இந்திய மத்திய பிரதேஷ் பகுதியில் இரண்டு பயணிகள் தொடரூந்துகள் தடம்புரண்டு ஆற்றில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது 300 பயணிகள் வரை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலமொன்றின் மீது எதிர்திசையில் கடந்து சென்ற இரண்டு தொடரூந்துகள் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளன.

நேற்று இரவு மத்திய பிரதேஷ் ஹர்தா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அசாதாரண காலநிலை காரணமாக பாலத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை வாரணாசி கமயாணி கடுகதி தொடரூந்தின் 7 பெட்டிகளும், ஜபல்பூர் – மும்பை ஜனதா கடுகதி தொடரூந்தின் 3 பெட்டிகளும், இயந்திரமும் மொஜாக் ஆற்றில் வீழ்ந்துள்ளன.

இந்தநிலையில் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் 300 பயணிகள் வரை காப்பாற்றப்பட்டதாக மத்திய பிரதேஷ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

4 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்ட போதும், அந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நேற்றிரவு 11.30 அளவில் கமயாணி கடுகதி தொடரூந்து பாலத்தை கடந்த சென்ற போது தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து சில நிமிடங்களில் எதிர்திசையில் பயணித்த ஜனதா கடுகதி தொடரூந்து தரம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply