சுசில் பிரேம ஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும்  நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை.

இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று தெரிவித்தார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கும்போதே அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தை திறந்தேன்.

கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கவச வாகன பாதுகாப்பில் அழைத்துச் சென்று கட்சி அலுவலகத்தை திறந்தேன்.

இவ்வாறு கட்சிக்காக செயற்பட்ட எனக்கே இவர்கள் தேசியப் பட்டியலில் இடம் தரவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இரண்டாவதாக என் பெயரை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா எழுதிக்கொண்டார்.

நீங்கள் சென்று தேர்தல் வேலைகளை செய்யுங்கள் என சுசில் பிரேம ஜயந்த உறுதியளித்தார். ஆனால் தேசியப் பட்டியல் வெளிவந்தபோது என் பெயரைக் காணவில்லை. அதனை நீக்கியவர் யார்? யாருடைய உத்தரவில் அது நீக்கப்பட்டது?

பாராளுமன்றத்தில் எழுந்து நடக்க முடியாத, இடறி விழப்போகும் நபர்களுக்கும், பட்டியலில் இடம்தரப்பட்டுள்ளது. சிலரை கைத்தாங்கலாக ஆசனத்தில் அமரவைக்க வேண்டியதாகவும் இருக்கிறது.

நான் தேசியப் பட்டியலில் இடம் தாருங்கள் என கெஞ்சவில்லை. மஹிந்த தோற்று போன பின்னர் நான் நாட்டை விட்டு ஓடவுமில்லை. கட்சியை விட்டு விலகவுமில்லை.

கட்சியின் உப தலைவர் என்ற ரீதியில் எனக்கு தெரியாமல் கட்சிக்குள் பல முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.  சுசில் பிரேம ஜயந்த எந்த விதத்தில் இவ்வாறு செயற்பட்டுள்ளார்?

இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று செயற்பட்டவன் நான். உழைத்தவனும் நான், அதனை யாராலும் மறுக்க முடியாது.

தேசியப் பட்டியலில் உங்களுக்கு இடம்தரவில்லை என்பதற்காக நீங்கள் கட்சியை விட்டு விலகி விடுவீர்களா, அல்லது புதிய கட்சி ஆரம்பிப்பீர்களா?

நான் கட்சியை விட்டோ அரசியலைவிட்டோ விலகப்போவதில்லை. எனினும் இலங்கையில் அரசியலை திருப்பிப்போடவும் முடியும். அதற்கான மந்திரமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.

Share.
Leave A Reply