ஏப்ரல் 30, 1945. ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி, சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன.
மே 8, 1945. இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
ஆனால், அமெரிக்க கூட்டுப் படையினரிடம் ஜப்பான் சரணடைய மறுக்கவே இரண்டாம் உலகப் போர் பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தது.
இதையடுத்து ஜூலை 26ம் தேதி ஜப்பானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகியவை ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தன.
உடனடியாக சரணடையாவிட்டால் ஜப்பான் மீது அழிவு மிகுந்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது Potsdam Declaration எனப்படும் அந்த எச்சரிக்கை. இதை ஜப்பான் நிராகரித்துவிட்டது.
முன்னதாக 1941ம் ஆண்டில் டிசம்பர் 7ம் தேதி ஹவாய் தீவில் உள்ள தனது பியர்ல் ஹார்பரில் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு ஜப்பான் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றதோடு, நூற்றுக்கணக்கான போர்க் கப்பல்களையும் மூழ்கடித்ததற்கு பதிலடி தருவதில் ஆவேசமாக இருந்தது அமெரிக்கா.
(பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் ஏன் தாக்குதலை நடத்தி அமெரிக்க கப்பற்படையின் பசிபிக் பிரிவையே நீருக்குள் மூழ்கடிக்க வேண்டும்… இந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த அமெரிக்கக் கடற்படை, ஜப்பானின் கடல் வழி வர்த்தகத்தை முடக்கலாம் என்ற சந்தேகம் தான்)
ஜப்பான் மீது உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த அன்றே திட்டமிட்டது. Manhattan Project என்ற பெயரிலான இந்தத் திட்டம் மூலம் தான் உலகிலேயே முதன்முதலாக அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.
இதில் கனடாவும் இங்கிலாந்தும் அமெரிக்காவுக்கு முழு அளவில் உதவின. விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், உளவுப் பிரிவினர், ஆயுத நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ் அணு விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் ஆகியோர் தலைமையில் மிக ரகசியமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நியூமெக்சிகோ பாலைவனத்தில் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடக்க, அணுகுண்டை ஏந்திச் செல்ல வசதியாக போயிங் B-29 Superfortress போர் விமானங்களை மாற்றி வடிவமைக்கும வேலையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
ஆகஸ்ட் 6, 1945. அமெரிக்காவின் மியாமி நகரில் 57 வயதான எனோலா கே தன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க, அவரது பெயர் சூட்டப்பட்ட ஒரு B-29 Superfortress போர் விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை ஏந்தியபடி டினியன் என்ற பசிபிக் தீவில் இருந்து அதிவேகத்தில் கிளம்புகிறது.
அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தது ஏனோலா கேவின் மகனான பைலட் பால் டிபிட்ஸ். இவரது தலைமையிலான டீம் தான் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டைப் போட்டது. விமானத்துக்கு தனது தாயாரின் பெயரை சூட்டியது இவர் தான்.
யுரேனியம் கன்-டைப் அடிப்படையிலான இந்த லிட்டில் பாய் அணுகுண்டு 10 அடி நீளம் கொண்டது. 5 டன் எடை கொண்ட இந்த குண்டு 20,000 டன் டி.என்டி வெடிப்புக்கு சமமானது.
6 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு மேகக் கூட்டங்களில் மாறி மாறி நுழைந்து, வெளியேறி என ஜப்பானை நெருங்கியது எனேலோ கே. ஹிரோஷிமாவை நெருங்க நெருங்க விமானத்தின் பறக்கும் உயரமும் 31,000 அடிக்கு உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமாவில் கோடை காலம். மேகக் கூட்டங்கள் குறைவான இந்த மாதம் தான் அணுகுண்டின் தாக்கத்தை பல மடங்கு அதிகரிக்க உதவும் என்பதால் இந்த நாளை தேர்வு செய்திருந்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்.
ஹிரோஷிமாவை எனோலா கே விமானம் நெருங்கும் வேளையில், அமெரிக்காவின் வானிலை ஆய்வு விமானமான Straight Flush அங்கே தலையைக் காட்டியது.
வானிலை சரியாக இருப்பதாக தகவல் தர வேகமாக முன்னேறியது எனோலா கே. முன்னதாக 1945ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அமெரிக்காவின் B-29 போர் விமானங்கள் ஹிரோஷிமா மீது பறப்பதும், அப்போது ஆரஞ்சு வண்ணத்திலான ‘pumpkins’ எனப்படும் சாதாரண ரக வெடிகுண்டுகளைப் போட்டுவிட்டுப் பறப்பதும் வழக்கமாக இருந்தது.
இதனால் இந்த B-29 ரக அமெரிக்க விமானங்கள் தங்கள் நகருக்கு மேலே பறப்பதையும, ‘pumpkins’ குண்டுகள் விழுவதையும் ஹிரோஷிமா மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட காலம் வந்திருந்தது.
நகர் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தாலும் கூட B-29 போர் விமானங்கள் தங்கள் தலைக்கு மேலே பறந்தால், மக்கள் பங்கர்களுக்குள் ஓடி ஒளிவதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டிருந்தனர்.
இதைத் தான் அமெரிக்காவும் எதிர்பார்த்தது. இதனால் தான் B-29 போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களுக்கு விளையாட்டு காட்டி ஏமாற்றி வந்தது.
காலை 7.30 மணி. ஹிரோஷிமாவில் விழும் வழக்கமான அமெரிக்க போர் விமான குண்டுகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தடுப்புகளை உருவாக்கும் வேலையில் ஜப்பானிய குழந்தைகளும் ஈடுபடுவது வழக்கம்.
பள்ளிக்குச் செல்லும் முன் வழக்கம்போல இந்தப் பணியில் பங்கேற்க 12 வயதான சுமார் 8,000 பிஞ்சுகள் ஹிரோஷிமாவின் மையப் பகுதியில் உள்ள Aioi Bridge பாலம் அருகே கூடுகின்றனர்.
7.50 மணி எல்லோரும் தயாராகுங்கள். அணுகுண்டு வீச்சின் ஒளி கண்ணைப் பறிக்கும். இதனால் அந்த சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். ஒளி அடங்கும் வரை யாரும் அதைக் கழற்றக் கூடாது. கதிர்வீச்சிலிருந்து தப்ப உதவும் உடைகளையும் அணியுங்கள் என உத்தரவிடுகிறார் பைலட் டிபிட்ஸ்.
8.12 ஜெர்மனியில் 60 முறை விமானம் மூலம் குண்டுகளை வீசி அனுபவம் வாய்ந்த மேஜர் தாமஸ் ப்ரீபீ தான் லிட்டில் பாய் குண்டை ஹிரோஷிமா மீது போட வேண்டும்.
தனது டார்கெட்டான Aioi Bridge பாலத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்புகிறார். விமானம் மணிக்கு 420 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி என அறிவிக்கிறார் பைலட். அணுகுண்டை செயல்பட வைத்த தாமஸ் 3 நிமிடங்கள் 43 நொடி என டைமரை செட் செய்கிறார்.
8.15 மணி எனோலா கே விமானத்தின் பாம் கதவுகள் திறக்க, லிட்டில் பாய் அணுகுண்டு கீழே பாய, 43 வினாடிகளை கவுண்ட் டவுன் செய்ய ஆரம்பிக்கிறது எனோலா கே விமானக் குழு. 31,000 அடிக்குக் கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் என பல தரப்பட்ட மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில்… சரியாக தரையிலிருந்து 1,890 அடியை எனோலா கே எட்ட, 43 வினாடிகள் முடிய…
இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மாபெரும் ஒளிப் பிழம்பு. இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்த குண்டு வெடித்த மையப் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை.
அடுத்த சில வினாடிகளில் அணுகுண்டின் ஒளி மறைய, ஹிரோஷிமாவை ஆக்கிரமிக்கிறது கடும் இருளும் புகை மூட்டமும். மயான அமைதி.
அதே நேரத்தில் குண்டுபோட்ட எனோலா கே விமானம் கதிர்வீச்சிலிருந்து தப்ப உயரத்தை அதிகரித்தபடியே, எதிர் திசையில் பறக்க அவர்களையும் விரட்டுகிறது அணுகுண்டு வெடிப்பின் அதிர்வலைகள்.
கீழே குண்டு வெடித்த இடத்திலிருந்து அதன் அதிர்வலைகள் எல்லா பக்கமும் பரவியபடி, வழியில் இருந்த உயிர்கள், கட்டிடங்களை நிர்மூலமாக்க, துணை விமானியான லூயிஸ், நாம் என்ன காரியம் செய்துள்ளோம்.
கீழே என்ன நடக்கிறது. எத்தனை பேரை கொன்று கொண்டிருக்கிறோம் என தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அலற, விமானத்தில் இருந்த அனைவரிடத்திலும் அதே கேள்விகள்.
இப்படி ஒரு சேதமா என தாங்களே வெறித்தபடி வேகமாக அமெரிக்கா நோக்கி திரும்புகிறது எனோலா கே. When ‘little boy’ showed his cruel face to the mankind
இந்த தாக்குதலில் உடனடியாக பஸ்பமானவர்கள் சுமார் 1 லட்சம் பேர். கதிர்வீச்சால் உடல் எரிந்து, தோல் எரிந்து போய், உடல் திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த நாட்களில், வாரங்களில், மாதங்களில் பலியானவர்கள் மேலும் 1 லட்சம் பேர். குண்டுவெடித்ததில் ஏற்பட்ட பயங்கரமான அதிர்வலையில் பல பேரின் கண்கள் அவர்களின் கண் குழிகளில் இருந்து வெளியேறி தொங்கியது தான் மகா கொடூரம்.
10 மணி. நாம் அமெரிக்காவில் தரையிறங்கும்போது ஜப்பான் சரணடைந்திருக்கும் என பேசியபடியே எனோலா கே விமானக் குழுவினர் பறந்து கொண்டிருக்க, ஜப்பான் சரணடைய மறுக்கிறது.
இதையடுத்து அடுத்த 10 நாளில் நாகசாகி நகரிலும் இன்னொரு அணுகுண்டைப் போடுகிறது அமெரிக்கா.
அடுத்த இரு வாரங்களில் செப்டம்பர் 2ம் தேதி அமெரிக்காவிடம் சரணடைகிறது ஜப்பான். ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு போடப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் முடிகின்றன.
When ‘little boy’ showed his cruel face to the mankind இன்று காலை 8.15 மணிக்கு, அணுகுண்டு வெடித்த அதே நேரம், இன்று ஒட்டுமொத்த ஜப்பானிய மக்களும் 2 நிமிடம் மெளனமாய் நின்று மறைந்த அந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஹிரோஷிமாவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ”உலகிலேயே அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு நாம் தான்.
இதனால் உலகத்தில் அணுகுண்டே இல்லாத நிலையை உருவாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் உள்ள நாடும் நாம் தான்”.
”என் வாழ்விலேய நான் செய்த மிகப் பெரிய தவறு, அணுகுண்டு தயாரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்து போட்டது தான்.
ஜெர்மன் அணுகுண்டு தயாரித்துவிடும் என்ற சந்தேகத்தில் தான் நான் இதைச் செய்து விட்டேன்…” இப்படி மனம் வருந்தியது ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் வேதனை அடைந்த அணுகுண்டு உருவாக காரணமான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஜப்பானும் கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் தான் இருந்தது.
இந் நிலையில் அணுகுண்டு போட்டுத்தான் தான் ஜப்பானை அடக்கியிருக்க முடியும் என்ற சூழல் அப்போது இல்லை. ஆனாலும் அணுகுண்டை வீசியது அமெரிக்கா.
ரூஸ்வெல்ட், ஹாரி ட்ரூமென் ஆகியோர் காலத்தில் கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வில்லியம் லே, ”போரில் ஈடுபடாத குழந்தைகளையும் பெண்களையும் பஸ்மாக்கித் தான் வெற்றி பெற முடியும் என்றால், அந்த வெற்றி எனக்குத் தேவையில்லை”