தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளரும் ,தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி தமிழ்க் கலவன் பாடசாலைக்குக் இன்று காலை குடும்பத்துடன் சென்று பொதுத் தேர்தலுக்கான வாக்கினைப் பதிவு செய்தார்.
தனது வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராசா, எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் வாக்களித்திருக்கிறோம்.
மக்கள் அணிதிரண்டு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எமது இனப்பிரச்சினைக்கு தீர்வினையும் எமது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது அவை தொடர்பிலும் காணாமல் போனோர் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆட்சியமைக்கும் அரசாங்கத்துடன் சுமுகமான தீர்வினை கொண்டு வருவதற்கு நாம் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என்றார் .
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகப் போட்டியிடும் யாழ்- கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது தாயாருடன் கோப்பாயிலுள்ள பாடசாலையொன்றில் வாக்களித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்- கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் ஈ.சரவணபவன் இன்று காலை 7.45 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
சிறீதரன் கிளிநொச்சியில் தனது சொந்தக் கிராமத்தில் வாக்களிப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தனது சொந்த ஊரான கிளிநொச்சி, வட்டக்கச்சி, மாயவனூரிலுள்ள கிளி/மாயவனூர் வித்தியாலயம் வாக்களிப்பு நிலையத்திற்கு தனது பாரியாருடன் சென்று இன்று காலை 7.10 மணியளவில் வாக்களித்துள்ளார்.
தற்போதைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று தமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதற்காக வாக்களித்து வருகின்றார்கள்.