சிறிலங்காவின் 15வது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் என்றுமில்லாத வகையில் சிங்கள, தமிழ் கட்சிகளின் மிக முக்கிய பேசுபொருளாக தமிழீழ விடுதலைப்புலிகளே காணப்படுகின்றனர்.
இது தனியே இலங்கைத் தீவில் மட்டுமல்லாது இத்தீவை மையப்படுத்திய பூகோள சக்திகளினதும் பேசு பொருளாகவுமுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அந்த வகையிலேயே அமெரிக்காவின் 2014ம் ஆண்டுக்கான விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பற்றிய அறிவிப்பும் அண்மையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் விடுதலைப்புலி உறுப்பினர்களின் கைது தொடர்பான அறிவிப்பும் வெளிவந்துள்ளன.
இதன் மூலம் இவர்கள் இலங்கைத் தீவை மையப்படுத்திய நகர்வில் தாங்கள் ஓரு தவிர்க்கப்பட முடியாத சக்திகளாக இருப்பதையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் பங்காளர்களாக தொடர்ந்திருப்போம் என்பதைனயும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மகிந்த தலைமையிலான சிங்களக் கட்சியோ வடக்கில் விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெற்று வருவதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தமது பிரதான தேர்தல் கோசமாக முன்வைத்து வருகின்றனர்.
மறுதரப்பினரோ விடுதலைப்புலிகள் மீள் எழுச்சிபெறாதவண்ணம் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு காரணத்துக்காகவும் வடகிழக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படமாட்டார்கள் எனவும் கூறிவருகின்றனர்.
தமிழ்க் கட்சிகளோ பல்வேறுபட்ட வகையான புதிய புலிகளை உருவாக்கி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் உதயன் பத்திரிகை ஆசிரியரினால் ஜனநாயகப் போராளிகள் என்று முன்னாள் புலிகளைக் கொண்ட அணியொன்று யாழ்.தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் புலம்பெயர் புலிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கிடையே இத்தேர்தலில் எவருக்கு புலிகளின் ஆதரவு உண்டென்பதை நிரூபிப்பதற்கு தமிழ்க்கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களும் கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர்.
ஆக மொத்தில் புலிகள் இல்லாவிடினும் கூட புலிகள் என்ற நாமமே இலங்கைத்தீவின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இன்றளவும் விளங்கிவருகின்றது.
இது யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழியை நினைவுபடுத்தும் அதேசமயம், எந்தளவுக்கு புலிகள் மிகப்பலமான ஒரு மக்கள் சக்தியை தமிழ்மக்களின் போராட்டத்தின்பால் கட்டியெழுப்பியிருந்தனர் என்ற உண்மையை உணர்த்தி நிற்கிறது.
அந்த மக்கள் சக்தியின் ஆதிக்கம் இலங்கைத் தீவுக்குள் மட்டுமன்றி தமிழ் மக்கள் பரந்து வாழும் உலகப்பரப்பெங்கும் வியாபித்துள்ளது. சிங்களதேசம் புலிகளை அழித்திருந்தாலும் கூட இந்த மக்கள் சக்தியைக் கண்டு இன்றளவும் அது அச்சப்படுகிறது என்பதை இலங்கை தேர்தல் களம் நிரூபித்திருக்கிறது.
அன்று தந்தை செல்வா வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கூடாக தமிழீழ தனியரசு என்ற கோட்பாட்டை மக்கள் மத்தியில் விதைத்திருந்தார்.
ஆனால் அவராலோ அல்லது அவர்பின் வந்த தமிழ் தலைவர்களாளோ அந்த இலக்கை எப்படி அடையப்படமுடியுமென்பதையோ அல்லது அதை நோக்கிய ஒரு அரசியல் செயற்பாட்டையோ கட்டமுடியவில்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே தந்தை செல்வாவின் கனவுக்கு செயல்வடிவம் கொடுத்து 25 வருடங்களுக்கு மேல் இலங்கைத்தீவில் ஒரு தமிழீழத் தனியரசை ஏற்படுத்தயிருந்தது.
இதை ஏன் புலிகளால் மட்டும் சாதித்துக்காட்ட முடிந்தது என்று பார்த்தால், அவர்கள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி மக்கள் சக்தியை போராட்டத்தின்பால் திருப்பியிருந்தமையே ஆகும்.
இதனால் தான், புலிகள் இல்லாதபோதும் இன்றளவும் அந்த மக்ள சக்தி தமிழ்மக்களின் போராட்டத்தை அணையாமல் பாதுகாத்து வருகிறது.
தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பலகட்சிகளும் வேட்பாளர்களும் இந்த மக்கள் சக்தியை குறிவைத்து தமது சுயநல அரசியலுக்காக தேர்தல் கால ‘புலி’ கோசங்களை உரத்து உரைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில் சிலரோ இந்த மக்கள் சக்தியையும் அதன் போராட்ட இலக்கையும் சிதைக்கும் சிங்கள பேரினவாதத்தினதும் சில பூகோள அரசியல் சக்திகளினதும் மறைமுகத்திட்டமிடலின் முகவர்களாக உள்ளனர்.
இவர்களை சாதாரண பொது மக்களால் வேறுபடுத்தி கண்டறிவது கடினம். ஏனெனில் அவர்கள் மக்கள் மத்தியில் கதைப்பது ஒன்றாகவும் செயற்படுவது வேறோன்றாகவும் இருக்கிறது. இவர்களின் தொடர் செயற்பாடுகளை அவதானித்து அறிந்தாலேயன்றி இவர்களை இலகுவில் அடையாளம் காணவோ அல்லது இவர்களா இவர்கள் என்று நம்பவோ முடியாது.
வரலாற்றை சிறிதளவு பின்னோக்கிப் பார்த்தோமானால் விடுதலைப்புலிகள் தமது இலக்கை அடைவதற்கு ஒரே குறிக்கோளில் பயணிப்பவர்களை அரவணைத்தும் வேறு சிலரை அவர்களின் உண்மை முகம் தெரிந்திருந்தும் தமது போராட்டத்தின் தேவைகருதி அக்காலகட்டத் சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தியிருந்தனர்.
அந்த வகையில் அவர்களால் அரவணைக்கப்பட்டவர்களாக மாமனிதர்களான பேராசிரியர் அ.துரைராஜா, குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், ஊடகவியலாளர் சிவராம் போன்றவர்களைக் குறிப்பிட்டுக் கூறமுடியும். இவர்கள் தமது உயிரைப் பயணம் வைத்து தமிழ் தேசியத்துக்காக உழைத்திருந்தார்கள்.
தேவைகருதி பயன்படுத்தப்பட்டவர்கள் வரிசையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தலைவர் ஆனந்தசங்கரி , இந்நாள் தலைவர் சம்பந்தன் மற்றும் பல தமிழ்க்கட்சிகளின் தலைவர்களுடன முன்னாள் உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனையும் குறிப்பிட்டுக் கூறமுடியும்.
இன்று சிலரால் கூறப்படுவதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புலிகளால் உருவாக்கப்படவில்லை. புலிகள் தமக்கான அரசியல் பிரிவொன்றை தனியாக வைத்திருந்ததுடன் அவர்கள் தமக்கான உண்மையான அரசியல் செயற்பாட்டுக்கான பிரதியீடாக அல்லது முகவர்களாக எவரையும் அமைப்புக்கு வெளியே வைத்திருந்ததுமில்லை.
1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடமாகாணத்தின் 80% ஆன பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போதிலும் சிறிலங்காவானது போலியான ஓரு தேர்தலை நடத்தியிருந்தது.
அதில் யாழ் மாவட்டத் தேர்தல் தொகுதியில் EPDP என்ற துணை ஆயுதக்குழு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத தீவுப்பகுதியில் களமிறக்கப்பட்டு வெறுமனே 10000 வாக்குகளுடன் யாழ் மாவட்டத் தொகுதிக்கான 9 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.
சிறிலங்கா அரசானது அந்த 9 பேரையும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்றவாறு சர்வதேசரீதியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது.
1995ல் யாழ் மாவட்டம் சிறிலங்கா இராணுவத்தால் முழுவதுமாக கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து தீவுப்பகுதிக்குள் செயற்பட்டுக்கொண்டிருந்த துணை ஆயுதக்குழுவான EPDP யாழ் குடாநாடு முழுவதும் தனது படுகொலைகளையும், கடத்தல், கப்பம் போன்றவற்றையும் கட்டவிழ்த்துவிட்டிருந்தது .
மக்கள் ஒரு பக்கம் இராணுவத்தாலும் மறுபக்கம் துணை ஆயுதக்குழுவாலும் நசுக்கப்பட்டு ஒரு அவல வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
பெருமளவான மக்கள் குடாநாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் 2000ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் ஒவ்வொரு தேர்தல்களையும் புறக்கணித்தே வந்திருந்தனர்.
அதேநிலைப்பாட்டைத்தான் இத் தேர்தலிலும் கடைப்பிடித்திருந்தனர். கொடூரமான அடக்கு முறைக்குள் வாழ்ந்த யாழ் குடாநாட்டு மக்களுக்கு தமது அவலங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
அந்நிலையில் குடாநாட்டுத் தேர்தல்களத்தில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி (த.வி.கூ), அப்பாத்துரை விநாயகமூர்த்தி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (அ.இ.த.கா), ஐக்கிய தேசியக் கட்சியில் (UNP) மகேஸ்வரனும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், ஐக்கிய தேசிய கட்சி (மகேஸ்வரன் ) 1 ஆசனத்தையும், துணை ஆயுதக்குழுவான EPDP மிகமோசமான தேர்தல் வன்முறைகளுடன் 4 ஆசனங்களையும் மிகவும் குறைந்த (21.3%) வாக்களிப்பு வீதத்துடன் பெற்றுக்கொண்டிருந்தன.
இந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸம் இணைந்து போட்டியிட்டிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவுப்பகுதிக்கான வேட்பாளர் கடும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபின் விலகியிருந்திருக்காவிடால் மேலதிகமாக 2 ஆசனங்களை அத்தேர்தலில் இவ்விரு கட்சிகளும் பெற்றிருந்திருக்க முடியும்.
இதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்துக்கான எண்ணக்கருவை தமிழ் புத்திஜீவிகளிடையே ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் சந்திரிகாவினால் ரணில் தலைமையிலான அரசு ஒரு வருட ஆயுளுடன் கலைக்கப்பட்டு 2001ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தான் ஊடகவியலாளர் சிவராம் மற்றும் சிலரின் முயற்சிகளுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், TELO, EPRLF ஆகிய கட்சிகளை இணைத்து புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இக்கூட்டமைப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு குடாநாட்டுத் தேர்தல் தொகுதியில் 6 (மொத்த வாக்களிப்பு 31.14%) ஆசனங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 15 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.
இத்தேர்தல் சமாதான காலகட்டத்தில் நடைபெற்றிருந்தபடியால் 2000 ஆண்டில் கடைப்பிடித்திருந்தது போன்று எந்த ஒரு தேர்தல் பகிஸ்கரிப்பு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்துநின்றனர். ஆனால், அவர்களின் செயற்பாடுகள் கூட்டமைப்புக்கு மக்களை வாக்களிக்க தூண்டும் வகையில் அமைந்திருந்தன.
பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செயற்படும் விதத்தில் அதிருப்தி கொண்ட விடுதலைப்புலிகள் அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆனந்தசங்கரியை அகற்றும்படி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் ஆனந்தசங்கரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு அந்த இடத்திற்கு திரு.சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்தசங்கரி விட்டுக்கொடுக்க முன்வராமையினால் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பும் ஆனந்தசங்கரிக்கு சார்பாகவே கிடைத்திருந்தது.
விடுதலைப்புலிகளும் ஆனந்தசங்கரியின் நடவடிக்கையைத் தொடர்ந்து விழிப்படைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுச் செயற்பாட்டையும் கண்காணிக்கும் ஒரு முடிவை எடுத்து அவர்கள் எப்படியான ஒரு அரசியல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்க அவர்களை அடிக்கடி வன்னிக்கு அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுவந்தனர்.
இதன் பின்னர் ,2004ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு 22ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இந்த பெரும் தேர்தல் வெற்றிக்கு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகளின் முகவர்களாகவே மக்கள் பார்க்கத் தொடங்கியிருந்தமையும் கூட்டமைப்பில் இருந்த சிலர் உண்மையாவே தமிழ் தேசியத்தின்பால் பற்றுவைத்து உயிராபத்துக்களுக்கு மத்தியில் செயற்பட்டமையுமே ஆகும்.
2009 இல் போர் முடிவுக்கு வந்து 2010ல் நடைபெற்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில் திக்குத்தெரியாமல் நின்ற தமிழ்மக்கள் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து 14 பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தனர்.
2000 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றம் பெற்று 2010 ஆம் ஆண்டு தேர்தல் வரை பரிணாம வளர்ச்சிகண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 2010 இன் பின்னர் கூட்டமைப்பு என்ற நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்ப்பாடுகளில் இருந்து செயற்பட தவறி ஒரு கட்சியை மையப்படுத்திய எதேச்சாதிராகப் போக்கில் தமிழ் தேசியம் மீதான உண்மையான பற்றுறுதி மற்றும் அதனை நோக்கிய உண்மையான அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி பரிணாம வீழ்ச்சி அடையத்தொடங்கி இருக்கிறது.
காலம் காலமாக கடைப்பிடித்து வந்த சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தல் அந்நாளை தமிழ் மக்களின் கரிநாளாக அனுஸ்டித்தல் என்ற மரபை தூக்கியெறிந்து 2015ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கலந்துகொண்டிருந்தனர்.
சர்வதேச ரீதியில் சிறிலங்காவுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட நெருக்குவாரங்களை தளர்த்த இரகசியமாக உதவியதுடன் அத்தகைய நெருக்குவாரங்களை ஏற்படுத்தியிருந்த புலம்பெயர் தமிழ் மக்களை ‘புலம்பெயர் புலிகள்’ என்று விமர்சனம் செய்தனர்.
இச்செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு இவர்கள் தமிழ் மக்களுக்காக சிறிலங்காவிடமிருந்து பெற்றுக்கொடுத்ததுதான் என்ன? வெறும் உறுதிமொழிகளை மட்டும் வழங்கி வருகிறார்கள். உலக ஒழுங்கை புரிந்து கொண்டு நட்டு நிலைமையினை புரிந்து கொண்டு தந்திரோபாயமாக தமது அரசியல் இராஜதந்திர செயற்ப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
கடும் போக்கு அரசியல் தான் பயன் தரும் என்று மக்கள் குருட்டுத் தனமாக வலியுருத்தவும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுவன ரீதியான செயற்பாடுகளை புறக்கணித்து மக்கள் பங்குபற்றுதலை புறக்கணித்து மக்களின் உணர்வுகள் மற்றும் தியாகங்களை புறக்கணித்து ஒரு சிலரின் தான்தோறித்தனமான செயற்பாடுகளையும் மேதாவித்தனங்களையும் குருட்டுத்தனமாக நம்புவதற்கு மக்கள் தயாராக இருக்கவில்லை.
கடந்த 5 வருட காலங்களில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ் தேசியத்தை சிங்கள தேசியத்துக்குள் கலந்து “சிறிலங்கன்” என்ற அடையாளத்துக்குள் கரைத்துவிடும் ஆபத்தை கொண்டிருந்ததற்கான தெளிவான தடயங்களை விட்டிருக்கின்றன.
அதனால் தான் தேர்தலுக்காக தமது விஞ்ஞாபனத்தில் ‘சமஷ்டி’, ‘பகிரப்பட்ட இறையான்மை’ , ‘சுயநிர்ணயம்’ என்றெல்லாம் பயன்படுத்தப்பட்ட இவர்களின் வார்த்தைகளை தமிழ் மக்கள் மட்டுமன்றி சில சிங்கள மக்கள் கூட நம்பவில்லை என்பதை சில சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் கேலிச்சித்திரங்களும் காட்டுகின்றன.
இவர்களின் திரைமறைவு செயற்பாடுகளை தெளிவாக புரிந்து கொண்டதனால் ஏற்பட்ட ஒரு அதிருப்தியின் வெளிப்பாடாகவே வடமாகாண முதலமைச்சரின் ‘எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை’ என்ற அறிவிப்பு காணப்படுகிறது. கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி அமையுமோ என்ற அச்சம் அவருக்கு இருப்பதை அவரது அறிவிப்பில் உணர்ந்துகொள்ள முடியும்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பின் நியாயத் தன்மையை அறிவின் பால் புரிந்து தவறுகளை திருத்திக் கொண்டு நிலைமை மோசமையாமல் செயற்படுவோம் என்று சிந்திக்காமல் முதலமைச்சரின் அறிவிப்பால் ஆத்திரம் கொண்ட வழமையான சில முக்கிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் வட மாகாண அவைத் தலைவர் சி. வி. கே . சிவஞானத்தை பார்த்து ‘முதலமைச்சருக்கான களை முகத்தில் தெரிகிறது ‘ என்று கூறும் தமது எதேச்சாதிகார அரசியல் தொடரப்போகிறது என்பதை கட்டுகின்ற செயற்பாடுகளே துரதிஸ்டவசமாக இடம்பெறுகின்றன.
முதலமைச்சர் தனது அறிவிப்பிலே அமையப்போகும் எதிர்கால அரசில் எந்தவித அமைச்சுப்பதவியையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுள்ளவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்யும்படி வேண்டியுள்ளார்.
அவர் ஒரு நீதிபதி அதேநேரம் தன்னை நம்பியுள்ள தமிழ்மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற தலைமைக்குரிய பொறுப்புணர்ச்சியின் காரணமாக இத்தகைய ஒரு அறிவிப்பை விடுத்துள்ளமையை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சட்டத்தரணிகள் சொல்வதைக் காட்டிலும் நீதிபதியின் சொல்லே உண்மையை உரைக்கும். சிந்தித்து வாக்களியுங்கள் என்று கூறியுள்ள முதலமைச்சர் ‘ வாக்களியுங்கள்’ என்று அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு தமிழ் மக்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளமையினை தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .