வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைமையினால் அச்சுறுத்தப்பட்டு மௌனிக்கப்பட்டுள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையினில் முதலமைச்சரினை அவசரமாக சந்தித்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்,சரவணபவன் தரப்பு அவருடன் காரசாமான விவாதத்தினை நடத்தியுள்ளது.
ஒரு சந்தர்ப்பத்தினில் முதலமைச்சர் பதவி நான் தந்த பிச்சையென மாவைசேனாதிராசா சொல்லிவிட சீற்றமுற்ற முதலமைச்சர் நான் கதிரை கட்டிப்பிடித்து கொண்டிருக்கும் ஆள் அல்ல ராஜினாமா செய்துவிட்டு போய்விடுவேனென பதிலளித்துள்ளார்.
கூட வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே முதலமைச்சரினை சாந்தப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே முதலமைச்சர் விவகாரத்தினில் உள்கட்சி முரண்பாடுகளை கடந்து மற்றைய கட்சிகளும் மாவை சேனாதிராசா பக்கம் நிற்பதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக ரணில் அரசிடம் நிதி பெற்ற விடயத்தை முதலமைச்சர் போட்டுடைத்தமையால் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ள பிற கட்சி தலைவர்களும் மாவையை தூண்டிவிட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.பதிவு இணைய செய்தி
அரசிடம் நிதி பெற்றமை தொடர்பினில் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கோரி மாவை.சேனாதிராசா அனுப்பிய கடிதத்திற்கான பதில் மாவையை சென்றடைய முன்னதாகவே ஊடகங்களை சென்றடைந்திருந்தது.
இதனால் மாவை கடும் சீற்றங்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. நேரடியாக முதலமைச்சரினை சந்தித்த வேளை இதனை மாவை பிரஸ்தாபித்துள்ளார்.
எனினும் எதனையும் வெளிப்படை தன்மையுடன் செய்ய முற்படும் விக்கினேஸ்வரன் இதில் இரகசியமென எதுவுமில்லையென வாதிட்டுள்ளார்.
இத்தகைய வாதத்தினை தொடர்ந்தே முதலமைச்சரினை ஓரங்கட்டும் நடவடிக்கையினை இத்தரப்புக்கள் ஆரம்பித்திருப்பதாகவும் வடமாகாண அமைச்சர்கள் கூட முதலமைச்சரிற்கு தோள் கொடுக்க தயாராக இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையினில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் எவரையும் ஆதரிக்காத முடிவினை முதலமைச்சர் எடுக்கலாமெனவும் ஒதுங்கியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்க அவர் விரும்பவதாகவும் நெருங்கியவட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனாலும் முதலமைச்சரது ஆதரவை பெற்றால் மட்டுமே வெற்றியினை தக்க வைக்க முடியுமென சில தரப்புக்கள் வலியுறுத்தி வருவதுடன் அவை தொடர்ந்தும் அவருடன் உறவை பேணவும் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது