யாதும் ஊரே… யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் அந்த வரியை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் முழங்கிய அந்த தலைமகனார்…
3000 ஆண்டுகால தமிழ் வரலாற்றை உலக அரங்கில் ஏற்றிவைத்த பெருமகனார்.
அந்த உரையில், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைத்த தமிழ் மகனார்.
தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், உலகளாவிய பெருமை சேர்த்த அப்பெருமகனார்…
விண்ணை அளந்து பார்த்த அந்த திருமகனார் இன்று விண்ணோடு சங்கமித்துவிட்டார்.
முதல் ரொக்கெட் 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. நாஸாவில் தயாரிக்கப்பட்ட அது நைக் அபாத் என்று சொல்லப்படும் சவுண்டிங் ரொக்கெட்.
தேவாலயக் கட்டடத்தில் அந்த ரொக்கெட்டை அசெம்பள் செய்து ஒரு லொறியில் ஏற்றி ஏவுதளத்திற்கு கொண்டு வந்தோம். இந்த லொறியையும் கைகளால் இயக்கக்கூடிய ஹைட்ரொலிக் கிரேனையும் தவிர எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.
கிரேன் மூலம் ரொக்கெட்டை லொறியிலிருந்து அகற்றி ஏவுகலத்தில் கிட்டத்தட்ட பொருத்தும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம்.
அந்தச் சமயம் பார்த்து ரொக்கெட் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது. கிரேனில் ஹைட்ரொலிக் இயக்கமுறையில் கசிவு ஏற்பட்டதால் இந்தக் கோளாறு. ரொக்கெட்டை ஏவவேண்டிய மாலை 6 மணி என்ற காலக்கெடு வேறு வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தது… ஆனால் கிரேனோ…
இப்படி தனது முதல் ரொக்கெட் அனுபவத்தை அக்கினிச் சிறகு என்ற சுயசரிதையில் விவரித்துக்கொண்டுபோகிறார் இந்தி அணுத் தொழில்நுட்பத்தின் தந்தை, இந்தியாவின் சக்திமிகு குடியரசுத் தலைவர் மக்களின் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
நாட்டுக்காக உழைத்த மாமனிதர், மாணவர்களுக்காகவே தன் இறுதிக்காலங்களை செலவிட்ட அப்துல் கலாம் இறுதிவரை லெளகீக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்…
சரிதான்… திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளை பெற்றிருந்தால். அவர் ஒன்று இரண்டோ பிள்ளைகளுக்கு மட்டும்தான் தந்தையாக இருந்திருப்பார்.
ஆனால் இப்போதோ அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர் தந்தையாகிவிட்டார்.
ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். இதுதான் கலாமின் முழுப் பெயர்.
அக்டோபர் 15ஆம் திகதி,1931இல் ராமேஸ்வரத்தில் பிறந்தார் அப்துல் கலாம். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா.
தந்தையார் மிகப்பெரிய செல்வந்தரும் இல்லை. மெத்தப் படித்த மேதையும் இல்லை. அவரிடமிருந்தது எல்லாமே அனுபஞானம் மட்டுமே. அந்த அனுப ஞானத்தை அப்படியே தன் மகனுக்கு மொழிபெயர்த்துக்கொடுத்தது மட்டும்தான் தந்தையாக அவர் செய்தது.
அப்துல் கலாமின் தந்தையார் படகு கட்டும் தொழில் செய்தவர். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் தான் தன்னுடைய படிப்புச் செலவை பார்த்துக்கொண்டார் கலாம்.
இறுதிவரை அவர் நேர்மை தவறியதில்லை. அந்த நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாக அடிக்கடி சிலாகித்துக்கொண்டிருப்பாராம் கலாம்.
உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் தன்னுடைய நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினாராம்.
கல்லூரிக்கு வந்து படித்துக்கொண்டிருந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பினால் கலாமை அவருடைய அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லிவிட்டார்.
ஆனாலும் ஊருக்குப் போகக்கூட அவர் கையில் அப்போது காசு இல்லையாம். அதனால் தன் புத்தகங்களை எடைக்கு போட்டு அதில் வரும் பணத்தை வைத்து ஊருக்குப் போகலாம் என்று முடிவெடுத்த கலாம், அந்தப் புத்தகங்களை விற்க சென்ற இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படி என்று சொல்லி அனுப்பினாராம் அந்த புத்தகக் கடைக்காரர்.
இந்த நன்றியை அவர் எம்போதும் மறந்ததில்லை. அடிக்கடி இந்த செய்தியைக் குறிப்பிட்டுக் காட்டி இவருக்கு படிக்க உதவிய அந்த நபரை நன்றியோடு குறிப்பிடுவாராம் கலாம்.
