தேனி: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அதிமுகவினர்தான் அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழக காவல்துறையில் பணியாற்றும் சிலரும் தங்களது ஜெயலலிதா விசுவாசத்தை பலவிதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சேலம் மாநகரக் காவல்துறையின் மேற்கு சரகக் குற்றப்பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வரும் கணேசன் என்ற அதிகாரி, காலில் அடிபட்டதாகக் கூறி 10 நாட்களாக மருத்துவ விடுப்பு எடுத்து,  அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிமுகவினருடன் இணைந்து அக்கட்சியின் கரை வேட்டியை அணிந்தபடியே வாக்கு சேகரித்து வந்ததாக புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி இது தவறு என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதியின்படியும் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் அரசியல் பணியில் ஈடுபடுவது குற்றம் ஆகும்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக, விரதம் இருந்து மொட்டை போட்டுள்ளார் தேனி மாவட்ட போலீஸ் ஏட்டு ஒருவர். அங்குள்ள ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன்.

தேனி மாவட்டம் நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.

வேல்முருகனின் அம்மா பக்தி இதோடு முடியவில்லையாம். அடுத்து வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.

Share.
Leave A Reply