ஒரே நாட்டுக்குள் பிரிக்கப்படாமல் தீர்வு வழங்கப்பட வேண்டும் இதில் புரட்சி எதுவும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று (10.8) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று இந்த நாட்டிலும் சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரியும். அதற்காக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாக சாத்வீக ரீதியாக ஒப்பந்தங்களை செய்தோம் ஒத்துழைப்புகளை வழங்கினோம். ஆனால் அது கைகூடாது விட்டாலும் கூட பெரும்பான்மை தலைவர்களால் அவை பிற்போடப்பட்டது. அனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனை அவர்களுக்கு தெரியும்.

வடக்கு கிழக்கை பொருத்த வரை தமிழ் மக்கள் அந்த பிராந்தியத்திற்கு விசேட அக்கறை கொண்டவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி தந்தை செல்வா கொண்ட கொள்கையின் அடிப்படையில் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தனி தேசிய இனம். அவர்கள் சரித்திர ரீதியாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தைத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இணைந்த வடக்கு கிழக்கு ஓர் அரசியல் அலகாகும். எனினும் நிர்வாக ரீதியாக அது கைகூடியிந்தாலும் கூட எம் மீது காலத்துக்கு காலம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமையினாலும் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அது இன்று முடிவுற்றிருக்கின்றது. அதன் பின்னர் 6 வருடங்கள் ஆகிவிட்டது.

இந் நிலையில் இவ் ஆண்டு ஆரம்பத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் எமது விடயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.

தமிழ் தேசியப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். இதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பல மாற்றங்கள் இடம்பெற்றது.

எனினும் அந்த மாற்றங்கள் போதுமானது அல்ல என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில், சந்திரிக்காவின் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமச்ஙக்வின் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பல்வேறு பாராளுமன்ற குழுக்கள் நிபுணர் குழுக்கள் பல்வேறு அறிக்கைகள் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு ஓர் அரசியல் தீர்வை எடுப்பதற்கு பல் முயற்சிகள் மேற்கொளள்ப்பட்டது.

அவை தொடர்பாக ஓர் சமரசம் ஒருமைப்பாடு இருந்தாலும் கூட அரசியல் சாத்தியத்தின் ஊடாக அவை நிறைவேற்றப்படவில்லை. இந் நிலையிலேயே இத் தேர்தல் இடம்பெறுகின்றது எனவே தான் நாம் கூறுகின்றோம். இத் தேர்தல் மிக முக்கியமானது என்று.

குறிப்பாக இந்த தேர்தல் முடிந்த பின்னர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பது பொதுவான நிலைப்பாடு. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியுள்ளோம். எவ்வாறான தீர்வு தேவை என்பதை தெளிவாகவே கூறியுள்ளோம்.

ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிக்கப்படாமல் நாம் தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் எமது இறமை பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி முறையில் எமக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்று நாம் கேட்டுள்ளோம். இதில் புரட்சி எதுவும் இல்லை. எமது நாட்டில் பல்வேறான இனத்தவர்கள் மதத்தவாகள் இருக்கின்றர்ர்கள்.

அவ்வாறானவர்களும் வாழும் நாட்டில் உள்ள ஆட்சி முறையில் பல நாடுகளில் இருக்கின்றது. அந்த இனத்தை மதத்தை சேர்ந்தவர்கள் அந்த அந்த மாநிலங்களில் ஆட்சி புரிகின்றார்கள். அதன் அடிப்படையிலேயே நாம் எமது தீர்வை கேட்கின்றோம்.

அன்றாடம் நாம் எதிர்கொள்கின்ற கருமங்கள் சம்பந்தமான அதிகாரங்கள் எமது பிராந்தியங்களுக்கு வழங்கப்படவேண்டும். அந்த அதிகாரங்களை கையாண்டு நிறைவேற்றக்கூடிய வகையில் தேவையான பணத்தை வசூல் செய்வதற்கு உதவிகள் பெறுவதற்கான அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.

மகிந்த ராஜபக்ச காலத்தில் எமது மக்களுக்க தேவையான கருமங்களை நிறைவேற்றுவதற்கு விருப்பம் இருக்க வில்லை. அவர்களுக்கு இருந்த ஒரேயொரு நோக்கம் எமது மக்கள் மீது துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்து மக்களை வெறுப்படைய செய்ய வேண்டுமென்பதாகவே இருந்தது.

புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் எமது பிரச்சனைகளை தீர்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் அரசாங்கத்துடன் பேசி எமது கருமங்களை செய்யக்கூடியதாக திட்டங்களை தீட்டி எமது மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சனையை நிதானமாக கையாண்டதன் பின்னர் தமிழ் தேசிய்ககூட்டமைப்பு இந்த நாட்டிலும் சாவதேச சமூகத்தின் மத்தியிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என்று பல நாடுகள் கூறுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வை காணுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு கூறுகின்றது. இந் நிலையில் வேறு எந்த சக்தியும் அந்த அங்கீகாரத்தை பெறவில்லை.

பலரும் பலதை கூறலாம். ஆனால் அவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் என்ன தொடர்பு?, சர்வதேச தலைவர்கள் இவர்களை சந்திக்கின்றார்களா? அல்லது வெளிநாடுகளுக்கு இவர்கள் செல்கின்றபோது சர்வதேச தலைவர்களை சந்திக்கின்றார்களா?, அல்லது இந்த நாட்டிலும் கூடி எவருடனுமாவது தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்துகின்றார்களா? ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply