2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா?
20 ஆசனங்கள் கிடைக்கப்பெற்று 2016 இற்குள் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற முடியாது விட்டால் பதவி துறப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கத் தயாரா என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் யாழ். தேர்தல் மாவட்ட தலைமை வேட்பாளருமான என்.வித்தியாதரன்
கேள்வியெழுப்பியுள்ளார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி :– விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை ஒன்றிணைந்த விடயம் குறித்து கூட்டமைப்பின் தலைவருக்கு கூறயிருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்களே. ஆனால் அதனை அவர் நிராகரித்துள்ளாரே?
பதில்:– முன்னாள் விடுதலைப் புலிகளை ஒன்றிணைத்து ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் எமது நடவடிக்கை திடீரென ஆரம்பிக்கப்பட்டதல்ல.
அது ஒரு வருடத்துக்கு முந்திய முயற்சி. அது குறித்து நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். இவ்விடயம் குறித்து அவ்வப்போது நான் சம்பந்தனை சந்திக்கும் போது பல தடவைகள் அவரிடம் கூறியிருக்கின்றேன்.
ஜூலை முதல் வாரத்தில் வவுனியாவில் சம்பந்தனோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை நாம் சந்தித்தபோது, புலிகளை ஒன்றிணைக்கும் உங்கள் முயற்சி குறித்து நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் நீங்கள் குறிப்பிட்டபோது நான் அதனை எதிர்த்தேனா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். அது வீடியோ ஒளிப்பதிவாகவும் செய்தியாளர்களிடம் உள்ளது.
இந்த முயற்சியைக் கடந்த வருடம் நான் ஆரம்பித்தபோது அது குறித்து அப்போதிருந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷவினால் நேரடியாக அழைத்து விசாரிக்கப்பட்டேன்.
அந்த சந்திப்பு நடந்து சில தினங்களுக்கு உள்ளேயே சம்பந்னைச் சந்தித்து அது பற்றிய தகவலைக் கூறியிருந்தேன்.
கோட்டாபயவுடனான சந்திப்பின் முடிவில் நான் அவரிடம் ஒரு கேள்வி எழுப்பினேன். ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு உங்கள் தரப்புத் தயாராகி வருவதாக அறிகிறோம்.
அத்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும்…? என்று கேட்டேன். அவர் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்.
அப்படி நடந்தால்… அதன் பின் குழப்பம் அல்லவா…? என்றார். இந்த விடயத்தையும் நான் அப்படியே சம்பந்தனிடம் கூறினேன். அப்படியா என்று குறிப்பிட்டு, கோட்டாபயவின் பதிலை இரண்டாம் தடவையும் என்னிடம் சம்பந்தன் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
ஆகவே, முன்னாள் புலிகளை ஒன்றிணைத்து நாங்கள் ஒரு கட்சி தொடங்குகின்றமை பற்றி தமக்கு எதுவும் முன்னர் தெரிவிக்கப்படவில்லை என்று சம்பந்தன் கூற மாட்டார் என நம்புகிறேன்.
மாவை, சுமந்திரனுக்கும் கூட அவ்வப்போது இது குறித்துக் கூறி வந்திருக்கிறேன். விடுதலைப் புலிகளை தமிழ்க் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது அவசியமே என்று சாரப்படவே சுமந்திரன் எப்போதும் கருத்து வெளியிட்டு வந்தார்.
எனினும் வவுனியாவில் தமிழ்க் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களை நாம் சந்தித்தபோது அங்கு சுமந்திரன் பிரசன்னமாகியிருக்காமை துரதிர்ஷ்டமே.
கேள்வி:- 2016இற்குள் தீர்வை எட்டுவதற்கு கூட்டமைப்புக்கு ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு கோரியுள்ளனரே?
பதில்:- இருபது ஆசனங்களைத் தந்தால் 2016 இல் தீர்வு என்று மந்திரத்தில் மாங்காய் பறிக்கும் கதை பேசுகிறார் சம்பந்தன். ஆனால் இந்தக் கருத்தை சுமந்திரனோ, மாவையோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களோ வழிமொழிந்து கூறவில்லை.
அவ்விடயம் குறித்து அவர்கள் மௌனமே சாதிக்கிறார்கள். அதற்குக் காரணம் உண்டு. இன்னும் ஒன்றேகால் வருடத்துக்குள் 2016 முடிந்து விடும். தென்னிலங்கை அரசியல் பிளவுண்டு நிற்கும் இந்தச் சூழ்நிலையில் 2016 இற்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற சம்பந்தனின் சூளுரை வெறும் வாய்ச்சவாடலே.
இன்னொரு தடவை பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய தேவையோ, வாய்ப்போ, கட்டாயமோ தனக்கு வராது என வயதில் மூத்த சம்பந்தன் கருதலாம்.
ஆனால் தங்களுக்கு அந்தக் கட்டாயம் உள்ளது என்பது ஏனைய கூட்டமைப்புத் தலைவர்களுக்கு நன்கு தெரியும். எனவே சம்பந்தனின் சூளுரையை வழிமொழிந்தால் ஒன்றேகால் ஆண்டுகளுக்குப் பின்னர் தாங்கள் முக்காடு போட்டுக் கொண்டுதான் மக்கள் முன்செல்ல வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொண்டு வருகின்ற நிலையில் நீங்கள் எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றீர்கள்?
பதில்:- 1977 இல் எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்தில் ஒரு மே தினக் கூட்டத்தில் பேசும்போது அடுத்த மே தினம் தமிழீழத்தில் என்று அறிவித்து தமிழ் இளைஞர்களுக்கு உசுப்பேத்தினார்.
இப்போது சம்பந்தன் தமது வழமையான வாக்குச் சுரண்டலுக்கு அதே பாணியில் 2016 இறுதிக்குள் தீர்வு என்று உசுப்பேத்துகிறார். அவ்வளவே.
தீர்வைப் பெறுவதற்கு மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. ஒன்று, தென்னிலங்கை தானாகப் பார்த்துத் தருவது. அது நடக்கவே நடக்காது. இரண்டாவது, நாமாகப் பிடுங்கி எடுப்பது.
அது 2009 மேயுடன் சாத்தியமற்றதாகி விட்டது. மூன்றாவது – சர்வதேசம் பெற்றுத் தருவது. 2009 இல் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய பேரவலம் நடந்தபோது வாய் திறவாத சர்வதேசம் தரும் என்று காத்திருப்பது முட்டாள்தனமானது.
அந்த முட்டாள்தன விடயத்தில்தான் முழுதாகத் தங்கியிருக்கின்றது கூட்டமைப்பு. அது சரிவரும் என்று காத்திருப்பது இலவு காத்த கிளியின் கதையாகி விடலாம்.
ஆகவே நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். 2016 டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தராவிட்டால் எங்கள் தரப்பில் பாராமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எல்லாம் 2017 ஜனவரி முதலாம் திகதி எங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்து, அந்தப் பதவிகளை வறிதாக்கிவிட்டுச் செல்வோம் என்று பகிரங்கமாக இப்போதே அவரால் அறிவிக்க முடியுமா?
கேள்வி:- அப்படியானால் நிரந்தர அரசியல் தீர்வை எங்ஙனம் பெறுவது?
பதில்:- இந்த மூன்று விடயங்களையும் ஒருங்கிணைந்த மார்க்கம் உண்டு. அது அஹிம்சை வழியில், எம்மை வருத்தி, ஈகம் செய்து, உச்ச பட்ச தியாகம் புரிந்து – தென்னிலங்கையை திசை திருப்புவது, தென்னிலங்கையிடமிருந்து அஹிம்சை ஆயுதத்தால் பிடுங்குவது, சர்வதேசத்தின் பார்வையையும் கருத்தையும் எமது அழுத்தம் மூலம் எமது பக்கம் விழ வைப்பது.
அதைச் செய்வதற்கு காந்திகள், நெல்சன் மண்டேலாக்கள், மார்ட்டின் லூதர் கிங்குகள் தேவை. அவர்கள் எல்லோருமே எமது போராளிகள் மத்தியிலேயே தாராளமாகவே பொதிந்து கிடக்கிறார்கள்.
காந்தி தேசத்துக்கே காந்தீயம் போதித்த தியாகி திலீபனாகட்டும், அன்னை பூபதியாகட்டும் எமது இயக்கத் தரப்புகளிடம் இருந்துதான் வந்தார்கள்.
நெல்சன் மண்டேலா போல பல பத்தாண்டுகள் சிறை இருந்த செம்மல்கள் எங்கள் போராளிகள் மத்தியிலேயே உள்ளனர்.
மார்ட்டின் லூதர் கிங் போல தமது கொள்கைக்காக தங்கள் உதிரத்தையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள் நமது போராளிகளிடையே நிறையவே உள்ளனர்.
ஆகவே எங்கள் உரிமைக்கான, தீர்வுக்கான, விடுதலைக்கான அஹிம்சைப் போராட்டத்தையும் அதிர்வுள்ள வகையில் முன்னெடுக்கும் நம்பிக்கைக் கீற்று ஜனநாயகப் போராளிகள் மத்தியிலிருந்து தான் வர முடியும் என்பதே இன்றைய அரசியல் யதார்த்தம். அதனைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- தாங்கள் சார்ந்துள்ள அமைப்பினர் தேர்தலில் களமிறக்கப்பட்டமைக்கு பல்வேறு பின்னணிகள் கூறப்படுகின்றனவே?
பதில்:- நாங்கள் ராஜபக் ஷவின் வழிநடத்தலில் இயங்கும் புலனாய்வாளர்களினால் களத்தில் இறக்கப்பட்டவர்கள் என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்.
கூட்டமைப்பை உடைப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவினால் அனுப்பப்பட்டவர்கள் என்-கிறார் முன்னாள் எம்.பி. சிறீதரன். வேறு சில கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எம்மை இந்தி-யாவின் ஆட்கள், இந்திய புலனாய்வு அமை-ப்பான றோ வின் கைக்கூலிகள் என்று கதை பரப்பு-கின்றனர்.
மக்கள் மத்தியில் முன்னாள் போராளிகளுக்கு இருக்கும் அபிமானத்தை, ஆத-ரவை, முறியடிப்பதற்கு இயலாமல் திணறும் எதிர-ணியினர் நட-த்தும் விஷமத்தனமான, ஆதாரம் ஏது-மற்ற பொய்ப் பிரசாரமே இது.