பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான ஞானச்சந்திரன் பகீரதியின் (வயது 26) மரணம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணையை மேற்கொண்டு, அது கொலையா அல்லது தற்கொலையா என்று கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.

அச்சுவேலியைச் சேர்ந்த மேற்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை (11) உயிரிழந்தார்.

இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளே, அனந்தியின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியிருந்தவராவார்.

இந்நிலையிலேயே, அவரது மரணம் தொடர்பில் அனந்தி சசிதரன் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலம் கூறிய அவர், ‘பகீரதி விடயத்தில் அச்சுவேலி பொலிஸார் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் பகீரதியைப்பற்றி தெரியும். தற்கொலை செய்யும் அளவுக்கு  கோழைத்தனமான பொலிஸ் உத்தியோகத்தராக அவர் இருக்கவில்லை.

எனது மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய காலப்பகுதியில் விசாந்த என்ற நபரை பதிவுத்திருமணம் செய்திருந்ததாக தெரிவித்தார்’ எனக் கூறினார்.

‘சாதாரணமாக ஒருவர் எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்வதாக இருந்தால், தலையிலேயே எண்ணை ஊற்றுவது வழமை.

மாறாக குறித்த பெண்ணின் மீது முகத்திலும் உடம்பிலும் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து தலா 5 லீற்றர் பெற்றோல் அடங்கிய இரு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு போத்தலில் இருந்த பெற்றோல் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய போத்தல்  பெற்றோலுடனேயே காணப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் அதிகாலையில் 10 லீற்றர் பெற்றோல் வாங்கி சென்றிருப்பது என்பது சந்தேகத்தினை ஏற்படுத்துவதுடன், ஒரு பொருள் தீப்பற்றி எரியும் போது, அருகில் பெற்றோல் இருந்தால் அதுவும் தீப்பிடிக்கும் நிலையினை கொண்டிருக்கும்.

அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது பகீரதி, தற்கொலை செய்யவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளியினை கைது செய்ய வேண்டும்’ என அனந்தி மேலும் கூறினார்.

f

Share.
Leave A Reply