கல்லூரியில் தன்னுடைய உணவுச் செலவை குறைக்க சைவத்துக்கு மாறிய கலாம் கடைசிவரை சைவ உணவை மட்டும்தான் உண்டார்.
பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தாராம் கலாம். அந்த நேரத்தில் கண்ணீரோடு நின்றாராம் கலாம்.
அப்போது சுவாமி சிவானந்தரின் ”இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்” என்ற வரிகளைப் படித்தபிறகு.
உணர்ந்தாராம் நான் பெரிதான ஒன்றுக்காக அனுப்பப்பட்டவன் என்று. உண்மைதான்… பெரிதாக மட்டுமல்ல மிக மிக உயரமான ஒன்றிற்காகவும் அனுப்பப்பட்டவர்தான் அப்துல் கலாம்.
இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார் அப்துல் கலாம். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வி.யை உருவாக்கினார்.
அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி ‘இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என வர்ணிக்கப்படலானார்.
திருக்குறளும், குரானும் எப்பொழுதும் அவர் உடன் இருக்கும்.
ஒரு முறை எஸ்.எல்.வி 3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க ஆசைப்பட்டாராம். இந்திரா காந்தி அலுவலகத்திலிருந்து கலாமுக்கு அழைப்பு வந்ததாம். உங்களை இந்திராகாந்தி சந்திக்க ஆசைப்படுகிறார் என்று.
ஒரு பக்கம் மகிழ்ச்சி… மறு பக்கம் கவலை. அந்தக் கவலைக்குக் காரணம் இந்திரா காந்தியைச் சந்திக்கச் செல்ல தன்னிடம் ஒரு நல்ல ஆடை கூட இல்லையென்பதுதானாம்.
அப்பொழுது ”என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே” என கலாம் சொல்ல, ”வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்! பிறகெதற்கு வேறு நல்ல ஆடை என சொல்லி வழியனுப்பி வைத்தாராம் மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான்.
இவரின் மிகப் பெரிய சாதனை எல்லாம் வானத்தில்தான் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஊணமுற்றவர்களுக்காகவும் தன்னுடைய அறிவைப் பயன்படுத்தியவர் கலாம்.
ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் ஊனமுற்ற குழந்தைகள் கிலோ கணக்கில் பாரமான செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் 400 கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துக் கொடுத்த மாமேதை அவர்.
உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கலாமின் சொந்த வீடு ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார்.
பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.
1998ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி பிற்பகல் 3.45 மணி.. இது இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த பார்வையும் பொக்ரான் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்ட்டூன்களில் என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.
‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் நிற வெறியை எதிர்த்துப் போராடி, அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியும், 26 வருடம் தனிமைச் சிறையில் ராபின் தீவில் இருந்து, தன் பொறுமையால், மனோதிடத்தால், பதவிக்கு வந்து, தென்னாபிரிக்காவில் அடிமை நிலைக்குக் காரணமானவர்களை மன்னித்து, அவர்களையும் அந்த நாட்டுக் குடிமக்களாக அங்கீகரித்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்களும்தான் என்னைப் பிரமிக்க வைத்த உலக அரசியல் தலைவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார் கலாம்.
எங்கள் எல்லாரையும் கனவு காணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன? என்ற கேள்வியை ஒருமுறை அவரிடம் கேட்க அதற்கு அவர், 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, என் இலட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும் என்று பதிலளித்திருந்தார்.
”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை.
என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று தான் எழுதிய அக்கினிச் சிறகுகள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஐயா… பெரியவரே உங்கள் அக்கினி என்றும் அணையாது…
சொப்பனமும் காணவில்லை
சொல்லி யாரும் போகவில்லை
கூடுவிட்டு பிரிவார் என்று
கொஞ்சம் கூட நம்பவில்லை!
பிள்ளைகளுக்கு என்ன சொல்ல
பிரியும்போது நினைச்சீரோ
மாணவர்களின் முகம்பார்த்து
கடைசி கண்ணீர் வடிச்சீரோ!
யாரு செஞ்ச சூது
உடல் மண்ணில் புதைய போகுது!
நாட்டை வல்லரசாக்க வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்றும் கூடுதலாக ஒருநாள் வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
இந்தியாவை பொறுத்த வரை மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம்.
எல்லா வகையிலும் நாட்டின் முன்னேற்றம் மட்டும்தான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.
இதனால்தான் ” நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்” என்று சொன்னவர் அப்துல் கலாம். அப்படிப்பட்ட மாமேதையை இன்று உலகம் இழந்து விட்டது.
அதேபோல் மாணவ – மாணவிகளிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் அவரது உயிர் பிரிந்திருக்கிறது என்றால் இறப்பு கூட அவரது கனவை புரிந்து வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.
எஸ்.ஜே.பிரசாத்