சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு வீதி விபத்து ஒன்றில் மரணமானதாக கூறப்பட்ட வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து, சட்ட மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கொலை, தாஜுதீன் மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காதல் முரண்பாடுகளினால் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர்களின் மோதலுக்கு காரணமான, யசாரா அபேநாயக்க என்ற அந்தப் பெண், முன்னர் ராஜபக்சவினரால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றியவர்.

தாஜுதீன் கொலையை அடுத்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் அவர் அவுஸ்ரேலியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் ஒரு இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் அவர் சிறிலங்காவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார்.

யசாரா அபேநாயக்க மீதான முக்கோணக் காதலே தாஜுதீன் கொலைக்கான காரணம் எனக் கருதும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, தாஜுதீனை தனக்குத் தெரியாது என்றும் அரை ஒருபோதும் பார்த்ததேயில்லை என்றும் யசாரா அபேநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply