மினுவாங்கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்டடத்தொகுதி யின் கீழ் மாடியில் அமைந்துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நகைக்கடையின் உரிமையாளரை சுட்டுக்கொன்று விட்டு பெருந்தொகையான நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் இதன் போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடையின் சேவையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
கொள்ளையர்கள் நால்வர் இந்த கொள்ளைக்காக இரு மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சம்பவமானது கடையின் சீ.சீ.ரி.வி.கண்காணிப்பு கமராவில் துல்லியமாக பதிவாகியுள்ள நிலையில் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க விஷேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
சம்பவத்தில் கடையின் உரிமையாளரான 48 வயதுடைய, மினுவாங்கொடை, கல்லொலுவ எனும் முகவரியைச் சேர்ந்த மொஹிதீன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொள்ளையர்கள் கொள்ளையிட்ட நகைமற்றும் பணத்தின் பெறுமதி நேற்று நள்ளிரவு வரை கணக்கிடப்பட்டிருக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
மினுவாங்கொடை பழைய சந்தை கட்டிடத் தொகுதியில் கீழ் மடியில் மொஹிதீன் தங்க நகை விற்பனை நிலையம் எனும் பெயரில் வர்த்தக நிலையம் ஒன்று இருந்துள்ளது. குறித்த நகைக்கடைக்கு நேற்று மாலை 6.45 மணிக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் நால்வர் வந்துள்ளனர்.
அவர்களில் இருவர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்துள்ளதுடன் ஏனைய இருவரும் தமது முகத்தை துணியால் சுற்றி மறைத்த வண்ணம் இருந்துள்ளனர்.
திடீரென கடைக்குள் புகுந்த இவர்கள் ரீ 56 ரக துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கடையில் உள்ள நகைகளையும் பணத்தினையும் கொள்ளையிட ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது கடையின் உரிமையாளரான மொஹிதீன் என்பவரும் கடையின் சேவையாளர்களான மேலும் மூவரும் நோன்பு திறந்த வண்ணம் இருந்துள்ளனர்.
கொள்ளையர்கள் இவ்வாறு திடீரென புகுந்து கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது கொள்ளையர்களில் ஒருவரை உரிமையாளர் மொஹிதீன் பாய்ந்து பிடிக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளையர்களில் ஒருவர் சராமரியான துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளார்.
இதனால் கடையின் உரிமையாளரும் பிறிதொரு சேவையாளரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
உடன் கொள்ளையிட்ட நகைகள் பணத்துடன் கொள்ளையர்கள் மினுவாங்கொடை கொழும்பு வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த இருவரும் மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் மொஹிதீன் உயிரிழந்திருந்ததாக மினுவாங்கொடை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
காயமடைந்த கடையின் சேவையாளர் தொடர்ந்தும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் விஷேட பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.