பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின் னர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் இணையங்களில் பரபரப்பாக செய்திகள் உலாவின.
சமூக வலைத்தளங்களில் இதுபற்றிய செய்திகள் இன்னும் சூடாகவே விவாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது.
முகநூலில் ‘முதலமைச்சரைக் காப் போம்’ என்ற ஒரு தளம் கூட உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர், இந்தப் பிரசாரங் கள் முன்னெடுக்கப்பட்ட முறை ஒரு திட்டமிட்ட ஒழுங்கிற்கு கீழ் முறைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவது நடைமுறைச் சாத்தியமா? அதற்கு சட்டத்தில் இடமுள்ளதா?
இதுபற்றியெல்லாம் யோசிக்காமலேயே இந்தச் செய்தி பெரிதும் பரப்பப்பட்டது.
எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பெரும் பிளவு ஒன்றை ஏற்படுத்துவது தான் இதன் அடிப்படை நோக்கம் என்பதை சமூக வலைத்தளப் பிரசாரங்களில் இருந்து உணர முடிந்தது.
இந்தப் பிரசாரங்களில் முதலமைச்சருக்கு எந்தளவுக்கு உடன்பாடு இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ அவரும் அதற்குத் துணைபோயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவது சாத்தியமா என்ற கேள்விக்கு முதலில் விடை தேட லாம்.
முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த- வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா.
13ஆவது திருத்தச்சட்டத்தில் முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அது உண்மையே. 13ஆவது திருத்தச்சட்டத்தில், ஆளுநரின் நியமனம், அவரது பொறுப்புகள், கடமைகள், அவ ரைப் பதவி நீக்கும் முறைகள் எல்லாமே குறிப்பிடப்பட்டிருந்தாலும், முதலமைச் சர் ஒருவரை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அகற்றுவது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
13ஆவது திருத்தச்சட்டம் ஆளுநரையே வலுவானவராக வைத்திருக்கிறதேயன்றி, முதலமைச்சரை அல்ல. முதலமைச்சரை வெறும் பொம்மையாக வைத்திருப்பதால் தான், அதுபற்றிக் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
மாகாணசபைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது தொடர்பான வழிமுறைகள் ஏதும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆனாலும், மாகாணசபைக் கூட்டமொன்றில் அதுபற்றிய ஒரு முன்மொழிவை சமர்ப்பித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற எந்த தடையும் இருக்காது என்றே தெரிகிறது.
பொதுவான ஜனநாயக முறையில் பெரும்பான்மையோரின் நம்பிக்கை யைப் பெற்ற ஒருவர் தான் பொறுப்பில் இருக்க முடியும்.
அந்த வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படலாம். ஆனால், அதை வைத்து முதலமைச்சரின் பதவியைப் பறிக்க முடியாது.
அதேவேளை, ஆளுநர் ஒருவர் நினைத்தால், பெரும்பான்மை பலம் உள்ள வேறொருவரை முதலமைச்சராக நியமிக்க முடியும்.
அதற்கு உதாரணம், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, ஊவா மாகாண முதலமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ இருந்த போதே, ஆளுநர் முன்பாக பெரும்பான்மையை நிரூபித்து, அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார் ஹரீன் பெர்னாண்டோ.
அதற்கு எதிராக சசீந்திர ராஜபக் ஷ உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அடிப்படை உரிமை வழக்குகள் கூட தள்ளுபடி செய்யப்பட்டன.
இதன்மூலம், பெரும்பான்மை ஆதரவை இழந்த முதலமைச்சர் ஒருவருக்குப் பதிலாக- அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்யாமலேயே, மற்றொருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என்பதற்கு சட்டஅங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால், அதற்கு ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும்.
வடக்கு மாகாண ஆளுநராக இருக்கும் பாலிஹக்கார இத்தகையதொரு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பாரா? என்பது சந்தேகம்.
ஆனால், இவற்றுக்கு முன்னர், வடக்கு மாகாணசபையில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அதைவிட முக்கியம், இன்னொருவரை முதலமைச்சராக நியமிக்க இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள வடக்கு மாகாணசபையின் 30 உறுப்பினர்களும், இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏற்கனவே அவைத்தலைவர், உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள், தமக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கு வாய்ப்பில்லை.
அப்படியொரு சூழல் ஏற்பட்டாலும் கூட அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தால், அதற்கு இணக்கப்பாடு ஏற்படும் சூழல் கூட்டமைப்புக்குள் ஏற்படுமா? என்பதும் சந்தேகம்.
இப்படியான நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்கம் செய்யும் முயற்சி என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.
அத்துடன் தற்போதுள்ள சூழலில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்குவதற்கான ஒரு நகர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கத் துணியாது.
அது ஏற்கனவே இருந்து வரும் விரிசலை இன்னும் வலுப்படுத்தி விடும் என்ற உண்மை கூட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரனை வெளியேற்றும் ஒரு காரியத்தை கூட்டமைப்பு முன்னெடுக்குமானால், அதனை விட மிகப்பெரிய முட்டாள்தனமாக செயல் வேறேதும் இருக்க முடியாது.
ஏனென்றால், அவருக்கு உள்ள செல்வாக்கும், அண்மையில் அவருக்கு திடீரென அதிகரித்துள்ள ஆதரவும், பின்புலமும், ஒட்டுமொத்த தமிழர் தரப்புக்குள்ளேயும் தெளிவான பிளவுகளை ஏற்படுத்தி விடும்.
அதைவிட, யாழ்ப்பாணத்தில் 132, 000 விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற அடிப்படையையும் மறந்து விடலாகாது.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஒன்று ஏற்பட்டால், அவரை அரவணைத் துக் கொள்ளவும், ஆதரவு கொடுக்கவும், அவரை வைத்து அரசியல் சவாரி செய்யவும் இன்னொரு தரப்புக் காத்திருக்கிறது. இந்தநிலையில், விக்னேஸ்வரன் விவகாரத்தில் பொறுமையுடன் கையாள வேண்டிய அவசியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது.
அந்தப் பொறுமை கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இருக்கும் என்றே கருதப்படுகிறது,
இப்படியான நிலையில், விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது வெறும், நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.
எனினும், இப்படியொரு செய்தி அடிப்படை ஆதாரம் இல்லாமல் புகையத் தொடங்கியுள்ளது என்றால், இதன் ஊடாக ஏதோ ஒரு தரப்பு நன்மை அடையத் துடிக்கிறது என்பதை உணர முடிகிறது.
முகநூலில் தனிக்கணக்குத் திறந்து பிரசாரம் முன்னெடுக்கப்படும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகி விட்டதாகத் தெரியவில்லை.
ஆனால், இத்தகைய பிரசாரத்தின் ஊடாக, தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், கூட்டமைப்பை பலவீனப்படுத்தி பிளவுபடுத்தவுமே, முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் தனது முதலாவது அறிக்கையில், சில தெளிவற்ற விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், தாம் தேர்தல் முடியும் வரை எதையும் பேசாமல் இருக்கப் போவதாக கூறியிருந்தார்.
அடுத்த நாளே மற்றொரு நீண்ட அறிக்கை மூலம், தான் நடுநிலையாக இருக்கப் போவதாக கூறிக் கொண்டு, கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை சுட்டிக்காட்டியிருந் தார்.
நடுநிலை என்பதற்கு அப்பால் சென்று- இரண்டாவது அறிக்கையை வெளியிட்டதும், தேர்தல் முடியும் வரை பேசாமல் இருக்கப் போவதாக கூறிவிட்டு, இரண்டாவது அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பியதும், முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில், முரண்பாடான விடயங்களாகவே இருந்தன.
இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களுக்கு நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும், அதை அவர் கள் பகிரங்கமாக வெளிப்படுத்தாவிடி னும், அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக இன்னொரு தரப்பு காத்திருக்கும் நிலையில், அவர்களால் இதனை ஜீரணிக்க முடியாது.
அதற்காக கூட்டமைப்புத் தலைவர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் அணுகிய முறைகள் எல்லாமே சரியானவை என்றும் கூற முடியாது.
எல்லாத் தரப்பிலும் தப்பும் தவறுகளும் இருப்பதை மக்கள் உணர்கிறார்கள்.
இந்தநிலையில், தேர்தலுக்குப் பின் னர், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர் காலம் என்னவாகப் போகிறதோ என்ற கேள்வியும் கவலையும் பலரிடம் தோன் றியிருப்பதை உணர முடிகிறது.
அரசியல் என்பது எப்போதுமே பெரும்பாலானவர்களுக்கு நற்பெயரை தேடித் தரும் ஒன்றாக இருப்பதில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட தான் நீதியரசராக தேடிய நற்பெயர் அரசியலால் பாதிக்கப்படுமே தவிர, உயராது என்று ஆரம்பத்திலேயே கூறியி ருந்தார்.
அது உண்மை என்பதை இப்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
முன்னர் அவர்களை தூற்றியவர்கள் இப்போது போற்றுகிறார்கள். முன்னர் அவரை ஏற்றியவர்கள் இப்போது தூற்றும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு தரப்பினருமே தமிழர்கள் தான்.
ஆக தமிழர்கள் இன்னமும் ஒன்றாக இல்லை- ஓரணியாக இல்லை என்பதை தான் இந்தப் பிளவு காட்டி நிற்கிறது.
தேர்தலிலும் இது எதிரொலிக்கப் போகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.