யாழ்ப்பாணம் – கொடிகாமம் – இராமாவில் பகுதியில் விபசார விடுதி நடத்திவந்த மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடிகாமம் – கண்டி வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபசாரம் இடம்பெற்றுவருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்றிரவு விடுதியைச் சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார், வரணியைச் சேர்ந்த விடுதியின் உரிமையாளர், வவுனியா இரணைஇலுப்பைக் குளத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையும் கைதுசெய்திருந்தனர்.

இதன்போது அவர்களிடமிருந்து ஆபாசப்பட இறுவட்டுக்கள் மற்றும் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட அரச மதுபானங்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

அதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை இன்று பிற்பகலில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, கொடிகாமம் பொலிஸார் சந்தேக நபர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.

அதன்போது, ஆபாசப்பட இறுவட்டுக்களை தம்வசம் வைத்திருந்தமைக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், அனுமதியின்றி அரச மதுபானம் விற்பனை செய்தமைக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் நீதிமன்றம் அறவிட்டது.

மேலும், விபசாரம் நடத்திய வழக்கில், குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply