முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனவரி மாதத்தில் நடத்திய ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக வெளியொன்று புலர்ந்திருந்தது.
அடக்கு முறையும் அதிகார கோலோச்சல் முறையும் ஒரு தேர்தலில் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற கசப்பான உண்மையை ஜனாதிபதி தேர்தல் ராஜபக் ஷ குழுவினருக்குப் புகட்டியிருந்தது.
பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டு இல்லாதொழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளையும் வைத்து மக்கள் மனங்களை வெல்ல முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தையும் ஜனாதிபதி தேர்தல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு அகங்காரத்தோடு ஆட்சி நடத்தியவர்களுக்கு இடித்துரைத்திருந்தது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிக்கிளம்பிய ஜனநாயக சக்தியின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக – அந்த மாற்றத்தின் அடுத்த கட்டமாகவே ஆகஸ்ட் மாதப் பொதுத்தேர்தல் அமைந்திருக்கின்றது.
சர்வாதிகாரப் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஜனநாயக சிந்தனை கொண்டவர்களுக்கு இந்த ஆட்சி மாற்றமானது, ஒரு புதிய வழியைத் திறந்துவிட்டிருந்தது. ஆயினும் இனத்துவேச அரசியல் சக்திகள், இந்த ஆட்சி மாற்றத்தையும், அதன் ஊடாக ஏற்பட்டுள்ள ஜனநாயக வெளியையும் இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.
இதன் அடையாளமாகவே, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக் ஷவின் மீள் அரசியல் பிரவேசத்தை நோக்க வேண்டியிருக்கின்றது. ஆக, நாட்டின் தென்பகுதித் தேர்தல் களமானது, சர்வாதிகார போக்குடைய சக்திகளுக்கும், ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று முனைந்துள்ள சக்திகளுக்குமான பரீட்சைக்களமாகியிருக்கின்றது.
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் இந்த ஜனநாயக வெளியின் பின்னணியில் வந்துள்ள பொதுத் தேர்தலானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மோசமானதொரு சோதனைக்களமாகியிருக்கின்றது.
சிறுபான்மை இனத்தவரை அடக்கியொடுக்கி காலடியில் நசித்து வைத்திருக்க வேண்டும் என்ற போக்கில் செயற்பட்டிருந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியல் நடத்தி வந்த கூட்டமைப்பினர் இந்தப் பொதுத் தேர்தலில் அத்தகைய எதிர்ப்பு நிலையில் இருந்து மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியாதவர்களாக மாறியிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஜனநாயக வெளியின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும். சர்வாதிகாரப் போக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஆட்டிப்படைத்து, அவர்களின் நிம்மதியைக் குலைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சந்திரிகா – ரணில் –- மைத்திரிபால சிறிசேன ஆகிய பொதுக்கூட்டணிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி செயற்பட்டிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், பாராளுமன்றத்தில் மாற்றங்களைச் செய்து புதிய அரசாங்கத்தை – ஒரு தற்காலிக அரச நிர்வாகத்தை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை பிரமதமராக நியமனம் செய்து உருவாக்கியிருந்தார்.
இந்தத் தற்காலிக அரசாங்கத்திற்கு மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்து, அதனையோர் அதிகாரம் பெற்ற நிரந்தர அரசாங்கமாக்குவதற்காகவே இந்தப் பொதுத் தேர்தல் நடத்தப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலை மேலும் வலுவாக்குவதற்கும், நிரந்தரமாக்குவதற்குமாக நடத்தப்படுகின்ற இந்தப் பொதுத் தேர்தலில் கடந்த கால தேர்தல்களைப் போன்று அரச தரப்பினரைக் கண்டித்து, அவர்களுக்கு எதிரானதோர் அரசியல் உணர்வைத் தூண்டி, மக்களின் ஆதரவைப் பெற முடியாத நிலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள மைத்திரி – ரணில் அணியினருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றது.
மஹிந்த ராஜபக் ஷவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ரணில் – மைத்திரி அணியினருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்ற போக்கில் செயற்பட்ட கூட்டமைப்பினருக்கு, இந்த அரசாங்கத் தரப்பினருக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப முடியாதுள்ளது.
மாறாக, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினீர்களே, அந்த புதிய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எதனைப் பெற்றுத் தந்தீர்கள்? என்னென்ன பிரச்சினைகளுக்கு உங்களால் தீர்வு காண முடிந்தது? என்று தமிழ் மக்கள் கூட்டமைப்பை நோக்கி வினவுகின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
நூறு நாள் அரசாங்கமாக உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கமானது, 6 மாதங்கள் பதவி வகித்திருந்தது.
இந்த காலப்பகுதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நாட்டு மக்களின் பொது நன்மைக்காகவும், குறிப்பாக தென்பகுதி மக்களின் மனங்களை வெல்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் தமிழ் மக்களின் விசேடமான நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
நல்லெண்ண அடிப்படையிலான சிறிய காரியங்களைக் கூட புதிய ஜனாதிபதியினாலும், புதிய பிரதமரின் கீழான அரசாங்கத்தினாலும் செய்ய முடியாமல் போய்விட்டது.
அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால், சிறிய காரியங்களைக்கூட புதிய அரசாங்கத்தின் மூலம் செய்விக்க முடியாமல் போனது ஏன், என்பது தமிழ் மக்கள் மனங்களில் எழுந்துள்ள பூதாகரமான ஒரு கேள்வியாகும்.
புதிய ஜனாதிபதிக்கு அமோகமாக ஆதரவளித்திருந்த போதிலும், அவரால் அன்றாடப் பிரச்சினைகளில் சிலவற்றையாவது தீர்த்திருக்கலாமே என்பது தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களினதும் ஆதங்கமாகும்.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். ஆனால் அத்தகைய ஒரு தீர்வை இலகுவில் அடைய முடியாது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்பகுதியைச் சேர்ந்த பேரின அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்பதை தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
பேரினவாதிகளிடம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதென்பது, குதிரையைத் தண்ணீர் குடிக்கச் செய்வதற்கு ஒப்பான காரியம் என்பதை தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.
ஆனாலும் அரசியல் தீர்வுக்காக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் முயற்சிக்க வேண்டும். சரியானதோர் அணுகுமுறையின் ஊடாக நியாயமானதோர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நீண்டகால எதிர்பார்ப்பாகும்.
அதேநேரத்தில் மோசமான யுத்த மோதல்களில் சிக்கி அனைத்தையும் இழந்த பின்பும் தங்களுடைய சொந்தப் பிரதேசங்களில் அமைதியாக மீள்குடியேறி வாழ்வதற்கு வழிசெய்யப்பட வில்லை என்பது அவர்களுடைய மிகப் பெரிய கவலையாகும்.
தங்கள் பிரதேசங்களில், அவர்களைப் பொறுத்தமட்டில், தேவையற்ற விதத்தில் தங்களுடைய சிவில் வாழ்க்கையில் தலையீடு செய்யும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அகற்ற வேண்டும்.
அவர்கள் அபகரித்து வைத்துள்ள குடியிருப்பு நிலங்கள், பயிர்ச் செய்கை நிலங்கள் என்பவற்றைக் கைவிட வேண்டும். தங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்பது அவர்களின் அவசரமான எதிர்பார்ப்பாகும்.
அதேவேளை, சிறைச்சாலைகளில் விசாரணைகளோ, குற்றச்சாட்டுக்களோ இல்லாமல், தண்டனை அனுபவிக்கும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்பதும் அவர்களுடைய எதிர்பார்ப்பு.
புதிய ஜனாதிபதி ஒரு சில அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தையும், தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கான அரசியல் நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது.
புதிய ஜனாதிபதி தானாக அதனைச் செய்ய முன்வரவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தலைமைகள் அவரையும் புதிய அரசாங்கத்தையும் அத்தகைய நகர்வை மேற்கொள்ளச் செய்திருக்கலாம்தானே என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்திலும்சரி, யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான கடந்த ஆறு வருட காலத்திலும்சரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே தமது அரசியல் தலைமையாக ஏற்றுக்கொண்டு அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள், அதற்கு ஆதரவாக வாக்களித்து வந்துள்ளார்கள்.
தமிழ் மக்களின் ஒற்றுமையை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தேர்தல்களின் காட்ட வேண்டும். அதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்ற உறுதிமொழியை – நம்பிக்கையை கூட்டமைப்பு மக்களுக்கு ஊட்டி வந்தது.
ஆனால் இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை. அரசியல் தீர்வும் சரி, அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வும் சரி, தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.
