பாராளுமன்றத் தேர்தல்களம் இப்போது படிப்படியாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் கொள்கை பிரகடனங்களை வெளியிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைப் பிரகடனம் ஆறு மாதங்களுக் குள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனத்தெரிவித்துள்ளது. அதேவேளை, அக்கட்சியின் பிரச்சார மேடைகளில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகின்றது,
புலம்பெயர் அமைப்புக்களின் மாநாடு செப்ெடம்பரில் இலங்கையில் நடக்கப்போகிறது; இதனால் பிரிவினைவாதத்தை நோக்கி ஐ.தே.கட்சி நாட்டை நகர்த்திச் செல்கின்றது என்றெல்லாம் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் விஷமப் பிரசாரங்களை நடத்தி வாக்காளர்களுக்கு புலிப்பூச்சாண்டி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒரு சில நாட்களுக்குள்ளேயே மஹிந்த ராஜபக் ஷ இந்த பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். 100 நாட்கள் வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். இந்த அறிவிப்புடன் மஹிந்த தரப்பினர் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் ஜனவரி 9 ஆம் திகதி அலரிமாளிகையிலிருந்து மெதமுலனயிலுள்ள தனது இல்லத்துக்குச் சென்றார். அங்கு மக்கள் கூடி நின்றனர். யன்னலில் ஏறி நின்று மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் உங்கள் வாக்குகளால் தோல்வியடையவில்லை. ஈழ வாக்குகளாலேயே நான் தோல்வியுற்றேன் என்று தெரிவித்தார். அவர் உள்ளத்திலிருந்த ஆத்திரம் அப்போது வார்த்தைகளால்வெளிப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் வடக்கில் புலிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக இத் தரப்பினர் புரளியை கிளப்பிவிட்டனர். இராணுவப் பேச்சாளர் வடக்கில் புலிக்கொடிகள் பறக்கவில்லை அந்த புரளி வெறும் வதந்தி எனத் தெரிவித்தார்
இது மட்டுமின்றி வெளிவிவகார அமைச் சர் மங்கள சமரவீர புதிய அரசாங்கம் பதவியேற்ற சில வாரங்களில் இங்கிலாந்துக்குச் சென்று புலம்பெயர் அமைப்புக்களைச் சந்தித்தார். இந்த அமைப்புக்களில் சிங்கள புலம்பெயர் அமைப்புக்களும் இருந்துள்ளன.
இந்த அமைப்புக்களுடன் இலங்கையின் அபிவிருத்திக்கு இந்நாட்டில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்தை நடத்தியது மட்டுமின்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் புலம்பெயர் அமைப்புகளின் மாநாடொன்றை நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
புலம் பெயர் அமைப்புக்களின் மாநாடு இலங்கையில் நடத்தப்போவதாக அறிவித்தது வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் புலம்பெயர் அமைப்புகளின் மாநாடு நடத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று எதுவித காரணத்தையும் தெரிவிக்காது மக்களை குழப்பத்தொடங்கிவிட்டார்.
இவருடன் முன்னாள் அமைச்சர்களான பந்துலகுணவர்தனவும், விமல் வீரவன்சவும் இணைந்து கொண்டனர்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர் தல் அறிவிக்கப்பட்ட பின்னர் புலிப்பூச்சாண்டி காட்டும் பிரசாரங்களும் இப்போது மீண்டும் மேடைகளில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர் தல் விஞ்ஞாபனம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மஹிந்த தரப்பினர் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சமஷ்டி முறைமையிலான தீர்வு வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பது நாட்டை துண்டாக்கும் நடவடிக்கையாகும் என்று மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றது.
இனவாதத்தைக் கக்கி நாட்டை துண்டாட இந்த அரசு துணைபோவதாக சிங்கள மக்களை அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்துவதிலேயே மஹிந்த தரப்பினர் குறியாக இருக்கின்றனர்.
ஐ.ம.சு முன்னணியின் பிரசாரம் குருணாகலையில் ஐ.ம.சு முன்னணியின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வும் குருணாகலையில் மட்டுமன்றி நாடு முழுவதும் பயணம் செய்து ஐ.ம.சு முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பிரசாரம் செய்து வருகின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஜே.வி.பியுடனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து எவ்வாறு ஆட்சியமைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பிவருகின் றார்.
ஜே.வி.பி. எந்தக் கட்சியுடனும் ஆட்சியமைப்பதற்கு துணை போவதில்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளது.
அதேபோல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எக்கட்சியுடனும் கூட்டுச் சேரப்போவதில்லை என் றும் எந்தவகையிலும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்றும் அறுதியிட்டுக்கூறியுள்ளது.
இவை ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும் குறுகிய அரசியல் லாபம் கருதி பிரதமராகும் கனவுடன் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் பிரசாரங்களை முன்னெ டுத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ.ல.சு. கவிலிருந்து ஐவர் அதிரடியாக நீக்கம்
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை விட்டுவெளியேறிய அமைச்சர்களான ராஜித சேனாரத்தன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, அர்ஜுன ரணதுங்க, ஸ்ரீ.ல.சு கட்சியின் பொருளாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, ஐ.ம.சு முன்னணியின் மேல்மாகாண உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணிப் பட்டியலில் போட்டியிடுவதன் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஜனாதிபதியும் ஸ்ரீ.ல.சு கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதில் எஸ்.பி. நாவின்ன மாத்திரம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சியிலிருந்து வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்துவதாக அக்கட்சியினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பலரது எதிர்ப்புக்கும் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கினார். இப்போது தனது வெற்றிக்காக அர்பணிப்புடன் உழைத்தவர்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்யிலிருந்து நீக்கி அதிர்ச்சியளித்துள்ளார்.
தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி நிச்சயமாக வெற்றி பெறுமென அவர் திடமாக நம்புவதால் அவர் இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் வெற்றி பெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவும் அவர் எண்ணியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கப்போவதாக தெரிவிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யட்டி நுவர ஐ.ம.சு. முன்னணி கூட்டத்தில் பறந்த தேசியக் கொடி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டமொன்று கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்ற மேடையில் மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடிகள் பறந்தன. இந்த கொடிகளில் சிறுபான்மையினரை குறிக்கும் பச்சை, ஆரஞ்சு நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளே பறக்க விடப்பட்டிருந்தன.
பிரசாரக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் கூட்ட செய்திகளை சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்கள் இந்த மாற்றப்பட்ட கொடியை புகைப்படம், வீடியோ எடுப்பதிலிருந்து தடுக்கப்பட்டனர்.
இந்தக்கொடிகள் அவசர அவசரமாக நீக்கப்பட்டன. ஆனால் அங்கு பறந்த மாற் றப்பட்ட கொடிகள் தொடர்பான செய்திகளும் படங்களும் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பப்பட்டன, பத்திரிகைகளில் பிரசுரமாகின.
இதே போன்ற கொடிகள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை விசேட பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் காணப்பட்டன.
இந்த கொடிகளை அந்த ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்ட அமைச்சர்களும் கைகளில் ஏந்தியிருந்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக் கின்றன.
அமைச்சர்கள் ராஜினாமா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 27 பேருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டன. தேர்தல் அறிவிக் கப்பட்ட பின்னர் நிலைமை மாற்றமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவுக்கு பொதுத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினார்.
இதையடுத்து மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தனது பலத்தை படிப்படியாக அதிகரித்துக் கொள் ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். இதன் ஒரு அங்கமாக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது பதவியை இராஜினாமா செய்யும்படி பல்வேறு விதங்களில் அழுத்தம் விடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர் தல் பிரசாரங்களில் மைத்திரி தரப்பு வேட்பாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். மொத்தத்தில் ஐ.ம.சு.முன்னணிக்குள் மைத்திரி தரப்பினரது வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று மஹிந்த தரப்பினருக்கு இரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் அம்முன்னணியின் வேட்பாளர்கள் யாரை ஆதரிப்பது மைத்திரியையா? மஹிந்தவையா? என்று குழம்பித் தவித்தனர்.
பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என அனுமானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். தேர்தலில் மஹிந்த அணி வெற்றி பெறும் என எண்ணும் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து வருவதாகவும், மைத்திரி அணி வெற்றி பெறும் என்றும் நம்புப வர்கள் தொடர்ந்தும் அமைச்சுப் பதவிகளை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிலர் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.
