இலங்கையை சீரழித்த மகிந்த ராஜபக்சேவின் நடவடிக்கைகள் குறித்து தமது சுயசரிதையில் விரிவாக எழுத இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரும் 17-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குருநாகலில் போட்டியிடுகிறார்.
அவருக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் சந்திரிகா பேசியதாவது”
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் பிறந்தேன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இறப்பேன். அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வீட்டில் இருந்தேன்.
மகிந்த ராஜபக்சே தலைமையிலான துஷ்ட சக்திகளினால், அழிவுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசியல் மேடையில் ஏறநேர்ந்தது.
புலிகளுடனான போரை வெற்றி கொண்டவர் என்பதற்காக மட்டும், மகிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதானால் அவருக்கு வாக்களிக்கலாம்.
ஆனால் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் போரில் பங்களித்தவர். போரை வெற்றி கொண்ட உரிமை தமக்கே இருப்பதாக மகிந்த ராஜபக்சே உரிமை கொண்டாட முடியாது.
அந்த உரிமை எனக்கு, ஐக்கிய தேசிய அரசாங்கத்துக்கு, இராணுவத்துக்கும் உள்ளது. நான் அதிபராக இருந்தபோது தான், யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றினேன்.
ஐதேக ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது. ராஜபக்சே அதிபரான பின்னர், வடக்கு. கிழக்கின் எஞ்சிய பகுதிகள் விடுவிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.
இறுதிச் சமரில் மகிந்த ராஜபக்சே அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு சரத் பொன்சேகா பெரும் பங்கு வகித்திருந்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகா சிறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
எனக்குப் பின்னர் அதிபரான மகிந்த ராஜபக்சே நாட்டை எவ்வாறு மோசமாக நடத்தினார் என்பதை, எனது சுயசரித நூலில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு சந்திரிகா கூறியுள்ளார்.