முப்பது வருடங்களுள் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்து தற்போது எமது போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் பின்னோக்கிச் செல்லமுடியாது.
எமது தாயகத்திற்கான தீர்வு இந்த மண்ணிலேயே உள்ளது. அதனை நாம் வெளிநாடுகளில் தேடமுடியாது. அதை நோக்கிய பயணமாக எமது தரப்பு செயற்படுமென ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் ஊடகப்பேச்சாளரும் அக்கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான கணேசலிங்கம் சந்திரலிங்கம் (துளசி) தெரிவித்தார்.
கேள்வி :- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உருவான காலம் முதல் தனித் தமிழீழமே இலக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்த அவ்வமைப்பின் உறுப்பினர்கள் ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் ஊடாக ஜனநாயக அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தமைக்கான காரணம் என்ன?
பதில் :- எமது மக்களின் அவலமே காரணம். ஒவ்வொரு யுத்தத்திலும் நாம் அடைந்த வெற்றிகள் பல. அதனை கொண்டாடியிருக்கின்றோம். அந்த கொண்டாட்டங்களின் போது எமது மக்கள் அடைந்த பொருளாதார இழப்புக்கள், உயிரிழப்புக்கள் தொடர்பாக பாரிய அளவில் வெளியில் தெரியாத நிலையே இருந்தது. இறுதி யுத்தத்தைத் தவிர ஏனையவற்றை மிகச் சரியாக செய்திருந்தோம்.
விடுதலைப்புலிகள் நேரகாலத்துடன் நேரடியாக ஜனநாயக அரசியலில் ஈடுபட்டிருந்தால் எவ்வளவோ இழப்புக்களை தவிர்த்திருக்க முடியும். தற்போதைய நிலையில் நாம் கொள்கையின் அடிப்படையில் நிலையாக இருக்கின்றோம் என்ற செய்திக்காக எமது மக்களை பிரச்சினைக்குள் கொண்டு செல்லமுடியாது. கொள்கையின் அடிப்படையில் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதனை அடைந்து கொள்வதற்காக அவ்விலக்கு நோக்கி சுற்றிப்பயணிக்க வேண்டியுள்ளது.
2001ஆம் ஆண்டு அண்ணன் (வே.பிரபாகரன்) பேச்சுவார்த்தைக்கு இணங்கிச் செல்லும்போது தமிழீழம் தான் முடிந்த முடிவு என பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் ஏற்படுத்தப்படவில்லை. அக்காலப்பகுதியில் எம்மிடம் இவ்வாறான கேள்வியொன்றை எவருமே கேட்கவில்லை.
முப்பது வருட போராட்டத்தில் நாம் நேரடியாக யுத்தத்தில் பங்குபற்றியவர்கள் என்பதை விட எம்மோடு இணைந்து செயற்பட்ட வடகிழக்கு மக்கள் பொருளாதாரம், அடிப்படைக்கட்டுமானங்கள், முற்றாக சிதைந்து போயுள்ளன. வன்னியைப் பொறுத்தவரையில் இழப்புக்கள் இல்லாத வீடுகளே இல்லை. 12ஆயிரம் போராளிகள் பாதுகாப்பின்றி இருக்கின்றார்கள். இதனால் மிகப்பாரிய தலைமுறை இடைவெளியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீம்பாக நின்று எமது மக்களை ஏமாற்ற நாம் தயாரில்லை. எங்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகள் மக்களை வெறுமனே உசுப்பேற்றிவிடுவதால் எதனையும் செய்ய முடியாது. அதேநேரம் அபிவிருத்தியை மட்டும் இலக்கு வைத்து செயற்பட்ட கட்சிகளும் தோல்வியடைந்ததே வரலாறாகவுள்ளது. தீர்வு நோக்கிய பயணத்தின்போது எமது சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பு பலம் வாய்ந்ததாக சமதளத்தில் பயணிக்க வேண்டிய இலக்கு நோக்கி நகர்வதை நோக்காக கொண்டே எமது பிரவேசம் அமைந்துள்ளது.
கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருங்கிணைத்தமைக்கான காரணம் என்ன?
பதில் :- மூன்றாம் கட்ட ஈழப்போரை நிறைவு செய்து வெற்றி பெற்ற பலம்பொருந்தியவர்களாக இருக்கும்போது சர்வதேசம் பேச்சுவார்த்தைக்காக எம்மை அழைத்தது. 2001ஆம் ஆண்டு மல்லாவிக்கு வருகை தந்திருந்த நோர்வே தூதுவர் எரிக்சொல்ஹெய்ம், யசூசி அகாசி ஆகியோர் எம்மீதான ஒரு குற்றச்சாட்டாக விடயமொன்றை முன்வைத்தனர். அதாவது, அனைத்து கட்டமைப்புக்கள் காணப்பட்டாலும் ஜனநாயக ரீதியாக உங்களுடைய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் ஏனைய தமிழ் கருத்தியல்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் எனக் கூறியிருந்தனர்.
அதனடிப்படையாக வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் பங்களிப்பு யுக்தி முக்கியமானது. அவர் முக்கிய விடயத்தை கூறினார். அதாவது, அண்ணன் (வே.பிரபாகரன்), பலமில்லாதிருந்த தமிழ் அரசியல் தலைமைகளை மூத்த அரசியல்வாதியை தலைமையாக வைத்து உங்களுடைய குரலாக ஒருங்கிணைக்க வேண்டும். அதன் பின்னர் சர்வதேசத்திற்கு அரசியல் ரீதியாக இவ்வாறான அமைப்பொன்றை வைத்திருக்கின்றோம் என கூறமுடியும் எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவக்கப்பட்டது. எமது அரசியல் பணிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கவில்லை. சர்வதேச ரீதியில் சில விடயங்களை கூறுவதற்காகவே அவர்களை உருவாக்கினோம்.
கேள்வி :- அவ்வாறிருக்கையில் இந்தப் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தமைக்கான காரணம் என்ன?
பதில் : இதில் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது தென்னிலங்கையில் குழப்பகரமான சூழல் காணப்படுகின்றது. நிச்சயமாக யாரும் பெரும்பான்மை பலம்பெறமுடியாத நிலைமையொன்று காணப்படுகின்றது. தொங்கு பாராளுமன்றமொன்று அமைவதற்கான சூழலே காணப்படுகின்றது.
தென்னிலங்கையில் பலம் பெற்ற அமைப்புக்கள் உருவாக்கப்படுமாகவிருந்தால் இங்கு பேரம்பேசும் சக்திகளையே அவர்கள் தீர்மானிக்கவிரும்புவார்கள். இங்கு விலைபோகும் அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயலாற்றவும் தெற்கு தயாராவே உள்ளது. ஆனால் தற்போது அதனை தீர்மானிக்க முடியாத நிலையில் தெற்கு தளம்பலடைந்துள்ளது. ஆகவே நாம் பிரவேசிப்பதற்கான தக்க தருணம் இதுவே.
கேள்வி :- -தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியிலான விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன?
பதில் :- 2001ஆம் ஆண்டு உலகத்தின் ஒழுங்கில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. உரிமைக்காக போராடிய இயக்கங்கள், தாயகத்திற்காக போராடிய அமைப்புகள் ஆகியவை அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் தடைசெய்யப்பட்டன. அந்த உலக ஒழுங்கின்படி பங்கரவாத அமைப்புக்களாக கருதி தடைசெய்யப்பட்டதற்கு எதிராக அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெடுத்த போராட்டங்களுக்காக சர்வதேசத்தின் உதவி தேவைக்கு அதிகமாக வழங்கப்பட்டது. எத்தனையோ யுத்த தந்திரோபாயங்களை கொண்டிருந்தாலும் சர்வதேசத்துடன் போரிடமுடியாது. அவ்வாறான இக்கட்டான நிலைமையே எமக்கு ஏற்பட்டது. அதன் காரணமாகவே எமது ஆயுதரீதியிலான போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலே காரணம்.
கேள்வி :- விடுதலைப்புலிகள் அமைப்பில் மிகப்பெரும் பிளவாக கருதப்படும் கருணா அம்மானின் பிரிவு விடுதலைப்போராட்டத்தின் போக்கை பலவீனப்படுத்தியதா?
பதில் :- விடுதலைப்புலிகள் அமைப்பின் தோற்றுவாயில் மாத்தையாவின் பிரிவு எனப்படுவது பாரதூரமாக பார்க்கப்பட்டது. அப்போது குறிக்கப்பட்ட அமைப்பாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்தது. அப்போது இரண்டாந் தலைமை என்ற தர நிலையிலிருந்த மாத்தையா அமைப்புக்கு எதிராக பாரதூரமான துரோகத்தை இழைத்தார். அப்போது நாம் நடவடிக்கை எடுத்தோம்.
அவ்வாறான தருணத்திலேயே முறியடிக்கப்படமுடியாத அமைப்பாக நாம் எழுச்சி அடைந்து வளர்ந்து வந்திருந்தோம். கருணா என்பவரின் பிரிவு இயக்கத்திற்கு பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கருணாவை ஒரு போர்த்தளபதியாக பார்த்திருக்கின்றார்கள். கருணாவை விட அனுபவம் வாய்ந்த திறமையான பல்வேறு தளபதிகள் அமைப்பில் இருந்தார்கள். முகம் தெரியாத எத்தனையோ தளபதிகள் இருந்தார்கள். ஆகவே இராணுவ ரீதியாக எமது பின்னடைவுக்கு கருணாவின் பிளவு நிச்சயம் காரணமல்ல.
கேள்வி :– தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சாதகமான சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டார்கள் என விமர்சிக்கப்படுகின்றதே?
பதில் : எமது தலைமை கொள்கை ரீதியாக குறிக்கப்பட்ட இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. எமது கொள்கைக்கு எதிரான எந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. சலுகைகள் ஏனைய விடயங்களுக்காக எமது இலக்கை நாம் மாற்றியமைக்க இயலாதவொன்று.
கேள்வி :- இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் நாட்டின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது?
பதில் :- முள்ளிவாய்க்கால் முற்றுகையின் போது எம்மக்கள் மீது கொண்ட பேரபிமானத்தின் காரணமாக தமிழ் நாட்டு மக்கள் தீக்குளித்தார்கள். ஆனால் எங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகக்குறைந்தது தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இராஜினாமாச் செய்ய முன்வரவில்லை.
தமிழ் நாட்டு மக்களின் போராட்டம் காத்திரமாக இருந்தது. இடையில் கடல் இருந்ததன் காரணத்தால் அவர்களால் நேரடியாக கரம் நீட்டமுடியாதிருந்தது. அப்போது தமிழ் நாட்டின் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு மத்திய அரசுடன் இணைந்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டது. தமிழ் நாட்டு மக்களின் போராட்டம் இந்தியாவில் தாக்கம் செலுத்தாதவகையில் செயற்பட்டதற்கான தண்டனையை கருணாநிதி தற்போது பெற்றுக்கொண்டிருக்கின்றார்.
கேள்வி :- நெருக்கடியான நிலைமையின்போது தமிழ் நாட்டு தலைவர்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் பேசினார்களா? தொடர்பாடும் நிலைமையொன்று காணப்பட்டதா?
பதில் : தற்போது தேர்தல் காலம். பொதுத்தேர்தலில் எமது அமைப்புக்கு ஜனநாயக பலமான மக்கள் ஆணை கிடைக்கும். அதன் பின்னர் உங்களுடைய வினாவுக்கு நிச்சயம் பதிலளிப்போம்.
கேள்வி :- புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் அல்லது சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இருந்த நபர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக த.தே.கூ பிரதிநிதிகள் பாராளுமன்றில் கூறியிருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் தற்போது உங்களால் எவ்வாறு சுதந்திரமாக ஒன்று கூட முடிந்துள்ளது?
பதில் : 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதிக்கு முன்னர் மிகப்பலம்பெற்ற அமைப்பு. உலகத்தின் எப்பகுதியிலும் தயாரிக்கப்பட்ட எவ்வகையான நவீன ரக ஆயுதத்தையும் கையாளும் வல்லமை கொண்ட நபர்கள். அவ்வாறான 12ஆயிரம் தேர்ச்சி பெற்ற ஆயுதப்பாவனையாளர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இராணுவத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் தென்னிலங்கையில் மேற்கொள்ளும் செயற்பாடுகளைப் போன்று இவர்களால் வடபகுதியில் அச்சுறுத்தல்கள் நிகழலாம் என்ற ஐயப்பாடு அவர்களுக்கு இருந்தது.
அதேநேரம் இங்கு பாலியல் கொடுமைகள், களவுகள் போதைப்பொருள் பாவனைகள், காயப்பட்ட போராளிகள், பொதுமக்கள் கீழ்ப்படுத்தப்பட்ட நிலை என எம்மை சீற்றம் கொள்ள வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன. எனினும் நாம் ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். எனினும் நாம் ஆயுதரீதியாக செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்ற நோக்கம் இருந்தமையால் எம்மை பின்தொடரும் நிலைமை இருந்தது. குறிப்பாக வன்னியில் நெருக்கடி நிலையிருந்தது.
அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான பாதையை பெற்றுத்தரவேண்டியது எம்மால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமை. எமக்கான அரசியல் அங்கீகாரம் வழங்கப்படும் பொழுது எம்மீதான சந்தேகப் பார்வைகள் துடைத்தெறியப்பட்டிருக்கும்;. ஜே.வி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப்,புளொட், ரெலோ ஆகியன அவ்வாறே வந்துள்ளன. ஆகவே எமக்கான அரசியல் அங்கீகாரத்தை கடந்த ஆறுவருட காலத்தினுள் பெற்றுக்கொடுத்திருக்கவேண்டியது தமிழ்த் தலைமைகளின் பணி. அவர்கள் அதனை கையிலெடுக்கவில்லை. ஈற்றில் நாமே எமது அரசியல் களத்தை திறக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுவிட்டோம்.
கேள்வி :- விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களை வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளாமைக்கான கார-ணம் என்ன?
பதில் : நாம் அனைவருக்கும் அழைப்பை விடுத்திருந்தோம். முக்கியமான மக்கள் அறிமுகம் பெற்ற போராளிகள் கடுமையாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் அந்த அழுத்தங்களிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் பாதுகாப்பு, காயங்கள், வலிகளிலிருந்து விடுபடவில்லை. நூறு முதல் இருநூறு பேர் வரையிலானவர்களே விடுதலைப்புலிகள் கட்டமைப்பு ஜனநாயக ரீதியாக மாற்றப்பட்டிருக்கின்றது என்ற செய்தியைச் சொல்வதற்காக எமக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற தற்துணிவுடன் மக்கள் முன் நிற்கின்றோம்.
கேள்வி :- இறுதி யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச்சட்டங்கள் தொடர்பாக விசாரணை எவ்வாறு அமைய வேண்டும் எனக் கருதுகின்றீர்கள்? இதற்கு உங்களுடைய தரப்பின் பங்களிப்பு என்ன?
பதில் : யுத்தம் செய்த தரப்பு என்ற அடிப்படையில் அவர்கள் எங்களுக்கும் நாங்கள் அவர்களுக்கும் எதிரிகளாக இருந்தோம். யுத்தத்தின் கோரமுகத்தை நேரடியாக சந்தித்திருந்தோம். யுத்தத்தின் இறுதியில் தோற்று விட்ட தரப்பாக நாம் கைது செய்யப்பட்டோம், சரணடைய வைக்கப்பட்டோம். சிறைச்சாலைகளில், புனர்வாழ்வு நிலையங்களில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் இறைமையுள்ள நாடொன்றின் அதிகாரம் படைத்த தரப்பின் நீதித்துறையினரால் விசாரணை செய்யப்பட்டோம். தண்டனைகள் வழங்கப்பட்டன. புனர்வழ்வு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எமது குடியுரிமை பறிக்கப்படாது இந்த நாட்டினுள் நாம் இருக்கின்றோம். எமது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றோம். ஆகவே இறைமையுள்ள ஒரு தரப்பால் விசாரணை நிறைவுற்ற நிலையில், ஏனைய தரப்பால் விசாரணை முன்னெடுக்கத் தேவையில்லை.
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறிமுறை யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடகாலப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டியதொன்று. இன்று அதன் தாக்கம் குறைவடைந்துள்ளது. ஆறு ஆண்டுகளாகின்ற நிலையில் மார்ச், செப்டெம்பரில் ஜெனீவாவில் வெறுமனே பேசுபொருளாக மட்டுமேயுள்ளது.
யுத்தத்தில் பங்கெடுத்த தரப்புகள் பதில் சொல்லவேண்டிய பொறிமுறைக்குள் கொண்டு சென்றிருக்க வேண்டியது அரசியல் தலைமைகளின் கடமை. இரண்டு மூன்று வருடங்களுக்குள் இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்து தமிழ்த் தலைமைகள் செயற்பட்டிருப்பார்களாக இருந்தால் அந்த விசாரணைகள் காத்திரமானதாக இருந்திருக்கும். ஆட்சிமாற்றத்தின் பின்னர் யார் யார் எவ்வாறு என்ற நிலையில் செப்டெம்பரில் அறிக்கைக்காக எதிர்பார்த்திருக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் பிரகாரம் பதில் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்களாக இருக்கும் நாமும், அரசாங்கமும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படுவார்களாக இருந்தால், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உண்மையான நீதி வழங்கப்படுமாகவிருந்தால் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி :- தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில் : தமிழர்களுக்கான தாயகம், சுயநிர்ணயம் என்பன நிறுவப்படவேண்டுமென்பதற்காக மிகப் பலம்வாய்ந்த செயற்பாட்டை நாமே மேற்கொண்டிருந்தோம். அந்த உரிமையை கோருவதற்கு யாருக்கும் எந்தவிதமான தகுதியுமில்லை. எமது உழைப்பை எவருமே சீர்தூக்கிப் பார்க்க முடியாது.
திம்பு கோட்பாடுகள், இலங்கை இந்திய ஒப்பந்தம், அதற்குப் பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக எட்டப்பட்ட தீர்மானங்கள் என பல காணப்படுகின்றன. 1985ஆம் ஆண்டு திம்புக் கோட்டுபாடுகள் இயற்றப்பட்டபோது எமது போராளிகள் 650இற்கு குறைவான போராளிகளே வீரச்சாவடைந்திருந்தனர். 1958, 1983 இன்கலவரங்கள், சுற்றிவளைப்புக்களில் 10ஆயிரத்திற்கும் குறைவான மக்களே சாவைத் தழுவியிருந்தனர். இதற்கான நிவாரணமாகவே அக்கோட்பாடுகள் அமைந்திருக்கின்றன.
தற்போது 30வருடங்கள் கடந்து இவ்வளவு இழப்புக்களை சந்தித்திருக்கும் நிலையில், எமது போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் பின்னோக்கிச் செல்லமுடியாது. எமது தாயகத்திற்கான தீர்வு இந்த மண்ணிலேயே உள்ளது. அதனை நாம் வெளிநாடுகளில் தேடமுடியாது. அதை நோக்கிய பயணமாக எமது தரப்பு செயற்படும்.
கேள்வி :- உங்களுக்கான மக்கள் ஆணை கிடைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவீர்களா?
பதில் :- மக்கள் ஒன்றுபட்ட தமிழ்த் தேசி-யக் கூட்டமைப்புக்கே வாக்க-ளிக்க வேண்டுமென தமிழ்த் தலை-மை-கள் கூறுகின்றார்கள். கடந்த ஐந்து வருடங்களாக கூட்டமைப்பு ஒன்று-பட்டு வலுவான கட்டமைப்பாக மாற-வேண்டும் என்பதற்காக பதிவு செய்யு-மாறு மக்கள் கோரியிருந்தனர். அப்போது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தனர்.
எனினும் எமக்கான ஆணை கிடைக்க-ப்பெறும் பட்சத்தில் தமிழீழ தேசியத் தலை-வரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசி-யக் கூட்டமைப்பை எம்முடன் இணைத்து தமிழர்களின் பேரம்பேசும் சக்தி-யாக புதிய செல்நெறியில் பயணிக்க தயா-ரா-கவுள்ளோம்.
கேள்வி :– ஜனநாயகப் போராளிகள் மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் என்ன?
பதில் : மீள்குடியேற்றம் நிறைவடை-ய-வில்லை, அரசியல் கைதிகள் விடு-விக்க-ப்ப-டவில்லை, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் நாட்டில் 12ஆயிரம் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் அவர்க–ளின் கட்டமைப்புகள் இயங்கி-யவண்ணமுள்ளன. ஆகவே அரசியல் தீர்வை வழங்கி-னால் விடுதலைப்புலிகள் பலம்பெற்று-விடுவார்கள் என்பதால் அதனை வழங்கமுடியாது. இதுவே தென்னி-லங்கையின் நிலைப்பாடு.
தொடர்ந்தும் புலி வருது புலி வருது எனக் கூச்சலிட முடியாது. தமி-ழீழ விடுதலைப்புலிகள் 30வருட ஆயுத-ப்போராட்டத்திலிருந்து ஜனநாயக வழி-யில் மக்களின் இலக்குகளை நோக்கி நகர்த்து-வதற்காக வந்துவிட்டோம். தமிழீழ விடுதலைப்புலிகள் வந்து விட்டார்கள். உரிமைக்காக போராடும் அமைப்பை புனர்வாழ்வின் முகாமிலோ அல்லது சிறை-ச்சாலையிலோ வைத்திருப்பதால் அவர்க-ளின் இலக்குகளை தடுத்து விட்டதாக கருதமுடியாது.
17ஆம் திகதி எமது மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான அரசியல் அங்-கீக-ாரத்தை சிறப்பாக வழங்குவார்கள் என்ற பெருநம்பிக்கை எமக்குள்ளது. நாம் யாழ். மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் பெறுவதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். மக்களுக்காக எவ்வளவு விடயங்களை செய்திருக்கின்றோம். 12ஆயிரம் போராளி-க-ளுக்காக அவர்கள் சொல்லப்போகும் செய்தி-க்காக தீர்க்கமான ஆணையை மக்கள் வழங்க வேண்டும். அதனைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.