மஹிந்தவின் திட்டம்தவிடுபொடியானது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவை கூட்டுவதற்கு நீதிமன்றம் விதித்திருந்த தடை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மஹிந்த தரப்பின் திட்டங்கள் குழம்பிப் போனதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை அறிவிக்கவும் அமைச்சுப்பதவி ஏற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகும் தீர்மானத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்க மஹிந்த அணி தீர்மானித்திருந்தது.
ஆனால் நீதிமன்றம் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 7ஆம் திகதி வரை நீடித்ததால் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான மஹிந்த அணியின் இந்தத் திட்டம் தவிடு பொடியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது அமைச்சு பதவியேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்யும் தீர்மானங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் நிறைவேற்ற மஹிந்த தரப்பு திட்டமிட்டிருந்தது.
நீதிமன்றம் தடையை நீடித்ததால் இத்திட்டம் தோல்வியுற்றது. அக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி அதன் யாப்பை திருத்தி தலைமைப் பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை தலைவராக நியமிக்க இரகசிய திட்டம் தீட்டியிருந்ததால் மத்திய குழு உறுப்பினரும் கொட்டிகாவத்தை பிரதேச சபை தலைவருமான பிரசன்ன சோலங்காராச்சி மத்திய குழுக்கூட்டத்துக்கு தடைவிதிக்கும்படி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததையடுத்து மத்திய குழு கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஐ.ம.சு.முன்னணியின் வாக்குறுதிகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்தவாரம் வெளியிடப்பட்டது. அதில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியலமைப்புக்குள் ஆறு மாத காலத்தில் தீர்வு காணப்படுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷ இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதில் முன்னின்று செயற்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
இதே மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தபோது 13ஆவது அரசியலமைப்பு திருத்ததத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென இந்தியாவுக்கு வாக்குறுதியளித்திருத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வேளை எந்த அதிகாரமும் இல்லாத பிரதமரானால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவரா? சகல அதிகாரமும் இருந்தபோது அளித்த வாக்குறுதியியை நிறைவேற்றாதவர் பிரதமராக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?
தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. திருமணத்துக்கு கொடுப்பனவு, மாணவர்கள் புத்தகம் கொள்வனவு செய்ய கொடுப்பனவு, மாணவர்கள் வெளிநாடு செல்ல கொடுப்பனவு என இளைஞர்களை இலக்கு வைத்து பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணியின் வாக்குறுதிகள்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்கள், நாடு முழுவதும் 45 வர்த்தக வலயங்கள் உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் இந்த பொதுத்தேர்தல் விஞ் ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியெய்தா விட்டாலும் க.பொ.த. உயர் தரம் பயில் வதற்கு அனுமதி வழங்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அரசியல் கட்சிகள் இத்தேர்தல் காலத்தில் வாக்காளர் களை முட்டாளாக்கும் வகையில் வாக்குறு திகளை அள்ளி வீசி வருகின்றன.
சிதைந்துபோகும் சிறுபான்மை வாக்குகள்
வடக்கு, கிழக்கிலும் மற்றும் மலைய கம் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் வாக் குகளை சிதறடிக்கும் வகையில் பல கட் சிகளும், சுயேட்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
சில தேர்தல் மாவட்டங்களில் ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் கட்சிகள் தனித் தும், பிரதான கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந் தும் போட்டியிடுவதால் முஸ்லிம் பிரதி நிதித்துவம் குறைந்துவிடும் அச்சம் காணப் படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை, வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் இந்நிலை காணப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்திலும் இதே நிலை காணப்படுகின்றது. இங்கும் ஏட் டிக்குப் போட்டியாக மலையக அரசி யல் கட்சிகள் இத்தேர்தலில் களமிறங்கி யுள்ளன. இதனால் வாக்குகள் சிதைந்து தமிழ் பிரதிநிதித்துவம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படு கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்களின் இத்தேர்தலில் வாக்குகளைச் சிதறடிக்க கூடியவகையில் திட்டமிட்டு களமிறங்கப்பட்டுள்ள கட்சி கள், குழுக்கள் தேசியப்பட்டியலில் இடம் பிடிப்பதற்காக அகில இலங்கை ரீதியிலும், சில மாவட்டங்களிலும் களமிறக்கப்பட் டுள்ள கட்சிகளுக்கு துணை போகக் கூடா தென புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.