மும்பை: ஜனாதிபதி மாளிகைக்கு, கடந்த மே மாதத்தில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு, தொலைபேசி பில் வந்துள்ளதாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் பெறப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த மன்சூர் தர்வேஸ், ஜனாதிபதி மாளிகை பராமரிப்புக்கு ஆகும் செலவினங்கள் குறித்து, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கோரியிருந்தார்.
அக்கேள்விகளுக்கு கிடைத்த பதில் விவரம்:ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில், 754 ஊழியர்கள் உள்ளனர். ஜனாதிபதிக்கு, ஒன்பது தனிச் செயலர்கள், 27 கார் ஓட்டுனர்கள் உள்ளனர்.
அவரது அலுவலகத்தில், எட்டு தொலைபேசி ஆபரேட்டர்கள் பணிபுரிகின்றனர். கடந்த மே மாதத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, 1.52 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
அதே மாதம், தொலைபேசிகட்டணமாக, 5.06 லட்சம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு மற்றும் படித் தொகை செலவினங்களுக்கு, கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், 30.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
2013 – 14ம் நிதிஆண்டில், 38.70 கோடி ரூபாயும், 2014 – 15ம் நிதி ஆண்டில், 41.96 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டிருந்தது.
தர்வேஸ் அளித்த மனுவில், ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் மின் கட்டணம், பாதுகாப்பு வீரர்களுக்கான செலவு பற்றி, தகவல் கோரப்பட்டிருந்தது. இக்கேள்விகளுக்கு பதில் தரப்படவில்லை, என, தர்வேஸ் கூறினார்.
தனக்கு கிடைத்த பதில் அடிப்படையில் கணக்கிட்டால், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலுவலகத்திற்கு, ஓர் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தர்வேஸ் கருத்து தெரிவித்துஉள்ளார்.