எனக்கு இடுப்புக்குக் கீழ உணர்வு இல்லாததால ஷெல்லோ குண்டோ விழும் போது கணவரையும் பிள்ளையையும் பங்கருக்க அனுப்பிட்டு என்னைச்சுத்தி ஒவ்வொரு உயிரும் உடலமும் பறக்கும் போது பார்த்து பார்த்தே பித்துப்பிடித்தவளாகி விட்டேன்.
யுத்தம் …! மூன்று தசாப்தம் கடந்தும் நீடித்தது. துயரங்கள் பல துன்பங்கள் பல. இழப்புக்கள் எண்ணிடங்காதவை. எனினும் எவரும் எள்ளிநகையாடாத வகையில் வடக்கு மக்கள் தமது உழைப்பினை மட்டுமே நம்பி உள்ளத்தில் சோர்வில்லாது வருமானத்திற்கு ஏற்ப தன்மானத்துடன் தமது வாழ்வை கெளரவமாக தொடர்ந்ததை மறுப்பார் யாரும் இல்லை.
இந்த நியதிக்குள் கூலித்தொழிலாளியை திருமணம் செய்தாலும் நிறைவான வாழ்வு வாழ்ந்ததுடன் ஆசைக்கொரு பெண்ணும் ஆஸ்திக்கு 3 ஆணுமாக, நான் மக்கட் செல்வத்தோடே சந்தோஷமாக இருந்தவர்தான் தற்போது 45 வயதாகும் ஜெயவர்த்தனா சந்திரமதி.
கோர யுத்தத்தில் குடும்ப வாழ்க்கைக்கு எமனாக எங்கிருந்தோ வந்தது அந்த ஷெல். சிறு நொடியில் சின்னா பின்னமாகியது அவரது மனம்நிறைந்த குடும்ப வாழ்க்கை.
இன்றும் இழந்த வாழ்க்கையை தேடி தேடி அலைகிறார் அப்பெண்மணி. வட்டக்கட்சி 5ஆம் வீட்டுத்திட்டத்திலுள்ளவர் நிழலாகி மறைந்த வாழ்க்கையை எம்மிடம் இவ்வாறு கூறினார்.
‘பிரச்சினை உச்சக் கட்டத்தை அடைந்து வரும்போது இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. கடைகள் எல்லாம் பூட்டு. சாமான்கள் எதுவும் வன்னிக்கு வருவதில்லை.
ஒரு நேரச்சாப்பாட்டிற்கே திண்டாடிய நேரத்தில தாகத்திற்கு தண்ணி குடிக்க கிணத்தில் தண்ணி அள்ளும் போது கிணத்துக்கட்டுக்கு அருகில இரணைமடுவில இருந்து அடிச்ச ஷெல் வந்து விழுந்தது. ஷெல் விழுந்த அதிர்ச்சியில நான் நினைவிழந்து கிணத்துக்குள்ள விழுந்திட்டேன்.
ஷெல் சத்தம் எல்லாம் ஓஞ்ச பின்தான் என்னை வீட்டுக்காரரும் அயலவரும் தேடிப்பார்த்தபோதே நான் கிணத்துக்க விழுந்தது தெரியும்.
தண்ணி குறைவான கிணறு என்பதாலும் என் சட்டை படிக்கட்டில சிக்கி இருந்ததாலும் நான் தாழவில்லை. ஆனால் விழுந்த அமுக்கத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் எனக்கு இடுப்புக்குக் கீழ் இயக்கம் இல்லாமல் போய்விட்டது.
என்னை கிணத்திற்கு வெளியே தூக்கவோ முதலுதவி செய்யவோ மருத்துவமோ ஆளணியோ இல்லாத நிலையில் இடம்பெயர ஆயத்தமாகி உடமைகளை கொட்டி விட்டு சாக்கு கட்டி என்னை தூக்கி எடுத்தனர்.
என்னை வெளியிலெடுத்து சிறிது நேரத்தில் வந்த பக்கமே ஷெல் திரும்பி வர என்ர உயிரைக்காப்பற்ற வேண்டிய பிள்ளையையும் கூட்டிக் கொண்டு என்னையும் சுமந்து கொண்டு கணவர் இடம்பெயரத் தொடங்கினார்.
மெல்ல மெல்ல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வயித்தையும் நிரப்பி உயிரையும் பிடித்துக்கொண்டு வந்த எமக்கு ஒரு கட்டத்தில் தொண்டு நிறுவனங்களும் எம்மை கைவிட்டு இடம்பெயர்ந்து போக இடமில்லாதும் முள்ளிவாய்க்கால் பம்பமடு பகுதியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பயங்கர வலயத்திற்குள் தஞ்சம் புகுந்து விட்டோம்.
எனக்கு இடுப்புக்குக் கீழ உணர்வு இல்லாததால ஷெல்லோ குண்டோ விழும் போது கணவரையும் பிள்ளையையும் பங்கருக்க அனுப்பிட்டு நான் என்னைச்சுத்தி ஒவ்வொரு உயிரும் உடலமும் பறக்கும் போது பார்த்து பார்த்தே பித்துப்பிடித்தவளாகி விட்டேன்.
ஒரு கட்டத்தில் நான் ஏன் இருக்க வேண்டும் செத்தால் என்ன என்று தோன்றும் போது என் அருகில ஷெல் விழுந்து வெடிக்க நின்றநான் எனனென்டு கீழ விழுந்தனென்று தெரியாது.
குப்பிற விழுந்ததில நெத்தியிலையும் காயம் ஏற்பட்டதோட காலும் முறிஞ்சு போச்சு. எனக்கு உணர்வு இல்லாததால கால் முறிஞ்சது தெரியாது.
கணவரும் பிள்ளைகளும் தான் கால்முறிஞ்சு தொங்குவதை பார்த்து என்னை ஹொஸ்பிஸ்டலுக்கு கொண்டு போனார்கள்.
அங்கும் ஒழுங்கான மருத்துவம் இல்லை. கிடைத்த மருந்துப் பொருட்களை வைத்து (பி.ஓ.பி.) போட்டு விட்டார்கள். இப்பவும் பொருந்தி இருக்கா இல்லையா என்று எனக்கும் தெரியாது.
யாருக்கும் தெரியாது. காரணம் இடுப்புக்குக் கீழ உணர்வு இல்லை. தொடர்ந்து வீல் சியரிலதான் இருக்கிறன்….. என அவ்வளவு சோகத்தையும் இனிமையாக பேசி விட்டு மெளனமாக சிரித்தார்.
நான்கு பிள்ளைகளோட ஐந்தாவதாக என்னையும் சுமந்த கணவர் முகாமூடாக மீள்குடியேற்றும் என்ற பெயரில் சொந்த வீட்டிற்கு வந்தோம். வீட்டைச்சுற்றி பற்றைகள் வளர்ந்திருந்தன. மண் வீடுதானே கறையானும் பாம்பும் புற்றெடுத்து தமது வரிசையை காட்டி இருந்தன.
முகாமில இருந்த தறப்பாரோட வளவில ஒரு ஓரமாக குடியேறிய நாங்கள் மெதுவாக கணவரும் மூத்த மகனுமாக வீட்ட துப்பரவாக்கி பற்றைகளை வெட்டி மீள்குடியேறினோம்.
பிறகு இந்திய வீட்டுத்திட்டப்பதிவு கிடைத்தது. அதனூடாக தந்த பணத்தில் கணவரும் மூத்தமகனும் இரண்டு கூலியாளாக நின்று ஒருவரை தினக்கூலிக்கும் அமர்த்தியதில் கிடைத்த பணத்திற்கு அளவான வீட்டைக்கட்டி முடித்து விட்டோம்.
வீடு கட்டி சொற்ப நாட்களில் மூத்த மகள் 24வயது திருமணம் முற்றாகி வந்தது. எம்மிடம் அவாக்கென கொடுப்பதற்கு காது தோடோ நகையோ ஏன் மாற்றுடுப்பு கூட இல்லை.
நாம் இழந்தவற்றுக்கு கிடைத்த நிவாரணமாக வீட்டை மட்டும் கொடுத்து திருமணம் செய்து கொடுத்து விட்டோம். அவாக்கு வீட்ட கொடுத்து விட்டு நாங்கள் பழைய மண்வீட்டில இருக்கிறம்.
மூத்தவர் உயர்தரம் படித்து விட்டு இப்ப நைற்றாவில் எலக்றீசியன் கோஸ் படித்திட்டு வேலை தேடிட்டு இருக்கிறார். ஆனால் தெரிந்தவர்கள் வீடு கட்ட அல்லது வயல்வேலைக்கு கூப்பிட்டால் தினக்கூலிக்கு போறவர்.
கணவருக்கு இப்ப 55வயது. மூன்றாவது நான்காவது மகன்மார் வட்டக்கச்சி மகா வித்தியாலய மற்றும் மாயவனோர் மகா வித்தியாலயத்தில படிக்கினம்.
கணவருக்கு தற்போது உடல் நிலை ஏலாமலேயே இருக்கிறது. கணவர் வீட்டுத் தோட்டம் என்று கொஞ்ச பயிர் போட்டிருக்கிறார். நாளாந்தம் கிடைக்கும் காய்கறிகளை கடைக்கு கொடுத்தே அன்றாடம் நாங்கள் வீட்டில் உணவுண்போம்.
எங்களுக்கென்று கிணறில்லை. காணியின் ஓரத்தில இடம்பெயர முன் இருந்த மண்கிணறு ஒன்று இருக்கு. அது வருசா வருசம் மண் கொண்டு விழுந்து தூர்ந்து வருகிறது. அதில வாளியால அள்ளி அள்ளியே பயிர்களுக்கு ஊற்றி வருகிறோம்.
வெய்யிலுக்கு முதல் காலை 4மணிக்கே கணவர் தண்ணி ஊத்தத் தொடங்கி விடுவார். மாதம் ஒரு முறை பைப்புகள் மற்றும் மோட்டாரை வாடகைக்கு எடுத்து தோட்டத்துக்கு தண்ணி கட்டுவம்.
மூன்றாவது மகன் ஆண்டு 8 படிக்கிறார். ரியூஷன் போறார். மாதம் 2 ஆயிரம் ரூபா எல்லாப்பாடத்துக்கும் கட்டிப்படிப்பிப்பம்.
ஆனால் இப்ப இளையவர் இந்த வருசம் கொலசிப் எடுப்பதால ரியூஷன் போக வேண்டிய நிலையில மற்றவற்ற ரியூஷனை நிப்பாட்டி போட்டம். ஒவ்வொரு நாளும் படிக்கேக்க அழுவான்.
தனக்கு பாடம் விளங்கேல்ல சொல்லித் தாங்கோ என்று. நாங்களும் பெரியளவில படிக்கேல்ல. மகள் திருமணம் செய்து போட்டா. மூத்தவர் வீட்டில இருந்தா சொல்லிக் கொடுப்பார்.
அவரும் தினக்கூலிக்கு போட்டு நாள்பூராவும் வெய்யில்ல நின்றிட்டு வாறதால வந்த உடனே சாப்பாடு இருந்தா சாப்பிடுவான் இல்லை என்றால் தின்னாமல் தூங்கிடுவான்.
இப்படியே எங்க கஷ்டத்தை சொல்லப்போனால் அத்தியாயம் அத்தியாயமாக கூறலாம். என்ன செய்ரது சொல்ல மனசு இருக்கு. ஆனால் கேட்கவோ, உதவவோ நாதியற்றவர்களாக நாங்கள் இருக்கிறம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நான் தொடர்ந்து வீல் சியரில இருப்பதால் இடுப்புக்குக் கீழ் பின்பக்கம் பெட்சோர் மாறி மாறி வருவதுடன் திண்ணையில உறங்குவதால் எறும்புகள் கடித்து, தூசுகள் படிந்து கால்கள் இரண்டும் மாறி மாறி அவிந்து விடும்.
எனக்கு நோ தெரியாததால வேதனை தெரியாது. ஆனால் என்னை பார்த்து என்ர குடும்பம் தினம் தினம் மனதுக்குள் அழுவது எனக்கு தெரியும். ஆனால் நான் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வதில்லை.
வாழ்க்கைல்ல எல்லாவற்றயும் இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை. அதிலும் இழந்தவற்றை கூறிக் கூறி வாய் வலித்து விட்டதே தவிர நிவர்த்தி செய்ய இந்த அரசோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ ஏன் அரசியல்வாதிகளோ முன்வரவில்லை.
அவ்வாறான நிலையில நான் நால்வர் உயிர்வாழ மக்களிடம் பகிரங்கமாக உதவி கேட்கிறோம். முடிந்தால் இந்த அபலத்தாய் உயிரோடு இருக்கும் போது பிள்ளைகளை நல்வழிப்படுத்த உதவி செய்யுங்கோ.
அதாவது என்ர மூத்தவர் எலக்றீசியன் கோஸ் செய்திட்டார். ஆனால் அவர் வேலைக்கு போனால் வேலை குடுப்பதற்கு எந்த இடமும் இல்ல காரணம் இருக்கிற வேலை கிடைப்பது குறைவு அதனால இவரை வச்சு எப்படி சம்பளம் தாறது என்று அவர்கள் கூறுவர்.
ஆனால் இப்ப எங்களுக்கு உழைத்து எங்களை பார்க்கக்கூடிய ஒரே ஒரு உறவு மகன்தான். எனவே அவருக்கு ஒரு கடை போட்டு யாராவது கொடுத்தால் அந்தப்பணம் நான்கு உயிர்களை வாழ வைக்கும்.
அதேபோல் கணவருக்கு நெஞ்சு வருத்தம் இருக்கு. தொடர்ந்து கிணத்தில தண்ணி அள்ளி நீர் ஊற்றுவதால் நாளுக்கு நாள் நோயாளி ஆகிக்கொண்டே போறார்.
அதை விட மண் கிணறு தூர்ந்து வருவதால் அயல்காணியில் எல்லை வரை மண் இடிந்து போய்விட்டது. இதனால் அயலவர்களுடன் சற்று மனஸ்தாபம். எனவே கிணறையும் சுற்றி வர பூச்சுப்பூசி கட்ட யாராவது உதவி செய்வீர்கள் என நம்புகிறோம்.
நாம் எப்படியோ உழைத்து உயிர்வாழ்வோம். அதேபோல் மாதத்திற்கு ஒரு முறை ஒரு நீர்ப்பம்பியும் பைப்பையும் வாடகைக்கு எடுப்பதால் மரக்கறியால வாற காசு காணாது.
எனவே ஒரு மோட்டார் வாங்கி தந்தால் எமது சிறிய கால வாழ்க்கைகூட மெதுவாக சுமையின்றி நகர்ந்து செல்லும் என்கிறார்.
மனித வாழ்வில் நீர்த் தேவை அவசியமான ஒன்றாகும். அது நீரால் ஒரு குடும்பமே வாழ முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது. தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தார்மீக கடமை என்பதற்கிணங்க தரணியில் வாழ தவிக்கும் இவர்களுக்கு தண்ணீர் வசதிக்காக உதவி அளிப்பது அவசியம் அல்லவா?