ஆனால் காலத்துக்குக் காலம் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ்த்தலைவர்கள் அளிக்கின்ற வாக்குறுதிகள் மாத்திரம் முடிவின்றி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாததன் காரணமாக மக்களின் வாழ்க்கையில் நெருக்கடிகளும் சிரமங்கள் கஷ்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றன.
இதனால் அவர்கள் அரசியல் தலைமைகள் மீதும், தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழக்கின்ற நிலையை நோக்கி சரிந்து செல்ல வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
சிறுபான்மை இன மக்களை பல்வேறு வழிகளிலும் அடக்கியொடுக்கியிருந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழி மற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அது புதிய அரசாங்கத்தினதோ அல்லது புதிய ஜனாதிபதியினதோ முன்னெடுப்பு நடவடிக்கை அல்ல. ஆனால் அந்த நடவடிக்கை புதிய அசாங்கத்தின் செயற்பாடாகவே காட்டப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சம்பூர் காணி பிரச்சினையும்கூட, கடந்த அரசாங்கக் காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் நடவடிக்கையே தவிர, புதிய ஜனாதிபதி அல்லது புதிய அரசாங்கத்தினதோ தன்னிச்சையான செயற்பாடல்ல.
இறுதி யுத்தத்தின்போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான மோசமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் ஒரு விசாரணை நடத்தப்படும். ஐ.நா .மனித உரிமைப் பேரவையில் இது தொடர்பில் கொண்டு வரப்பட்ட போர்க்குற்ற பிரேரணைகளின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று தமிழ்த் தலைவர்கள் நம்பிக்கையூட்டி வந்தார்கள்.
இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரச தரப்பினர் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்கள்.
அந்தத் தீர்மானங்களின் அடிப்படையிலான எந்த விசாரணையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு. பதிலாக உள்ளக விசாரணைகள் நடைபெறுகின்றன.
வேண்டுமானால், உள்ளக விசாரணைகளின் தரத்தை இன்னும் உயர்த்தலாம் எனக் கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி, பெயரளவிலான நடவடிக்கைகளையே கடந்த அசாங்கம் மேற்கொண்டிருந்தது.
புதிய ஜனாதிபதியும் சரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான இந்த அரச தரப்பினரும்சரி, போர்க்குற்ற விவகாரத்தில் முன்னைய அரசாங்கத்தின் அடியொட்டியே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றியே, ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்திய விசாரணையின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட இருந்தது.
ஆனால், ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டிருந்த ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி புதிய நிலையான ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய முக்கியமான தேவை இருப்பதனால், போர்க்குற்ற விசாரணை அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பதை – வெளியிடுவதைப் பின்போடுமாறு புதிய அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் கேட்டிருந்தது. அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அது செப்டெம்பர் மாதத்திற்குப் பின்போடப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அநியாயங்களுக்கு நீதி கிடைக்கும். நிவாரணத்துடன் கூடிய விமோசனம் கிடைக்கும் என்பதற்கும் அப்பால், போர்க்குற்ற விசாரணையொன்றின் விளைவாக ஓர் அரசியல் தீர்வுக்கு வழிகிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய முக்கியமான எதிர்பார்ப்பாகும்.
அத்தகைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்குக் கூட தமிழ் அரசியல் தலைமைகள் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதே மக்களுடைய கருத்தாகும்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அநியாயங்களை போர்க்குற்றம் என்று வெளிப்படையாகக் குறிப்பிடுவதற்கும் போர்க்குற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும்கூட, பண்டிதர் நிலையில் இருந்து தமிழ்த் தலைவர்கள் வாதங்களை முன்வைத்த போக்கையே மக்கள் கண்டார்கள்.
பல்வேறு வழிகளிலும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசியல் தலைமையொன்றின் செயற்திறனற்ற தன்மையையே இதன் மூலம் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது, கல்லில் நார் உரிப்பது போன்றதொரு காரியம் என்பதை மக்கள் நன்கறிவார்கள். பேரினவாதிகளிடம் பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கென அசாத்தியமான அரசியல் செயற்பாட்டுத் திறன் அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
இதனை தமிழ் அரசியல் தலைமைகள் எந்த அளவிற்கு உணர்ந்திருக்கின்றன, அதற்கு ஏற்ற வகையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றன என்பது விடை கிடைக்காத வினாவாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
எதிர்ப்பு அரசியல் போக்கில் இருந்து விலகி, இணக்க அரசியல் அல்லது நட்பு ரீதியான அரசியல் அணுகுமுறை என்று ஏதோ ஒரு வகையில் குறிப்பிடத்தக்கதோர் அரசியல் அணுகுமுறையின் கீழ் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அணியினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கி வருகின்றது.
நிச்சயமாக இது சலுகைகளைக் கேட்டுப் பெறுவதற்கான சலுகை அரசியல் அணுகுமுறையல்ல என்பதை மக்கள் நன்கறிவார்கள். ஆனால், இந்த அணுகுமுறை பொதுத் தேர்தலின் பின்னர் அமையப் போகின்ற அரசாங்கத்திடம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட முடியும் என்பதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன.
பலரும் எதிர்பார்த்திருக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணியினர் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், செப்டெம்பர் மாதம் போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்படுகின்ற சூழலில் புதிய அரசாங்கம் தமிழர் தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்துகின்ற அளவுக்கு நிலைமைகள் கனிந்திருக்கும் என்று நம்புவதற்கில்லை.
ஐநா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையானது கடும் வார்த்தைப் பிரயோகங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கத்தக்க வகையிலான கடுமையான நிபந்தனைகள் அல்லது நடைமுறைப்படுத்தத்தக்க வகையிலான பரிந்துரைகளை அது உள்ளடக்கியிருக்கின்றதா என்பது தெரியவில்லை.
அதேநேரம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தத் தக்க வகையில் ஐ.நா . மன்றமும்சரி, சர்வதேச நாடுகளும் சரி எந்த அளவுக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போகின்றன என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனநாயக விரோதப் போக்கையும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் கொண்டிருந்த காரணத்தினாலேயே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டிருந்தன.
ஆனால் ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, எழுந்துள்ள திருந்தியதொரு ஜனநாயக சூழலில் நடைபெறுகின்ற ஆகஸ்ட் மாதப் பொதுத் தேர்தல் குறித்து இந்தியாவோ சர்வதேச நாடுகளோ ஜனாதிபதி தேர்தலின் போது காட்டிய ஆர்வத்தோடு செயற்படுவதாகக் காண முடியவில்லை.
இலங்கையில் ஒரு ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்த இந்தியாவும்சரி, சர்வதேச நாடுகளும் சரி, ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அல்லது சிறுபான்மை இன மக்களுக்கான இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனவா என்பதும் சந்தேகமாகவே இருக்கின்றது.
அரசியல் தீர்வென்பது உள்நாட்டு விவகாரம். அந்தத் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்குரிய ஜனநாயக சூழல் இலங்கையில் நிலவுகின்றது. எனவே, அந்த சூழலில் அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளட்டும் என்று சர்வதேசம் தனது அலுவல்களில் மூழ்கிப் போய்விடக் கூடிய நிலைமைகளுக்கான வாய்ப்பே அதிகமாக இப்போது தென்படுகின்றது.
இத்தகைய ஒரு சூழலில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்ததும்,அடுத்த வருடம் 2016 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது கேள்விக்குரியது.
அதேபோன்று கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயநிர்ணயம், பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையிலான அதியுச்ச அதிகாரப்பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வு எந்த வகையில் முன்னெடுக்கப்படலாம் என்பதும் தெளிவற்றதாக உள்ளது,
வடக்கு, கிழக்கு நீதிமன்ற உத்தரவொன்றின் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாணங்களாகச் செயற்பட்டு வருகின்றன. இந்த மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றதே, தவிர அவற்றின் இணைப்புக்கான நடவடிக்கைகள் எதையாவது தமிழ்த்தலைவர்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இத்தகைய பல்வேறுபட்ட பின்னணியில் தமிழ் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 20 ஆசனங்களைக் கைப்பற்ற முடியும். இந்தத் தேர்தல் பரப்புரை காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை அது எவ்வாறு பெறப்போகின்றது என்பது தெரியவில்லை.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். ஆனால் அத்தகைய ஒரு தீர்வை இலகுவில் அடைய முடியாது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்பகுதியைச் சேர்ந்த பேரின அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்பதை தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
பேரினவாதிகளிடம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதென்பது, குதிரையைத் தண்ணீர் குடிக்கச் செய்வதற்கு ஒப்பான காரியம் என்பதை தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.