புங்குடுதீவில் வித்தியா என்ற பள்ளி மாணவி காம வெறியர்களும் சமூக விரோதிகளுமான சிலரால் காட்டுமிராண்டித்தனமாக கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதுமல்லாமல், கொலையும் செய்யப்பட்ட சம்பவம், தமிழ் மக்களை மட்டுமின்றி, இலங்கையின் அனைத்து இன மக்களினதும் கோபத்தைக் கிளறி விட்டுள்ளது.
முன்பும் இப்படியான சம்பவங்கள் சில தமிழ்ப் பகுதிகளில் நடந்திருந்தாலும் கூட, இந்தச் சம்பவத்துக்கு எதிராக ஏற்பட்ட பொதுமக்களின் ஆவேச உணர்வு வேறு எதற்கும் எதிராக ஏற்படவில்லை எனச் சொல்லலாம்.
அதுமட்டுமின்றி, முன்னைய சம்பவங்கள் பலவற்றுக்கு இராணுவத்தினர் மீது அல்லது ‘ஒட்டுக்குழுக்கள்’ மீதுதான் உடனடியாக விரல்கள் நீட்டப்படுவது வழமை.
ஆனால் வித்தியாவின் விடயம் மிகவும் வித்தியாசமானது. சம்பவம் தமிழர்களான ஒரே இனத்தவரால், ஒரே ஊரவர்களால், ஒரே சொந்த உறவுக்காரர்களாலேயே நடத்தப்பட்டுள்ளது.
இங்குதான் பல கேள்விகள் எழுகின்றன.
ஒரு சிறுமியை அவரது உறவினர்களே கூட்டாக மிருகங்களையும் விடக் கேவலமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தவும், கொலை செய்யவும் எப்படி முடிந்தது?
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போதையில் இருந்திருந்தாலும் கூட, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ பத்துப் பேர் வரையிலான அவர்களில் ஒருவனுக்காவது மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய மனித உணர்வு அந்த நேரத்தில் ஏற்படாமல் போனது ஏன்?
அப்படிப் பார்க்கையில் இப்படியானவர்கள் தங்களது தாய், சகோதரிகள், பிள்ளைகளைக் கூட மிருக வெறிக்கு உள்ளாக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
குற்றவாளிகளில் ஒருவன் வித்தியாவின் தாய் மீதான தனிப்பட்ட கோபம் ஒன்றுக்குப் பழிவாங்குவதற்காக தனது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு அபலைப் பெண்ணான வித்தியாவைக் கடித்துக் குதறிப் பழி தீர்த்திருக்கிறான் என ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
அந்த அளவுக்கு தமிழர்கள் சிலரின் மனோபாவம் மாறியிருக்கின்றது என்றால், அது நமது சமூகத்தின் ஆபத்தான நிலையைத்தான் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஏனெனில் இந்த நிலை இந்த எட்டுப் பத்துப் பேருடன் நின்றுவிடக்கூடிய நிலை அல்ல. ஏனெனில் 30 வருடப் போர் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் அராஜக மனோநிலை, பழிவாங்கும் எண்ணம், கட்டறுந்த மன நிலை, அச்சம், விரக்தி, துயரம், கையறு நிலை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை போன்ற இன்ரோரன்ன நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
மனோதத்துவவியல் நிபுணர்களே தமிழர்களில் பலபேர் போர் காரணமாக மனோவியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள்.
அத்துடன் வெளிநாட்டுப்பணம், தாராளமான வங்கிக் கடன்கள், புதிய வேலை வாய்ப்பு வருவாய் என்பன புதியதொரு நுகர்வுக் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், போதை வஸ்துப் பாவனை, தென்னிந்திய மற்றும் ஆங்கில மூன்றாந்தரச் சினிமாக்களின் கலாச்சாரத் தாக்கம் போன்றவையும் இன்றைய தமிழ் சமூகத்தை மிகவும் ஆக்கிரமித்துள்ள சமாச்சாரங்களாகும்.
இந்த நிலைமை முன்னரே சிலரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தின் பின்னர் அதிகரித்து வந்த பாலியல் சம்பவங்கள், அடிதடிகள், வாள்வெட்டுகள், வழிப்பறி, பண மோசடி, ஏமாற்று, அடாவடித்தனங்கள் என இவை படிப்படியாக வளர்ந்து வந்துள்ளன.
உண்மையில் இப்படியான நிலைமை ஏற்படாது தடுப்பதில், அரசாங்கத்தின் சட்டப் பாதுகாவலர்களை விட தமிழ் சமூகத்துக்குப் பாரிய கடமை இருக்கின்றது.
தமிழ் அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கல்விமான்கள், மத அமைப்புகள், கலாச்சார நிறுவனங்கள் என்பன இவற்றைக் கட்டுப்படுத்துவதிலும், இளைஞர்களை நல்வழிப்படுத்துவதிலும் முக்கியமான பங்கை வகித்திருக்க வேண்டும்.
ஆனால் அவை எதுவுமே அவற்றில் அக்கறை செலுத்தவில்லை. தமது சமூகம் உள்ளுர உக்கி, புழுத்து நாற்றமெடுக்க, அவர்கள் தமது அரசியல் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிங்கள எதிர்ப்பு, அரச எதிர்ப்பு என்ற ஒற்றை விடயத்திலேயே முழுக் கவனத்தையும்
செலுத்திச் செயற்பட்டனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போன்றவையே தமது சமூகக் கடமையை மறந்து இனவாதச் சகதிக்குள் புரண்டன.
எல்லாவற்றையும் கோட்டைவிட்டுவிட்டு, மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உதயன், பத்திரிகை போன்றவர்கள் ‘புலிகள் இருந்திருந்தால் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது.’ என இப்பொழுது சப்புக்கட்டுக் கட்டுகிறார்கள்.
அவர்களது கூற்றின்படி இந்த நிலைமையை தமிழ் சமூகத்தில் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த புலிகளின் மறுபிறப்பே இதற்கான பரிகாரம் என்பதுதான் அவர்களது வாதம்.
இந்த மிருக வெறி உணர்வு இன்று தமிழ் சமூகத்தில் பல படி நிலைகளிலும் ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்றி இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த அநீதியை இழைத்தவர்கள் மத்தியிலிருந்து மட்டும் அது வெளிப்படவில்லை. இந்த அநீதிக்கு எதிராக பொதுமக்களிடம் ஏற்பட்ட நியாயமான கோபாவேச ஆர்ப்பாட்டங்களைத் திசை திருப்பி, நீதிமன்றம் மற்றும் பொலிசார் மீதான தாக்குதல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் போன்றவற்றிலும் அது வெளிப்பட்டுள்ளது.
அதாவது குற்றமிழைத்தவர்களும், குற்றத்தைக் கண்டிப்பதாகச் சொன்னவர்களும் என, இருபகுதியினருமே அராஜகவாதிகளாகச் செயற்பட்டிருக்கிறார்கள்.
இது ஒரு ஆபத்தான நிலைமை.
அதுமட்டுமல்ல, இந்த விடயத்தில் பொதுமக்கள் என்ற போர்வையில் சில குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்
சக்திகள் திரைமறைவில் நின்று செயற்பட்டிருக்கின்றன.
பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, சில சிறிய கட்சிகள் இந்தக் கலகங்களின் பின்னணியில் செயற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே அரசாங்கத்துக்கும், சட்டம் ஒழுங்கைப் பேணும் பொலிசாருக்கும் பல கடமைகள் இருக்கின்றன.
வித்தியா மீது வன்முறையைப் பிரயோகித்த காட்டுமிராண்டிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களது குற்றங்களுக்காக அதிக பட்ச தண்டனை வழங்குவதுடன், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டுமின்றி, அவர்களைத் திரைமறைவில் நின்று தூண்டிவிட்ட சக்திகளையும் இனம் கண்டு தண்டிக்க வேண்டும்.
அரசாங்கம் எடுக்கும் உறுதியான நடவடிக்கையின் மூலம்தான் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் உத்தரவாதப்படுத்த முடியும்.
மறுபுறத்தில், அரசை மட்டும் நம்பியிராமல், தமிழ் சமூகத்தில் உள்ள நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், பொறுப்பு வாய்ந்த சக்திகள் என்பவர்கள் தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு சமூக – கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தை கிராமங்கள் நகரங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் என அனைத்து மட்டத்திலும் உடனடியாக ஆரம்பித்து நடாத்த வேண்டும்.
இல்லையேல் தமிழ் சமூகம் வெளி எதிரிகள் எவருமின்றி, தனது சவக்குழியைத் தானே வெட்டுவதைத்
தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.
-யாதவன்