சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில் பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
மகிந்த ராஜபக்சவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும் கூட, அவரைப் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்றும் நேற்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் கொழும்பில், டார்லி வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மகிந்த ராஜபக்சவிடம், மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மகிந்த ராஜபக்ச, ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில் பதிலளிக்கப்படும், அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிலளித்து விட்டுச் சென்று விட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக மகிந்த நியமனம்

mahinda-upfa
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று மதியம் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே, மகிந்த ராஜபக்சவை தேர்தல் குழுத் தலைவராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,

இதையடுத்து, அவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யார் உண்மையான தலைவர் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும், தேர்தல் பரப்புரைக் குழுவின் தரைவராக அறிவிக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது, அவரது ஒப்புதல் பெறப்படாமலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், தேர்தல் குழு தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply