 12 குற்றங்களிலும் சில நீதிவான் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பளிக்கப்படும் என்பதுடன் மேலும் பல மேல் நீதிமன்றமே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும்.
குறிப்பாக இன்று சிறுவர் துஷ்பிரயோகத்தோடு சேர்த்து பார்க்கப்படும் மற்றொரு விவகாரமே பாலியல் பலாத்காரமாகும்.
16 வயதுக்கு கீழ்பட்ட ஒருவரை அவரது விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது ………. பாலியல் குற்றம் என கருதப்படுகின்றது.
போதிய சாட்சியங்கள் இருப்பின் அது தொடர்பில் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்றி நேரடியாகவே மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தண்டனைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
16 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை அவரது விருப்பமில்லாமல் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது பாலியல் பலாத்காரமாக கருதப்படுகின்றது.
இப்படியான பலாத்காரங்கள் தொடர்பில் இலங்கையின் சட்டத்தின்படி 20 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இதுதான் சட்ட ரீதியில் உள்ள நிலைமை என்கிறார் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர.
ஒரு சிறுமி அல்லது யுவதி அல்லது பெண் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் போது கிளர்ந்தெழும் நாம் மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறக் கூடாது என்பதற்காக ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்துகின்றோம்.
பெண்கள் சிறுவர்கள் தொடர்பிலான பாதுகாப்பு குறித்த ஐ. நா. சபையின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை ஒருமித்துள்ள நிலையில் அதன் சட்ட திட்டங்களின் பிரகாரம் சிறுவர் பெண்கள் தொடர்பிலான அதிகார சபை, தனியான பொலிஸ் பிரிவு மற்றும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஒரு பிரத்தியேக பிரிவு என சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பாடுகள் இருந்த போதும் இன்றுள்ள இலங்கையின் நிலைமை கவலைக் கொள்ளச் செய்கின்றது.
சுருங்கச் சொல்வதாயின் பாலியல் குற்றங்களால் இலங்கை திணறுகின்றது எனலாம். அந்தளவுக்கு குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
யுவதிகள், சிறுவர்கள் மீது நாட்டில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஆராயும் போது அவற்றில் 80 சத வீதத்துக்கும் மேலானவை அவர்களது சூழலிலேயே அவர்களுக்கு நெருக்கமானவர்களினாலேயே புரியப்படுகின்றன.
இந் நிலைமையானது மிகவும் பயங்கரமானதாகும். இதனைவிட யுவதிகளில் பலர் அவர்களின் காதல் தொடர்புகள் மற்றும் அறிமுகமற்றவர்களின் தொடர்புகள் காரணமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
அவ்வாறானதொரு நிலையில் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பொறுப்பை
நாம் வெறுமனே பொலிஸார் மீது மட்டும் சுமத்திவிட முடியாது. அது தொடர் பிலான காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு சமூகம் சார்ந்தவர்கள் மீதும் உள்ளது.
பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தி சிறந்த சமூகம் ஒன்றை ஏற்படுத்த பொலிஸாருடன் இணைந்து சமூக மட்டத்திலும் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது போனால் நாளைய நாள் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் இதனைவிட ஆபத்தான நாளாக அமையும்.
அப்படி அமைந்தால் நாம் இன்னும் பல வித்தியாக்களை இழக்க வேண்டி ஏற்படும். அதற்கு முன்னர் கத்திரமான நடவடிக்கைகள் உடன் அவசியமானதாகும்.
-எம்.எப்.எம் பஷீர்-